மதுரை முரளி

Romance Classics Thriller

4  

மதுரை முரளி

Romance Classics Thriller

செக்

செக்

18 mins
270


                    “ செக் “ --- மதுரை முரளி

                        இரவு மணி பத்து ... அறிவித்தது ஒரு மணிக்கு ஒரு முறை கூவும் அந்த ‘குயில் ’ கடிகாரம் .

                        ராஜி தன்  கண்களை சுழற்றிய தூக்கத்தை தடுக்க , இரு உள்ளங்கைகளை தேய்த்து கண்களில் வைக்கப்போக , ' ஆ வென்று கொட்டாவி குறுக்கே வந்து அதை தடுத்தது .

                        “ சே!  என்ன  பிழைப்புடா ? தினந்தினம்  இரவு  12 மணிக்குத் தான் படுக்கை . இவரு என்னதான் அப்படி செய்யறாரோ ? " சலிப்புடன் ஷோகேஸில் ஜோடியாய் இருக்கும் தன் திருமணப் போட்டோவை பார்க்க ..

                         ராஜன்.. மகாராஜன் சோம்பலாய் சிரித்தான் அதிலும் கூட.

வேலை...  தனியார் நிதிநிறுவனத்தில் மேலாளராய்.

                        " ஏன் சார்..  தினமும் இப்படி ராத்திரி 10 மணிக்கு மேல போறீங்களே ? வீட்ல சந்தேகப்படலை ? " ராஜனின் தோளில் சாய்ந்தவளாய் நடந்த மீனாட்சி கேட்க,

                       " ஹாஹ்ஹா .. அதுக்குத்தான் பல காரணங்களை அடுக்கறேன்ல . எல்லாம் ... உன்கூட ஊர் சுற்றத்தான் ... ஆமா ? அது என்ன சாரு ? " மீனாட்சியின் இடுப்பை , செல்லமாய் ராஜன்  கிள்ள , 

                       " ச்சீ ... போங்க . அப்பப்ப .. நீங்க எனக்கு ஆபிசர்னு ஞாபகப்படுத்திக்க வேண்டியிருக்கு.  சிலசமயம்,  ஆபிஸ் டயத்தில் கூட உங்க கொஞ்சல்ல நான் என்னைய மறந்து..”  மேற்கொண்டு சொல்லவிடாது  அவள்வாயை பொத்தினான் ராஜன் .

                       வேகமாய் பைக்கை கிளப்பி.,  பத்து நிமிஷப் பயணத்தில் மீனாட்சியை கவனமாய் இறக்கிவிட்டு,  மீண்டும் ஹோண்டாவிற்கு வேகமாய் உயிர் கொடுத்தான்.

                      தனியார் தொலைக்காட்சி சேனலில் , " இல்லற வாழ்க்கையில் செக்ஸின் பங்கு பற்றி சுறுசுறுப்பாய் டாக்டரும் , நிகழ்ச்சியாளரும் சிரித்து, சிரித்து பேச ... ராஜிக்கு ' சப்'பென்றிருந்தது சப்ஜெக்ட்.

                     வாரத்தில் ஒரு நாள் ஓய்வுன்னா கூட,  எதாவது காரணம் சொல்லி வெளியே  எப்படி ஓட முடிகிறது ராஜனால் ? .. யோசனை வேறு .

                     தான் ஓர் இயந்திரமாய்... வீட்டு இயந்திரமாய்,  ஆறுமணிக்கு எழுந்து, சமையல் செய்து... ப்ளஸ் 2 படிக்கும்  மகள் தீபாவை பள்ளிக்கு அனுப்பி ... தொடர்ந்து ராஜனை ஆபீஸ் அனுப்பி, வீட்டு சாமான்களை வாங்கி .. மாலையில் தீபா வீட்டுப்பாடம் படிக்க உதவி செய்து... இப்போது , இரவு பதினொன்று ஆகி .. குருவியும் கூவிவிட்டது . 

                   அப்படியே .. அமர்ந்திருந்த சோபாவில் மெல்ல அவள் சரிய, 

                   " டிங்,  டிங் " காலிங்பெல் . பதறிய மனத்துடன் .. எழுந்து,  ராஜி கதவு திறக்க.,’ டை’ யைக் கழற்றியவனாய் வாசலில் ராஜன்.

                    தொடர்ந்து,  டைனிங்டேபிளில் சூடுபடுத்திய சாம்பார் , பொரியல் சகிதம் ரெடியாய் ராஜி இருக்க,

                   " சர் " - லேசாய் சேரை நகர்த்தி அமர்ந்தான் ராஜன் .

