தணியாத தாகம்
தணியாத தாகம்
என் தளர்ந்த கரங்களால்....
உன் மலர்ந்த முகத்தை வருடி விட்டு மனம் குளிர்ந்திட தான் ஆசை!
என் நடுங்கும் கரங்களால்.....
ஒரு பிடி உணவை ஊட்டி விட்டு உள்ளம் பூரித்திட தான் ஆசை!
என் புரைவிழுந்த கண்களால்....
உன் கேசத்தை கோதி விட்டு....
அழகு பார்த்திட தான் ஆசை!
என் கேட்காத செவிகளால்...
உன் மழலைக் குரல் கேட்டு மகிழ்ந்திட தான் ஆசை!
வறண்டு பாலையான...
என் மனம்.....
கள்ளம் கபடமற்ற உன் முகத்தினை கண்டு மகிழ்ந்திட தான் ஆசை!
உன் மூச்சுக் காற்றில்...
நான் சுவாசம் பெற்று....
உறக்கம் கொண்டிட தா
ன் ஆசை!
என் மார் மீதும்.... என் தோள் மீதும்...
நீ தலை சாயத்திடத் தான் ஆசை!
உன் பிஞ்சு விரல் எனைத் தீண்டி ஸ்பரிசம் கண்டிட தான் ஆசை!
ஒரு குவளை தண்ணீர்...
உன் கையால் வாங்கி பருகிட தான் ஆசை!
'தாத்தா' உன் ஒரு அழைப்பு சொல் கேட்டு...
அள்ளி அணைத்திடத் தான் ஆசை!
ஓடியாடி விளையாடி...
மூச்சு வாங்கி நிற்பதை.....
என் மூச்சு அடங்குவதற்குள் பார்த்து இரசித்திட தான் ஆசை!
உன் அன்பு ஒன்றையே தேடுகிறேன்!
உன் நினைவில் நாளும் வாடுகிறேன்!
ஆயிரம் கனவுகள் நெஞ்சோடு....
வாழ்ந்திட தோணுது உன்னோடு!