anuradha nazeer

Tragedy

4.7  

anuradha nazeer

Tragedy

கண் எதிரே காதல் கணவர்

கண் எதிரே காதல் கணவர்

2 mins
59


தாராபுரத்தில் காதல் மனைவி கண் எதிரே அமராவதி ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியானார். இந்த துயர சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-


திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சட்டாம்பட்டியை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் ரஞ்சித்குமார்(வயது 23). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர் கல்பனா(21). துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். ரஞ்சித்குமாரும், கல்பனாவும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

பின்னர் கடந்த மே மாதம் 3-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் இருவரும் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித்குமார் போடிநாயக்கனூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு தனது மனைவியை அழைத்து சென்றார். இருவரும் அங்கு தங்கி விருந்து சாப்பிட்டனர்.

பின்னர் தம்பதி இருவரும் போடிநாயக்கனூரில் இருந்து திண்டுக்கலுக்கு பஸ்சில் வந்தனர். திண்டுக்கல்லில் இருந்து தாராபுரத்துக்கு பஸ் வசதி இல்லாததால் இருவரும் தாராபுரத்துக்கு வந்த ஒரு சரக்கு ஆட்டோவில் ஏறி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் தாராபுரம் அருகே தம்பதியை சரக்கு ஆட்டோ டிரைவர் இறக்கி விட்டு சென்றார்.

அங்கிருந்து தாராபுரம் 3 கிலோ மீட்டர் தூரம். தம்பதி இருவரும் பேசிக்கொண்டே தாராபுரத்துக்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர். தாராபுரம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் செல்லும்போது ஆற்றில் தண்ணீர் ஓடி கொண்டு இருப்பதை பார்த்ததும் இருவரும் குளிக்க ஆசைப்பட்டனர். கல்பனா, கணவரிடம் முதலில் நீங்கள் ஆற்றுக்குள் இறங்குங்கள். பிறகு நான் இறங்குகிறேன் என்று கூறி இருக்கிறார்.

உடனே ஆற்றுக்குள் இறங்கிய ரஞ்சித்குமார் தண்ணீருக்குள் மூழ்கினார். அப்போதுதான் அவர் குளிக்க இறங்கி பகுதி புதை மணல் பகுதி என தெரியவந்தது. ரஞ்சித்குமாரும், கையை அசைத்து காப்பாற்றுமாறு சைகை காட்டினார். தன் கண்முன்னே கணவர் ஆற்றுக்குள் மூழ்கியதை பார்த்து கல்பனா மனம் பதைபதைத்தார். என்ன செய்வது என்று தெரியாமல் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்“ என்று சத்தம் போட்டார்.

கல்பனாவின் அலறல் சத்தம் கேட்டதும் அந்த வழியாக வந்தவர்கள் தாராபுரம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆற்றுக்குள் இறங்கி ரஞ்சித்குமாரை தேடினார்கள். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ரஞ்சித்குமாரை பிணமாக மீட்டனர்.

ரஞ்சித் குமாரின் உடலை பார்த்து கல்பனா கதறி அழுதார். இரு கைகளையும் கல்பனா தலையில் அடித்து கதறி அழுதது அங்கு நின்றிருந்தவர்களின் கண்களையும் குளமாக்கியது. இது பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த தாராபுரம் போலீசார் ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான சில நாட்களில் புதுப்பெண் தனது கண் எதிரே காதல் கணவரை பறி கொடுத்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Rate this content
Log in

Similar tamil story from Tragedy