நதி
நதி


நதிநீர் ஒருங்கிணைப்பு
நெகிழி குடுவைகளில்
அடைக்கப்பட்ட நாங்கள்
குமரியின் எல்லைப்பகுதியில்
பிறந்து வளர்ந்தோம்!
எந்தையர் யாவரும்
சிந்துநதி புகழ்
பாடி கோதாவரி நதியன்னையின்
வீடு சென்று
கிருஷ்ணா நதி பாட்டியின்
ஓலைகுடிசை வீட்டருகே
முளைத்த கரும்பின்
வாசனையை நுகர்ந்த
காலம் சொல்லக்கேட்டு
பாலாற்று அத்தையின்
மடி தேடி ஆராரோ
கானம் கேட்க
எங்களை ஒருங்கிணைப்பவர்
எங்கிருந்து வருவாரடீ
கிளியே! உன்
சாதகக் கட்டத்தில்
நீர் இணைப்புக்கென
எனது குறிப்பு
ஏதேனும் உளதோ!
அகத்தியர் கமண்டல
நீராக குடுவையில்
இருக்க நான்
விரும்பவில்லை!
ஓடும் காவிரி
நீராக இந்தியா முழுவதும்
பரவ தோஷ நிவர்த்தி
ஏதேனும் கண்டெடுத்தால்
நல்முத்தொன்று பரிசாக
உன் கழுத்துக்கு நான் தருவேன்!