Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

Deepa Sridharan

Drama Tragedy Fantasy


4.9  

Deepa Sridharan

Drama Tragedy Fantasy


இரவுச்சூரியன் 

இரவுச்சூரியன் 

3 mins 35.8K 3 mins 35.8K


தனிமை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருந்தது. ஜன்னல் கம்பிகளின் நடுவே ஊஞ்சலாடும் மூன்றாம் பிறையைப் போல எஞ்சியிருந்த அவள் உடலில் மிஞ்சியிருந்த காதல், அவள் கண்களில் மிளிர்ந்து கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தன் கூந்தல் வளர்ந்து படர்ந்து விட்டதோ என்ற காலத்தின் நீட்டிப்பை அந்த இரவின் இருட்டு அவளுக்கு உணர்த்துவது போல் தோன்றியது.


அமைதியின் ஆழங்கிணற்றில், கடிகாரத்தின் நொடிமுள் ஏழரைக் கட்டை ஸ்ருதியில் சாதகம் செய்து கொண்டிருந்தது. இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று தூக்கம் ஆசை காட்டி மோசம் செய்து கொண்டிருந்த ஒர் நள்ளிரவு வேளை அது. பனிக்காற்றில் சிலிர்த்துக் கொண்டிருந்த அவள் இமைச்சிறகுகள், மனித முகங்களை வருடி குளிர்காய்ந்து கொண்டிருந்தன.


ஆம் மனிதர்களை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். அவளைப் பொருத்தவரையில் மனிதர்களை சந்தித்து அவர்களை உள்வாங்கிக் கொள்வதும், அவர்களின் ஸ்வரிசத்தை உணர்வதும், அவர்களுடன் கலந்துரையாடுவதும் உணவு, காற்று மற்றும் நீர் போன்ற அடிப்படைத் தேவைகளாக இருந்தது. எனினும், ஏனோ அவர்களின் நிழல் கூட படாமல் பல நாட்கள் கழிந்து போகின்றது அவளின் சமீபத்திய வாழ்நாட்களில்.


அந்நாட்களை அவள் தன் ஆயுட்காலத்தில் சேர்த்துக்கொள்வதேயில்லை. உயிர் சில நேரங்களில் மரணத்தை சுவாசித்து ஜனிக்கும். அந்த அனுபவத்தை, சலுகையை, வாழ்க்கை மனிதனுக்கு அவ்வப்போது வழங்கி விட்டுச் செல்லும். அத்தகைய செயலற்ற நாட்கள் அவை. மனிதன் செயலற்றுக் கிடக்கையில், பெரும்பான்மையான ஆற்றலை அவன் மூளை பயன்படுத்திக்கொள்ளும் போல. அதனால்தான் என்னவோ, அன்றிரவு அவள் மூளை அப்படி ஒரு துடுக்குடன் இயங்கதத்துவங்கியது. மூன்று காலத்தையும் மூன்று வினாடிக்குள் துழாவி விட்டு வரும் திறமை மனித மூளைக்கு எங்கனம் சாத்தியப்பட்டதோ? அவள் தேசம் கடந்து, காலம் கடந்து பல மனித முகங்களை தன் சிறுமூளைக்குள் கிடத்தினாள்.


அத்துனை மனிதர்கள் அவளுடன் இணைக்கப்பட்டிருப்பதை நினைக்கையில் அவளுக்கு சற்றே ஆறுதலாய் இருந்தது. எனினும் தனக்கு மிகவும் பிடித்த விஷயமான மனிதர்களுடன் தன் வாழ்க்கை ஏன் ஒட்டாமல் போகின்றது என்று நினைத்து மனம் கலங்கினாள். அதற்கான காரணங்களை அவள் பட்டியலிடத் துவங்கினாள்.


அவள் மனம் உரைத்த எல்லா காரணங்களும் சரி என்று ஆமோதிப்பது போன்று உச்சு கொட்டியது அவளுடன் வாழும் அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காத வாலறுந்த பல்லி ஒன்று. அவள் வீட்டுச் சுவற்றிலேயே வலம் வந்து கொண்டு, அவளையே நோட்டமிட்டுக் கொண்டிருப்பதாலோ என்னவோ, அவளின் மைன்ட் வாய்ஸ் அதற்கு புரிந்தது போலவே எப்பொழுதம் சத்தம் போடும். அந்த வாலறுந்த பல்லியின் அந்தரங்கப் பிரவேசம் அவளுக்கு அப்படி ஒரு எரிச்சலைத் தந்தது. அதைத் தவிர்த்து விட்டு அவள் மீண்டும் மனித உலகத்திற்குள் கரைந்து போனாள்.