                   " ராஜி ... இன்னிக்கு ஆபீஸ்ல ஒரு பார்ட்டி .. வயிறு ரொம்ப சப்பிட்டேன் .. எனக்கு ஒண்ணும் வேணாம் . "

                   " ஏங்க .. ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா ? தேவையில்லாம இராத்திரி சோறு வைச்சு .. குழம்பு சூடு பண்ணி ..” ராஜியை மேற்கொண்டு பேசவிடாது குறுக்கிட்டான் ராஜன் . 

                   “ இதப் பாரு,  என் பிரச்சினை எனக்கு.  இந்த சாப்பாட்டை சாப்பிட, நான் பசியோட  பதினொரு வரை கிடக்கணுமா?  ஆம்பிளைங்க பசின்னா..  அப்படிதான்,  அங்கே இங்கே சாப்பிடுவாங்க " 

                   சுருக்கென்றது ராஜிக்கு.

                  " புரியலை ... எனக்கு . அப்ப நான் இவ்வளவு நேரம் தூங்காம .. காத்திருந்து எல்லாம் வேஸ்ட்டுங்கிறிங்க ? " கோபப்பட்டாள் ராஜி .

                   “  லிமிட் ... லிமிட் தாண்டாதே . என்னைய நீ கேள்வி கேட்கமுடியாது . இங்கே நான்தான் லீடர் ஓ.கே " கோபமாய் எழுந்தவன்,

 'பட்'டென சேரை நகர்த்திவிட்டு ,

                   " வர, வர .. வீடு நாகமா இருக்கு " போகிற போக்கில் ராஜியை பார்த்து சொல்லிப் போக ... 

                   ' பொசுக் '  என கண்களில் துளிர்த்த நீரை ஒத்தககூட மனசில்லாமல் அமைதியானாள் அவள்.

                   காலையில் கண் விழித்த ராஜியை,  டேபிளில் பறந்த ‘துண்டுச்சீட்டு’ அழைத்தது . அதன் மேல் வெய்ட்டிற்காக ஒரு டம்ளர் .

                “  ஆபிஸ் வேலை காரணமாய் காலை 6.00 மணிக்கு கிளம்பிவிட்டேன் " மொட்டையாய் .. வேறு தகவல் இல்லை .

                ஞாயிற்றுக் கிழமையில் கூடவா ... அலுவலக வேலை ? அதுவும் விடியற்காலை ஆறுமணிக்கு ?. குழப்பமாய் .. சற்று சந்தேகமாய் இருந்தது ராஜிக்கு .

               மாதங்களில் மார்கழி மாதிரி..  கிழமைகளில் ஞாயிறு .. எல்லோருக்கும் .

               முற்பாதி சோம்பலாய் .. பிற்பாதி உற்சாகமாய்.

              அடுப்பில் பால் காய்ச்சி .. அப்படியே குக்கரையும்வைத்து , பெட்ரூமிற்கு வந்தவள்,

              " தீபா.. மணி எட்டு. எழுந்திரு . " ஒரே செல்ல மகளை முதுகில் தட்டினாள் .

               “ சே... என்னம்மா .  இன்னிக்கும் தூங்கவிடமாட்டியா ? " சோம்பலை நெட்டி முறித்த தீபா பார்வையை சுற்றி ஓட்டினாள் .

                " என்னம்மா .. அப்பா அதுக்குள்ளவா வெளில போயிட்டாங்க ? " கழுத்தை கட்டிப்பிடித்த தீபாவை , 

                " எனக்கு மெசெஜ் தான் பதில் . உனக்கும் ... இந்தா " சற்று கோபமாய் நீட்டினாள் ராஜி

                " ஓ.கே ம்மா ... ரிலாக்ஸ் . நான் பல் தேய்க்கிறேன்.  சூடா காபி .. காபி ... காபி " ரயில்வே காபி பாணியில் கூறிச் சென்றவளைப் பார்த்து, ராஜிக்கும் சிரிப்பு வந்தது .

                 அடுத்த அரைமணி நேரம் ... அடுப்படியில் பிஸியாய் நகர , 

                " அம்மா .. அம்மா .. " தீபாவின் அவசரக்குரல் பெட்ரூமிலிருந்து கேட்க ,

               “  எ .. என்னடி .. " பதறியபடி தீபாவை நெருங்க , அவள் கையில் ராஜனின் கம்பெனி செல்போன் . 

