KANNAN NATRAJAN

Inspirational

2.8  

KANNAN NATRAJAN

Inspirational

அரிதார பொம்மைகள்

அரிதார பொம்மைகள்

3 mins
160


                         

 வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்திருந்தால் போரடிக்கும்….அதனால் எங்க கம்பெனி கணக்கைக் கொஞ்சம் போட்டுத் தர்றீங்களா?

எதிர்வீட்டு நிர்மலா சர்வசாதாரணமாகக் கொண்டு வந்து நீட்டும்போது சற்று கோபமாக வந்தது.

வீட்டில் என்ன வேலையா இல்லை!……

ஹவுஸ்வொய்ஃப்தானே! என்ற ஏளனம்…

அப்பா படிக்க வைத்த படிப்பிற்கு எங்காவது சென்றிருந்தால்கூட மாதம் இருபதாயிரம் வரும்.

ஆனால் இங்கு பணம் இருக்கிறது என்ற தைரியத்தில் சும்மா இருந்துட்டோம். இப்ப பார்த்தால் தெரு முழுதும் இளக்காரமாக இருக்கிறது. இந்த தோட்டம், நம்ம சமையல், வீட்டு அலங்காரம் இதுக்கெல்லாம் மரியாதையே இல்லையா!

அலுத்துக்கொண்டாள் செளஜன்யா.

எதிர்வீட்டு அலமேலு ஒரு டிகிரி முடித்த தனது பெண்ணைக்கூட வீட்டில் இருக்க வைக்க விரும்பவில்லை.

ஏளனமும், பேச்சுகளும் சௌன்யாவின் காதை என்னவோ செய்தன. 35 வயதிற்குமேல் என்னை யார் வேலைக்குக் கூப்பிடப்போகிறார்கள் என்று ஆயாசத்துடன் சன்னலோரம் வைத்திருந்த ஜாதிமுல்லையின் வாசனையை ரசித்தவாறு செய்தித்தாளினை டேப்லட்டில் வரும் குறுஞ்செயலியில் வாசிக்கத் தொடங்கினாள். பேப்பரே படிக்கக்கூடாது எனச் சட்டம் போட்ட முன்னோர்களை நினைத்துப் பார்த்தாள்.

நவராத்திரி சமையல் போட்டி விளம்பரத்தைப் பார்த்தபடி இருந்தாள்.

உடனே குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டாள். போட்டி இன்றுதான் என தெரிந்து கலந்து கொள்வதாகக் கூறினாள்.

மௌனமாகத் தொலைக்காட்சியை ஆன் செய்தாள்.

பள்ளிகளிலேயே மாணவிகளும் மதுவிற்கு அடிமையாகும் சீரழிவைக் காட்டியதைப் பார்த்தபடி இருந்தாள்.

தனது டேபிளின் அடியில் தாத்தா எழுதிய டைரியைப் புரட்டினாள்.

நான் சிறுவயதில் சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்த பஞ்ச நிலைமையினைப் பார்த்திருக்கிறேன். பள்ளியில் தரும் அரிசியினையும்,பேரீச்சை உருண்டைகளையும் வைத்து எங்களது வயிற்றைக் கழுவிய அரசின் புத்திசாலித்தனத்தை வியந்து பாராட்டி இருக்கிறேன். அன்றெல்லாம் மது குடித்தாலே அவர்களை ஊரை விட்டு ஒதுக்ககி வைப்பார்கள். பிடி அரிசி வாங்கி பள்ளியை முன்னேற்றம் காண வைத்த நல்ல மக்கள் ஏன் இந்த காலம் இப்படி இருக்கிறார்கள் என வியந்து போய் இருக்கிறேன். காந்தி,காமராசர் அப்ப நாட்டிற்கு உழைத்தது எல்லாம் வேஸ்டா? பள்ளி முன்னேற்றத்திற்காக தனது வசதிகளைத் துறந்து வாழ்ந்தவர் மத்தியில் இன்று ஏன் இப்படி……எனப் பாதியில் நி்ன்று போன வரிகளை நிதானித்துப் படித்தாள். அடையாளத்திற்காகத் தாத்தா வைத்த மயிலிறகு இன்னமும் ஏன் குட்டி போடவில்லை எனக் கேட்ட தனது மகள் வினியை அந்த டைரியை வாசிக்கச் செய்தாள்.

போங்க மம்மி! அவருக்கு வேறு வேலை இல்லை..இந்தக் காலத்துல ஐந்து வருடம் வந்தால் அவங்க ஃபேமிலிக்குப் பணம் சேர்க்கத்தான் மம்மி வருவாங்க..இது பிராக்டிகல்..காலம் மாறுபட்டுப் போச்சு…தாத்தா காலத்துல அன்னியனைத் துரத்தி நம்ம நாட்டு வளத்தைக் காப்பத்தணும்னு ஒரு வேகம் இருந்துச்சு..

