ஓட்டமெடு கொரோனாவே
ஓட்டமெடு கொரோனாவே
கொரோனா வைரஸ் என்னும்
கொலைகாரக் கும்பல் ஒன்று
மக்களிடம் பலி கேட்டு
சுற்றிவந்து ஆட்டம் போடும்
சத்தம் இங்கு சகிக்கலையே
ரத்தம் அது கொதிக்கிறதே
ஒன்று கூடி மானிடரே
நன்றுஒன்று செய்தல் வேண்டும்!
பின்வாசல் வழியாக
ஏமாற்றி உள்வந்து
உலக மக்கள் அனைவரையும்
ஆட்டமாய் ஆட்டுவித்து
அடக்கி ஆள முயற்சித்து
அட்டகாசம் செய்கின்ற
கொரோனாவை உடனடியாய்
துரத்தி ஒழிக்க சபதமேற்போம்!
அங்கு இங்கு என்றின்றி
அனைத்துலக நாடுகளில்
மூக்கை நுழைத்திடவே
தவியாய்த் தவிதவித்து
தறுதலை தனைப் போல
தரம் கெட்ட துரோகியாய்
பாய்ந்து வரும் வைரஸ் அது
சாய்ந்து போக திட்டம் செய்வோம்!
போர்முனையில் போர் புரிய
பயம்கொண்ட பேடிபோல்
நேருக்கு நேர் வராமல்
பாருக்கு பங்கம் தர
முக்காடிட்டு வந்திருக்கும்
முட்டாள் வைரஸை
அடித்துத் துரத்திடவே - நம்
அரசுடன் ஒத்துழைப்போம்!
உலகம் முழுதும் வாழும்
அப்பாவி மக்கள் தம்மை
தன் பசிக்கு இரையாக்கித்
தகர்க்க முயல்கின்ற
கொரோனாவை அழித்திடவே
தவிடுபொடி ஆக்கிடவே - நம்
அரசுடன் கரம் கோர்த்து
உலகமதைக் காத்திடுவோம்!
தனித்து ஒதுக்கி தங்கவைத்து
தொற்றுக்கு சிகிச்சை பெரும்
சகோதரர் நிலை கண்டு
கண்ணீருடன் கவலை கொண்டோம்
கொரோனா வைரஸதன்
பேச்சடைக்க மூச்சடைக்க - நம்
அரசின் அறிவுரையை
உறுதியுடன் கடைபிடிப்போம்!
அனேக உயிர்களை
அள்ளிக் கொண்டது
அதற்கு மேலும் இன்னும்
அள்ள நினைக்குது
அந்தக் கோர வைரஸை
அழிக்காமல் விடமாட்டோம் - நம்
அரசு தீட்டும் திட்டங்களை
செயல் படுத்திக் காட்டிடுவோம்!
போரைத் தவிர்த்திங்கு
உலகமக்கள் உயிர்வாழ
பாரில் மனிதர்கள்
மனதாற விரும்புகிறோம் - அந்த
வேரில் வெண்ணீரை
பாய்ச்ச வந்திருக்கும்
கொரோனாவே உந்தன்
கோரமுகத் திரை கிழிப்போம்!
எங்களது மனித நேய
எண்ணத் தைத் தவறாக
'ஆகா இளித்த வாயர்!'
என நினைத் திங்குவந்து
சாகா வரம் பெற்றது போல்
தருக்கி நிற்கும் வைரஸுன்னை
ஆளில்லா உலகனுப்ப - எங்கள்
அரசுடன் இணைந்திருப்போம்!
உலக மக்கள் கரம் கோர்த்தால்
ஊதித் தள்ளிடுவோம்
மக்கள் நாங்கள் மனது வைத்தால்
மரணஅடி கொடுத்திடுவோம்
உடனடியாய் அதைச் செய்ய - எம்
அரசு வழி நடந்திடுவோம்
உலகத்தைக் காத்திடுவோம்
அமைதிநிலை நாட்டிடுவோம்!