               அதில் , ராஜன் ஒரு பெண்ணின் தோள் மீது சரிந்தவனாய் . ' பளீர் ' சிரிப்புடன் .

               ' குப்'பென வியர்த்த வியர்வையில் நனைந்த ராஜி . செல்லை ' படக் ' கென பிடுங்கினாள் .

               " ஏம்மா .. இப்படி பிடுங்கறே?  " என்ற தீபாவை , 

               " இ..இது .. அப்பாவோட ஆபிஸ் செல் . அதோட , ஒருத்தரோட தனிப்பட்ட செல்லை பார்க்கிறது தப்பு . அது யாரா இருந்தாலும்.  ஓ.கே " எரிச்சலாய் ராஜி சொல்ல , 

               “ மன்னிச்சுக்கம்மா.  சும்மா  கேம் விளையாட எடுத்தேன் . சாரிம்மா” 

                மகளுக்கு பதில் சொல்லக் கூட மனமில்லாது வேகமாய் அடுப்படிக்கு சென்று,

                செல் பைல் ஃபோல்டர்களை ஓபன் செய்ய ... பலவிதமான போஸ்களில் ராஜன் ப்ளஸ் அவள்.

                பார்த்துக்கொண்டிருந்தபோதே,  செல்போன் சினுங்கியது... எதிர்முனையில் ராஜன் 

               " ஹலோ நான்தான் பேசறேன் . ஆபீஸ் செல்லை வீட்ல  விட்டுட்டேனான்னு உறுதிப் படுத்த பகல் பண்ணினேன். செல்லை  சைலண்ட் மோட்ல போடு.  எதையும் அட்டெண்ட் பண்ணாதே ... " பதிலுக்கு கூட காத்திராது அவன் ' கட் ' செய்ய .,

               அப்படியே செல்லை தூக்கியெறிய நினைத்தவள் ,  ஒரே நிமிஷத்தில் மனதை மாற்றி அதை ஆராயத் தொடங்கினாள் ராஜி.

              அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தீபா,  அடுத்து இருந்த மாஸ்டர் பெட்ரூமிலிருந்து வந்த சண்டை சப்தங்களால் பயந்து ஒரு போனாள் .

              இதுநாள் வரை இப்படி .. அப்பா அம்மா ரூமிலிருந்து இப்படியொரு சத்தம் கேட்டதில்லை .

              உள்ளே ஏ.ஸி. ரூம் ஆனதால் வார்த்தைகள் விழவில்லை ..காதில். ஆனால் , உள்ளே ...

             " இங்கே பாரு ராஜி . அந்த போட்டோ ஒரு போஸ்க்காக எடுக்கப்பட்டது . பெரிசு படுத்தாதே . " என்றான் ராஜன் .

             " எவ்வளவு பெரிய விஷயம் ... அசிங்கமான விஷயம் . 

உலக  மகா பொய். ஒரு போட்டோ இல்லை,  பத்து போட்டோ பார்த்தவுடன்,  .. சீய்ய் ... நீ  எல்லாம் ஒரு கண்ணியமான புருஷனா ? " 

            " என்ன மரியாதை குறையுது ? அறைஞ்சிடுவேன் .. உலகத்தில இல்லாத ஒரு விஷயத்தையா நான் பண்ணி .. " பேச்சை முடிக்குமுன் ராஜி ஆக்ரோஷமாய் எறிந்த தலையணையால் முகத்தில் தாக்கப்பட்டான் . 

           " என்னைய என்ன இளிச்சவாய்னு நினைச்சையா ? இல்லை .. படிப்பறிவில்லாத பயந்தாங்குளின்னு நினைச்சியா ?. முதல்ல , அது யாரு? 

அவளை நேர்ல காண்பி ? நாளைக்கே காண்பி . நாலு அறைவிடணும். அடுத்த அம்பிளையை, கணவனை, தொடர்றது ஒரு பிழைப்பா ? “  மீண்டும் மற்றொரு தலையனை பறக்க ,

            தடுத்து நிறுத்தி,  தப்பித்துக்கொண்டான் ராஜன் .

            " ஏ..ஏ ... ஏய் .. ரொம்ப மட்டமா பேசாத.  ஹிஸ்டீரியா பேஷண்டு மாதிரி நடக்காதே . " சொன்னவனை நெருங்கி வந்த ராஜி,

            சட்டைப் பொத்தான்களை பிய்த்து,  கழுத்தில் கை வைக்க,

' கொலை ' நடுக்கம் வந்தது ஒரு நிமிடம் ராஜனுக்கு . 