இப்ப அந்த அன்னியன் நமக்குள்ளே பகையைப் பயன்படுத்தி அதாவது நம்ம மத வேறுபாட்டைப் பயன்படுத்தி வெளியிலிருந்தே நம்ம நாட்டைச் சுரண்டறான். வளங்களைக் கொள்ளையடிக்க இலஞ்சம் தர்றானுங்க…..இலஞ்சங்களில் இப்ப மது,மாதுவும் அடங்கிடுச்சு..

அப்ப பெண் அடிமையாக மாட்டாளா? அதுக்குத்தான் பெண்ணை அந்தக்காலம் அப்படியே வைத்திருந்தார்களா?

அது பெண்கிட்டதான் இருக்கு..எந்த ஒரு படித்த பெண்ணும் ஒருவனுக்கு ஒருத்திதான் அப்படிங்கற கொள்கையில் சரியா இருக்கணும்..

வெளியிடங்களில் ஜாக்கிரதையா இருக்கணும்……

மேலைநாட்டுக் கலாசாரப்படி வாழ்ந்தால் பெண் அவ்வளவுதான். இனி பூட்டிய வீடுதான்.

நான் வண்டியில் ஒரு கான்ஃப்ரன்ஸ்போறேன்மா..உங்களை எங்கே இறக்கி விடணும்?

நேரா ஊரப்பாக்கம் மகிளாமண்டபம் அருகில் விட்டுடு வினி…..

ஷாப்பிங் பை நிறைய சமையல் பொருட்களுடன் வண்டியில் ஏறிய அம்மாவைப் பெருமையுடன் பார்த்தபடி இருந்தாள்.

வண்டியைக் கிளப்பட்டுமா அம்மா!

ஹூம்!

 வினி சரியாக நான்குமணிக்கு மகிளா மண்டப வாசலில் அம்மாவை இறக்கிவிட்டுப் பறந்து விட்டாள்.

சௌஜன்யா சமையல் போட்டியில் சமைத்த உணவுகளை ருசி பார்த்த நடுவர் அவளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அவர் நடத்தும் ஃபைவ்ஸ்டார் உணவு விடுதிக்கு ஆலோசகராக வாரம் ஐந்து நாட்கள் ஒரு மணிநேரம் வர முடியுமா? மாதம் முப்பதாயிரம் சம்பளம் எனக் கேட்டபோது வேலை என்பது அலுவலகத்தில் மட்டும் இல்லையம்மா என அப்பா கூறியது அவளுக்கு ஏனோ நினைவுக்கு வந்தது.

வீட்டிற்கு ஆட்டோவில் சால்வையுடன் வந்திறங்கிய சௌஜன்யாவை எதிர்வீட்டுகும்பல் வளைத்தது. வழக்கம்போல வெற்று உதாசீனம்தான் என அவர்களைத் தாண்டி போக நினைத்தவளை அலமேலு சௌஜன்யாவின் கையைப் பற்றினாள். இந்தக் கையிலா இவ்வளவு திறமை?

நான் எங்கே போறேன்னே சொல்லலியே என விழித்த சௌஜன்யாவிற்கு ஏதோ நடந்தது புரிந்தது.

ஆன்ட்டி! உங்க சமையல் டிஷ் வழி உலகத்துக்கே தெரிஞ்சாச்சு..

அப்பா என்னசுத்தம்..கை போகிற வேகம் என்ன..காய்,பழம் கட் பண்ற நேர்த்தி என்ன…அப்படியே டீவில பார்க்கும்போது அசந்துட்டேன்ல.. என நீட்டி முழக்கிய பிரேமி..அப்படியே நீங்க டேப்லட்டுல படம் எடுத்து அப்லோட் பண்றதையும் காண்பிச்சாங்க..உங்களுக்கு சிஸ்டத்திலேயும் இவ்வளவு அறிவுன்னு நான் இப்பதான் பார்த்தேன்.

வினி வண்டியை மெதுவாக அம்மாவின் பக்கவாட்டில் நிறுத்தியபடி இதுதாம்மா உலகம்..இன்னைக்கு இந்த டீவிதான் உலகம்னு ஜனங்க நினைக்கிறது புரியுதா!

ஏன் நாடு இப்படி இருக்குன்னு புரியுதா!

நாமளும் அதுக்குத் தகுந்தாற்போல அரிதாரபொம்மைகளா மாறிக்கணும்..புரிஞ்சுதாம்மா என்றாள். அந்த டைரியைப் பரணில் கண்காணாத இடத்தில் விட்டெறிஞ்சுடட்டுமா அம்மா என்று கேட்ட வினியைப் பார்த்தபடி இருந்தாள் சௌஜன்யா.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational