தமிழன்னை
தமிழன்னை
அணிஅணியாய் இலக்கியத்தில் அணிகலன்கள் சூடியவளே
அணித்தெரியா என்னிடத்தில் அவ்விலக்கியமும் படைத்திடுமோ
அளவில்லா இலக்கியத்தில் அளவாக சூடியவளே
அளவோடு நான்படைக்க அதிலொன்று ஏற்பாயோ
பலயுகத்தை கடந்திட்டும் பளிங்குபோல மிளிர்கிறதே
படைக்கப்பட்ட இலக்கியமோ பல்லாயிரம் வரிசையிலே
பலபுலவர் நான்தாண்டி படைப்புகளை சூடிடவே
பறந்துதானே நானும்வந்தேன் பஞ்சமில்லா உன்னிடமே
இருசெவியை அலங்கரிக்கும் குண்டலகேசியும் வீழாதே
இருகைகளை ஆர்பரிக்கும் வளையாபதியும் நெளியாதே
மார்பிலே இடங்கொண்ட சீவகசிந்தாமணியும் உதிராதே
இடையிலே இருப்பதால் மணிமேகலையும் அவிழாதே
திருவடியிலே கிடந்திட சிலப்பதிகாரமும் தேயாதே
பொன்முடியில் தனியிடமாய் சூளாமணியும் ஆளுதே
பொறுமையுடன் நான்காண ஓரிடம்தான் வெற்றிடமே
பொறுப்புடனே மூக்கிற்கு மூக்குத்தி தந்திடுவேனே
தாயவள் முகமது தாமரைபோல் மலர்ந்திடுமே
தமிழ்தாயிடம் எனக்கொரு இடமும்தான் கிடைத்திடுமே
தாயவள் கருனையால் தமையேனும் புலவரே
தன்புலமையையும் சீராட்டும் தாயவளே தமிழே
மணிமாறன் கதிரேசன்