           " வி..வி . விட்டுரு . இனிமே ... பழகலை .. விடு " அலறியடித்து அரையடி நகர,

          “  இதான் நான் உனக்கு  தர்ற முதலும் , முடிவுமான எச்சரிக்கை . இனிமே எனக்கு ஏதாவது தெரியவந்தா... ஒண்ணு நீங்க , இல்லை நான் இருக்கணும் .. அதுவும் நம்ம தீபாவுக்காக .. " ஆக்ரோஷமாய் கத்தியவள் , படுக்கையில் குப்புற விழுந்து கதறி அழ, 

            செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போனான் ராஜன்.

            அடுத்து,  வந்த ஒவ்வொரு நாளும் , ராஜியின் செயல்பாடுகளில் வேகமும் , முரட்டுத்தனமும் அதிகமாக .. பலவிதமான எண்ணக் கலவையில் கலங்கியவன்,  ஆபீஸ் மீட்டிங் என்ற போர்வையில் கொடைக்கானல் கார்ல்டன் ஹோட்டல் சூட்டில் மீனாட்சி சகிதம் தங்கினான் .

          " டியர் ... என்ன ஆச்சு ? ஒரு மாசமாவே ஏதோ ஒரு பதட்டமாய்இருக்கீங்க ?  இங்கே வந்தும்.,  இப்படியா ? " செல்லமாய் ராஜனின்  காதை மீனா கிள்ள ,

           " எதைச் சொல்ல ? .. நான் பண்ணின சின்ன தப்பு . இப்ப பெரிய்ய பூகம்பமா .. வீட்ல .. " 

         " இன்னொரு தப்பா ? .. அதுவும் என்னைய மீறியா ? .. லேசாய் மீனா குரல் உசத்த ,

         " ஐயைய்யே . இந்த பொம்பளைங்களை சந்தேகப்படறதில,  அடிச்சுக்க ஆள் இல்லை . நான் போன மாசம் தெரியாத்தனமா நம்ம போட்டோ உள்ள ஆபீஸ் செல்லை வீட்ல விட்டுட்டேன்.  அதை ராஜி பார்த்திட்டா . அன்னிக்கு ஆரம்பிச்ச ., அவாளோட ஆட்டம்.. தினம் , தினம்...  ‘மெகா தொடர்’  கணக்கா பெரிசாகிக்கிட்டே போகுது " கவலையாய் ராஜன் கூற,

          " கவலைப்படாதே டியர். உனக்கு தெரியாததா எப்படி சமாளிக்கணும்னு! .. " நெருங்கி அமர்ந்த மீனா, அவன் தலையைக் கோத,

          " முடியலை.  மீனா அவ ஒரு ஹிஸ்டீரியா வியாதிக்காரி மாதிரி ஆயிட்டா . எனக்கே பாவமாயிருக்கு . நானே சிலசமயம் ஒரு மாதிரி ஆயிடறேன் . அதான் .. இரண்டு நாள் கழிச்சு ஒரு சைக்யாட்ரிஸ்ட் கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன் " சற்று குரல் கம்மியவன் ,

 தொடர்ந்து.. 

           " எனக்கென்னவோ யாரோ நம்ம ரெண்டு பேர நெருக்கமா பின் தொடர்றமாதிரி மாதிரி சந்தேகம்? . "

           " இப்ப .. இதைப் பேசி .. டயம் வேஸ்ட்டு பண்ணணுமா?  .. டோண்ட் பி ஸில்லி.  வாங்க , வாக்கிங் போகலாம் . நாளைக்கு ஊருக்கு போகணும் "  

    

            இரண்டு நாட்கள் கொடைக்கானல் நினைவுகளில் மனமும் , நேரமும் குஷியாய் நகர,

           தன்னுடைய சேம்பரில் ' எங்கேஜ்'டு விளக்கு எரியவிட்டு தானும் , மீனாவும் எடுத்த பலவித போட்டோக்களை ரசித்தவன்,  அப்படியே தன் மெயிலை ஓபன் செய்ய , அதில் , அரைகுறையாய் ஒரு பெண் .

            யார் முகம்?  ஸைடு போஸில்..அவள், இவனுடன் நெருங்கிய நாலு நிலைகளில்.

           போட்டோவின் அடியில் " இதுதான் முதல் செக் . இனியும் தொடரும் உனக்கு .. "

           " சே! . யார் இப்படி அனுப்பினது ? இந்த பெண்ணை போட்டோவில் கூடப் பார்த்ததில்லையே ? நான் சந்தேகப்பட்டது சரியாய் போச்சு . ஆனா யார் செக் வைக்கிறது ? பெரிய ' மார்ஃப்பிங் ' வேலையா இருக்கே ? " வாய் விட்டு புலம்பியவனின் பி.பி. தலைக்கு ஏறியது .

             முதலில், மீஎனவிடம்  சொல்ல யத்தனித்தவன் , மனதை மாற்றிக்கொண்டு,  தடுமாறி எழுந்து வீட்டிற்கு போக, வீட்டுவாசலில் ராஜி , கூடவே தீபாவும் .

             தீபாவைப் பார்த்த மாத்திரத்தில் மனம் இளகியவன் ,

             " ஏம்மா.,  இன்னுமா நீ தூங்கப் போகலை? . அப்பாவுக்குத்தான் வேலை.  நீ டயத்துக்கு தூங்கணும்மா.  அப்பத்தான் நல்லா படிக்க முடியும் . குட்நைட் "

              பதிலுக்கு காத்திராமல் வேகமாய் பெட்ரூமிற்க்குள் ராஜன்  நுழைய,

அவனைத் தொடர்ந்தாள் ராஜி.

              மீண்டும்  தொடங்கி, தொடர்ந்தது சண்டை . வெளியில் தீபா வெறுத்து போனாள் .

             தீபாவும்,  அப்பா அம்மாவிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் . அவர்கள் விடுவதாயில்லை .

             தவறு நிச்சயமாய் அப்பா பக்கம் தான்  இருக்கவேண்டும் என்பது இவள் கருத்து . 

            ஆனால் , “ அம்மா ஏன் ? இப்படி ? .. அப்பாவை பார்த்த மாத்திரத்தில் ஒரு மனநோயாளியாய்  கதுக்கிறாள்? “  அதே கவலையுடன் உறங்கிப்போனாள் .

             " ராஜி ப்ளீஸ்.,  புரிஞ்சுக்க  வர வர,  வீடுன்னாலே பயம் வருது . " ராஜன் கெஞ்ச , 

             " அங்கே அவ வீட்டுக்குப் போகிறதுக்கு, நிரந்தரமா போக ,  இப்படி ஒரு நாடகமா ? அப்படி ஒரு  யோசனை இருந்துச்சு ..நான் , நானா .. இருக்கமாட்டேன் . " சுட்டுவிரலால் மிரட்ட,

             " ம் .. இப்ப மட்டும் என்ன வாழுதாம் ? " ராஜன் மனசுக்குள் முனக,

           " என்ன .. என்ன முனகல் ? " முறைப்பாய் ராஜி.

           " ஒ.ஒண்ணுமில்லை . எனக்கும் சரி.,  உனக்கும் சரி ஒருவித மன அழுத்தம் இருக்கு . அதனால இந்த வாரக் கடைசியில் ஒரு சைக்காலஜிஸ்ட் கிட்ட அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கேன் . போய் பார்ப்போம் .. "  

              வார்த்தைகளை மென்று விழுங்கினான் ராஜன் .

              " நீங்களும் வருவீங்கள்ள?  | உங்களுக்கும் ட்ரீட்மென்ட் உண்டு தானே? ... என்ன ? .. கண்களை உருட்டி ராஜி பார்க்க,

             அச்சத்தின் பிடியில் அமைதியானான் ராஜன்.

            ' அன்பு ' மருத்துவமனை . ஆறு மாடி கட்டிடத்தில் ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டல் மாதிரியில் இருக்க.,

             ராஜி சகிதம் ரிசப்ஷனை அடைந்தான் ராஜன் .

             " குட் ஈவ்னிங் , என்னோடப் பெயர் மகாராஜன்.  டாக்டர் செல்வம் சைக்காலஜிஸ்ட் கிட்ட ஏழு மணிக்கு அப்பாயிண்மென்ட் வாங்கியிருக்கேன்.” 

              டேபிள் மேல் இருந்த கணிணியை இயக்கிய ரிசப்ஷன் பெண், 

              " இரண்டாவது ஃப்ளோர்ல இறங்கினதும் .. வலதுப்பக்கம்  மூணாவது ரூம் . டாக்டர் இருக்கார் . அதோ லிப்ட் .. " " அவள் கை காட்டிய திசையில் ராஜியை கைப்பிடித்து இழுத்து நடந்து,  லிப்டை அடைந்தான் ... அடைத்தான்.

               டாக்டர்.  செல்வம் முதல் பத்து நிமிடங்களை இருவரையும் வைத்து பேசி,  சில குறிப்புகளை எடுத்துக் கொண்டவர்,  ராஜனை ஐந்து நிமிடம் வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு  ராஜியிடம் ,

              " மேடம் .. உங்க வயசு 40 னு சொன்னீங்கல்ல ? மெனோபஸ் அறிகுறி தெரியுதா ? "

              " இ இல்லை டாக்டர்.  பிரீயட்ஸ் எல்லாம் . நார்மல்தான் . " 

               " மேடம் .. நீங்க கொஞ்சம் உண்மையை சொல்லலாம்னு நினைக்கிறேன் .. நீங்க காட்டற இந்த பதட்டம் .. உண்மைதானா ? " ராஜியின் முகத்தை உற்றுநோக்கியபடி வினவ , 

              " ப.. பதட்டம் . உண்மைதான் . " சமாளித்தாள் . 

              " பொதுவா உங்க ஏஜ் குரூப்ல கணவன் மனைவி உறவுல ஒரு வித மாற்றம் வருது ... இந்த கால கட்டங்களில . அதுக்கு, ஆணோட,  சில ஆண்களோட அலைபாயற மனசு காரணம் . ஐ மீன்.,  உங்க கணவன் மேல . ஏதாவது சந்தேகம் ? ஒப்பனா சொல்லுங்க .. "

              " அது .. கொஞ்சம் சந்தேகம்தான் டாக்டர் . கூடவே , அவரும் கூட,

கொஞ்சம் டிப்ரஸ்டா தெரியறாங்க ... "

             " ஹி..ஹி ... ஹி.,  அவரும் இல்லை . அவர் மட்டும் தான் .. " சேரில் சாய்ந்து அமர்ந்து ரிலாக்ஸ்டாய் சிரித்தார் டாக்டர் .

             " டாக்டர் .. நீங்க சொல்றது ... " 

             " மேடம்., தினமும் பல கேஸ்களை பார்க்கிறவன் . ட்ரீட்மெண்ட் அவருக்குத்தான் வேணும் . உங்களுக்கு இல்லை . என்ன சரியா ? "

             " டாக்டர் ... " ராஜியின் குரலில் சப்தம் வரவில்லை.

             " நீங்க . பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் .  இன்னும் சொன்னா . ஒரு மனநோயாளி மாதிரி நடிச்சு .. அவரை திருத்த பார்க்கறிங்க .  ஆனா , அவர் உங்களை பேஷண்டா பார்க்கிறாரு .  டோண்ட் ஒர்ரி . இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் . உங்களுக்கு அவர் முன்னாடியே..மாத்திரை,   விட்டமின் மாத்திரை கொடுக்கிறேன்.  அவருக்குத்தான் ட்ரீட்மெண்ட்.  ஆனா , அவரை துன்புறுத்தாதீங்க . இது இரண்டாவது ரெண்டுங்கெட்டான் பருவம் ஆண்களுக்கு..40 -- 45 வயசு . "

             " டாக்டர் .. நீங்க எப்படி ? என்னை உடனே .. " ராஜியின் கண்களில் கண்ணீர் குளம் கட்ட  துடைத்தவள்,

             " ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் .. " தடுமாறினாள் ராஜி . 

            அடுத்த ஐந்து நிமிடங்களை ராஜன் உடன் செலவழித்தவர் ,

             மருந்து , மாத்திரைகளை லிஸ்ட் எழுதி..

             " ராஜன் ... ஒய்ஃப்புக்காக ட்ரீட்மெண்ட்.  நீங்களும் கொஞ்சம் வீக்காக தெரியறதால ... உங்களுக்கும் மாத்திரைகள் . "

             " ஓ.கே. டாக்டர் . அப்ப நாங்க  ஒரு மாசம் கழிச்சு வர்றோம் . " ராஜியுடன் விடை பெற்று வெளியே வந்தான் ராஜன்.

             " என்னங்க.,  வண்டியை ஏன் இப்படி வேகமா ஓட்றீங்க ?. " 

             " அ . அது., ஆபீஸ் டைம் வந்திடுச்சு . அதான் . தொண, 

 தொணண்ணு பேசாதே .. " வீட்டை அடைந்தவன் .,

             " எனக்கு , ஆபீஸ் மெயிலிங் கொஞ்சம் பண்ண வேண்டியிருக்கு . தொந்திரவு பண்ணாதே . " பதிலுக்கு காத்திராது,  ராஜன் பெட்ரூமுக்கு சென்று கதவு சாத்தி படுக்கையில் வீழ்ந்தான் . 