மனிதர்களைப் பிடித்த அவள் மனதிற்கு ஏனோ அவர்களின் உணர்வு நாடகங்கள் பிடிக்கவில்லை. போலித்தனமான உரையாடல்கள் பிடிக்கவில்லை. தன் அடையாளத்தை , எண்ணங்களை, உணர்வுகளை, விரசங்களை, பலவீனங்களை மறைக்க முயலும் கோழைத்தனம் பிடிக்கவில்லை. இந்த வட்டத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மீது அவளுக்கு வெறுப்போ, கோவமோ வருவதில்லை. ஆனால் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் மனப்பக்குவம் அவளிடத்தில் இல்லை. மனப்பக்குவம் என்பது, சுய ஒழுக்கத்துடன் ஒழுக்கமின்மையை மனம் கோணாமல் (தன் மனமும், பிறர் மனமும்) அரவணைத்துச் செல்லும் ஒருவித வித்தை. அதைப் பயிற்சி செய்ய வலுக்கட்டாயமான நிர்பந்தங்களும், பொறுமையும், தேவைப்படுகிறது.


அவளுக்கும் அதுபோன்ற பல நிர்பந்தங்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால் அவள் அதை நிராகரித்துக் கொண்டே வந்தாள் அதற்கான நியாயங்களை மனதில் கூறிக்கொண்டே. தான் இப்படித்தான் என்று தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில் ஒரு மனிதனுக்கு ஏன் இத்தனை அசிங்கம், அச்சம், அவமானம் என்று அவளுக்கு விளங்கவேயில்லை. அதனாலேயே காதல் அவள் வாழ்வில் நிலைக்கவேயில்லை.


அப்படியென்றால் அந்த வட்டத்திற்கு வெளியே வாழும் மனிதர்களை அவள் சந்திக்கவே இல்லையா? ஏன் இல்லை, என்று அவள் நினைத்து முடிப்பதற்குள், பல முகங்கள் இருட்டைக் கிழித்துக்கொண்டு பிரகாசிக்கத் துவங்கின. அவற்றுள் சில முகங்கள் அவள் கண்களை மிளிரச்செய்தன. இன்னும் சில குறிப்பிட்ட முகங்கள் அவள் திறன்பேசியிலிருந்து அவளை ஊடுருவிப் பார்க்கத் துவங்கின. கூடவே வாலறுந்த பல்லியும் அவளை ஊடுருவியது. நானும் அந்த வட்டத்திற்குள் இல்லையே பின்பு ஏன் என்னை உனக்குப் பிடிக்கவில்லை என்று கேட்பது போல் அம்முறை சற்றே நீளமாய் உச்சுக் கொட்டியது அந்த வாலறுந்த பல்லி. அதைப் பிடிக்கவேயில்லை என்றாலும் அவளுடன் கூடவே இருப்பதால், அவளுக்கும் அதன் மைன்ட் வாய்ஸ் புரியத் துவங்கிவிட்டது போல!


அவள் மீண்டும் தன் திறன்பேசியிலிருந்து தன்னை ஊடுருவும் முகங்களைப் பார்த்தாள். ஈர்ப்பு என்பது பல சமயங்களில் ஏனோ ஒரு பக்கம் மட்டுமே ஏற்படுகிறது. இந்த முகங்களும் தன்னைப் போலவே ஏதோ ஒரு வட்டத்திற்கு வெளியில் வாழும் மனிதர்களை தேடிக் கொண்டிருக்கக்கூடும்.


ஒன்று, தான் அவர்கள் பயணிக்க விரும்பாத அந்த வட்டத்திற்குள் உலா வருபவளாக இருந்திருக்க வேண்டும் அல்லது அவ்வட்டத்திற்கு வெளியே வாழ்ந்தும், வாலறுந்த அந்த பல்லியைப்போல் ஏதோ ஓர் காரணத்தால் ஈர்க்கப்படாதவளாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சூரியக்கீற்றின் ஒளி படர்ந்த எதிர் சுவற்றைப் பார்த்தாள். இந்த முறை அந்த வாலறுந்த பல்லி ஏனோ உச்சுக் கொட்டாமல் அமைதியாய்க் கடிகார இடுக்கில் நுழைந்து மறைந்து கொண்டிருந்தது அடுத்த இரவுச்சூரியனை எதிர்ப்பார்த்து!


Rate this content
Log in

More tamil story from Deepa Sridharan

Similar tamil story from Drama