              ஐந்து நிமிடம் தலையில் கை வைத்திருந்தவன் .. மெள்ள , தனது லேப்டாப்பில் பிரவுஸ் பட்டனை உருட்ட .. அவனது மெயிலில்,  மீண்டும் பல அதிர்ச்சி போட்டோக்கள். 

             மெயில் வந்த ஐ.டி.யைப் பார்த்தான்... இது வேறொரு புதிய ஐ.டி. 

கீழே...புதுவாசகம் .

            " டேய் .,  அதே ஐ.டி.ன்னா நீ ப்ளாக் பண்ணுவேன்னு புதுசா .. இப்படி , செக்குகள் இனியும் தொடரும் . “

            வாழ்க்கையில் முதன்முறையாய் உணர்ச்சிகள் எல்லாம்  ஒன்றாய் வந்து.. கோபம் , ஆத்திரம் , பயம், அழுகை..  எனக் கொட்டியது ராஜனுக்கு.

           அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த ராஜன் , 

           தொடர்ந்து ஒலித்த செல் அழைப்பில் , தொடுதிரையப் பார்க்க ‘மீனா’.

            " மீனு .. என்ன பண்றே ? உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன் ... நீயே கூப்பிட்டுட்டே .. "

            " உடனே புறப்பட்டு வாங்க . நேர்ல பேசணும்.  அவசரம் .. " அவள் குரலில் தெரிந்த கடுமையில் மேலும் அதிர்ந்தான்.

            " இப்பவே வா ? .. நைட் டயத்தில் எப்படி ? " 

            " இப்ப வரலை ... நம்ம உறவு..படு மோசமாப் போகும் . அடுத்த பதினைஞ்சு நிமிஷத்தில ... நீ இங்கே இருக்கே .’’

            அழைப்பு துண்டிக்கப்பட,

            " ஐயையோ .. என்னடா பொழைப்பு ? இவளும்,  ராஜி மாதிரி பேசறா .. " 

           கதவு திறந்து அவசரமாய் ராஜியிடம்,  கஸ்டமர் மீட்டிங்னு பொய் சொல்லி கிளம்ப , 

           கோபமாய் இடுப்பில் கை வைத்த நிலையில் முறைத்தாள் அவள்.     கூடவே தீபாவும் .

           மீனா கொடுத்த டயம் லிமிட்டில் , அவளது அபார்ட்மெண்டை அடைந்தவன் ,

         ' டிங் ' காலிங்பெல்லை அழுத்தினான் . 

          கதவு திறந்த மீனாவின் கோலத்தை கண்டவன் உள்ளுக்குள் உதறல் . "

         “ மீனா .. டார்லிங்.,  ஏன் இப்படி ? .. ரொம்ப கோபமா, அதிர்ச்சியா தெரியற ? .. "

         ' படார் ' என  பதிலைக் கோபமாய் கதவு மூடிக் காண்பித்தவள்,

        பெட்ரூமில் கட்டிலில் மல்லாக்க விழ,

        பின்னால் தொடர்ந்தவன் கட்டிலின் விளிம்பில் நின்றுவிட்டான் . 

       " மீனு.,  எனிதிங் ராங்?.  நானே ரொம்ப ‘அப்செட்’  மூட்ல இருக்கேன் . உன்னைப் பார்த்தா.,  பேசினா., மனசு இலேசாகும்னு..  இராத்திரில ஓடி வந்தேன் . "

       அவனை மேலே பேசவிடாது,  உதட்டின் குறுக்கே ஒரு விரலை காட்டியவள் , 

       தன்னுடைய ‘மெயில்’  பெட்டியை திறந்துக் காண்பிக்க,

       அதே படங்கள்... அவள் மெயிலிலும்.

       ராஜனுக்கு வந்த அதே போட்டோக்கள்.

      பயத்தில் அந்த அறையே சுத்தியது ராஜனுக்கு .

      தடுமாறி கட்டிலில் அமர்ந்தவன்.,

      " உனக்குமா ? ப்ளீஸ் என்னைய, சந்தேகப்படாதே.. நம்பு. நம்ம  ரெண்டு பேரைப் பிரிக்க , குழப்ப,  யாரோ இப்படி ' செக் ' வைக்கிறாங்க . அ . அது .. ஆபிஸ்லேயே யாராவது? இ...இல்லை ., வீட்லயா ? " கண்ணை சுருக்கிப மீனாவைப் பார்க்க ,

      " நிறுத்து ராஜா .  என்னையும், உன் மனைவி  மாதிரி ஏமாந்தவள்னு நினைக்கிறியா ? .. நோ.  உடனே, நீ  என்னைய மேரேஜ் பண்ணு . அதுவும் என்னிக்குன்னு சொல்லு ? " 

      வானில் எங்கேயோ இடிச்ச இடி.,  நேராய் தன் தலையில் இறங்கியதாய் உணர்ந்தான் ராஜன். 

      " வ .. வந்து .. எ..என்ன திடீர்னு ? .. என்னை நம்பலையா நீ  ? .. "

      " தெரியும் .. நல்லா தெரிஞ்சதினால சொல்றேன் .. அவ யாரு ? .. எப்படி உனக்குப் பழக்கம் ? எனக்கு உடனே தெரியணும் . அதோட இன்னும் இரண்டே நாள்..உனக்கு டைம் தர்றேன் . நாம பார்த்தோமே .. அந்த அடையாறு அபார்ட்மெண்ட் வீட்டை.,  அந்த  டாக்குமெண்ட்டை  நீ முடிக்கிற,  என் பெயர்ல..உடனே. " அடுக்கிக் கொண்டே போக,

        “ உடனேவா?  கொஞ்சம் டயம் கொடு...டார்லிங். “ அவள்  காலடியில் அமர்ந்து கெஞ்ச,

        " ஓ.கே . ஒரு வாரம் . கூடவே ., அவ தகவல் வேணும் . ஏமாத்த முயற்சி பண்ணாதே . ராஜா .”  ராஜியின் மிரட்டல் குரல்  போல் கேட்டது ... மீனாவின் குரல்.

         " ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மீனா டார்லிங்.  அபார்ட்மெண்ட் ஓ.கே. ஆனா, என்னை சந்தேகப்படாதே.  நீயும்  என்னை வெறுக்காதே . அந்த போட்டோ ஏதோ ' மார்ஃப்பிங் வேலையா இருக்கும் .. " பக்கத்தில் வந்து மீனாவின்  தோளை  ராஜன் தொட முயல ,

.        " நோ பிசினஸ் . எனக்கு முதல்ல அபார்ட்மெண்ட் ., அப்புறம் மேரேஜ் . இப்ப நீ கிளம்பலாம் . " கதவு நோக்கி கையைக் காட்ட,

          அவளது முரட்டுத்தனமான  கதவி நோக்கிய விரல் அசைவில் தலைகுனிந்து வெளியே வந்தான் ராஜன் .

         " இது யாரோ என் லைஃப்ல வைக்கிற தொடர் செக். ம்.,  அன்பா , பாசமா , அமைதியா இருந்த வீடு , மனைவி எல்லாம் என் இந்த  அல்ப, சல்லாப ஆசையால..  அழிஞ்சுப்போச்சு .  என் வாழ்க்கையே வீணாப் போச்சே.  நானே,  என் தலையில மண்ணை வாரிப் போட்டுகிட்டேனே.  இது,  என்னைய மாதிரி உள்ளவங்களுக்கு ஒரு பாடம் .. " உள்ளுக்குள் புலம்பியவனாய் நடக்க,

          ராஜன் நகர்ந்ததும் .. படுக்கையில் இருந்து எழுந்த மீனா .,

          தனது லேப்டாப்பில் ... அடுத்த மார்ஃப்பிங் ' செய்ய தயாரானாள் . 

         " ராஜா.,  எப்ப நீ , உன் மனைவி பாவம்னு  பேசத் தொடங்கினியோ,  அப்பவே என் வேலையை  நான் ஆரம்பிச்சிட்டேன் . உன்னைய இதுக்கு மேல நம்பினா.. நான் மோசம் போயிடுவேன். அதான்,  நான் சுதாரிச்சிட்டேன் . செக் வைக்க ஆரம்பிச்சிட்டேன் . ஹா..ஹா ... ஹா .. " சிரித்துக் கொண்டாள் தனக்குள்.

         வாழ்க்கையே ஒரு வட்டம்.

         இன்று ராஜன்...

         நாளை  மீனா?..

        அடுத்து யாரோ ?.. கண்ணியமாய் வாழ்வோம்...உலகில்.

                    @-@-@ 

 



Rate this content
Log in

Similar tamil story from Romance