குற்றமென்பது யாதெனில்...
குற்றமென்பது யாதெனில்...
கசங்கி போண என் ஆடையின் ஓரம்
உறைந்த இரத்த துளிகளின் சிகப்பில்,
குப்பையாய் கசக்கி அவன் எரிந்திட்ட பின்பு
என்னை நோக்கி நீண்ட விரல்களின் கூர்மையில்,
தெரிகின்றது, இந்த உலகின் நியாயமற்ற
குருட்டு நியாயங்கள்!
கூண்டில் அவன் நிறுத்தப்பட்டது
சரியே! கயவன் அவன்.
என் கனவுகளை, என் கவிதைகளை
சிதையிலிட்டு பொசுக்கிய பொறுக்கி.
ஆனால் அங்கேயே நானும் கூனி, குறுகி
நிற்க நேர்ந்தது அவலம் அல்லவோ?
பார்வைகளோ ஆதி பாவம் பண்ணியவளாய்
என்னை அங்கங்கே பிராண்டுகின்றன,
வேலின் முனைகளாய் வார்த்தைகள்
ஓட்டை ஆன இதயத்தை துளைக்கின்றன,
தப்பென்று நான் என்ன செய்திட்டேன்,
பெண்ணாய் பிறந்ததன்றி?
என் விருப்பு, வெறுப்புகளை விறகிட்டு பொசுக்கி
என் சுய மரியாதையை காலில் மிதித்து நசுக்கி,
என்னை அவன் அடைந்திட்டதால் நான்
கற்பழிந்த கேவலம் ஆயிடுவேனா?
இதுதான் உங்கள் விந்தையான உண்மையா?
ஊமை உண்மை! ச்ச்சீ!
நியாயத் தராசின் தட்டு தவறின் பக்கமாய்
தரம் இறங்குவது கொஞ்சமும் பொருந்தாத
அசிங்கமான வேடிக்கை!
தேவதை நான் தூக்கிற்காய் தவமிருக்க,
சாத்தான் அவன் சாவதானமாய் நடைபோடுவதில்
கற்பழிக்கப்பட்டது, நீதியும், நியாயமும்!
<
p>
என் வாழ்வின் மகிழ்ச்சிகளை மொத்தமாய் விழுங்கிய
சுறா மீன், சுதந்திரமாய் கடலில் மிதக்க,
ஓட்டை கப்பலாய் நான் மூழ்கிட வேண்டுமா?
என் கோலத்தை அலங்கோலமாய் ஆக்கிய பேய் விரல்களுக்கு, நான் போய்விட்டால்
இங்கு யார் தீர்ப்பெழுத?
கடவுள் நின்று கொல்லும் வரை பொறுத்திருக்க
இனியும் நான் பேதையில்லை,
என் கனவுகளை குடித்து கூத்துப்போட்டவன்,
குருதி வழியாமல் காத்திட்டால் - அது
இன்னொரு பெண்ணுக்கு நான் செய்யும்
அநீதி! செய்வேனோ அதை!?
இன்று, குற்றவாளிக் கூண்டில் நான்!
தலை நிமிர்ந்து, பெருமையாய்.
ஐயோ! கொலை, குற்றமாம்.
செத்தது ஒரு மனிதம் அற்ற பிணம் என்று புரியாதவர்கள்
பிதற்றுகிறார்கள்! பெரிய்ய குற்றம்.
குற்றமென்பது யாதெனில்
மனிதம் வளர்க்காமல், உயிரின் உள்ளே
வெறி, வக்கிரம் வளர்ப்பதே!
குற்றமென்பது யாதெனில்,
கூண்டுக்குள் இருக்க கடமை பட்டவர்களை
பறவையாய் பறக்க விடுவதே!
குற்றமென்பது யாதெனில்
அம்மாவாய் மதிக்க, சகோதரியாய் போற்ற வேண்டியவளை
வேசியை விட கீழாய் பார்ப்பதே!
குற்றமென்பது யாதெனில்
மனிதனாய் வளர்ச்சி அடையாமல் இன்றும் சில ஆண்கள்
மிருகமாய் தங்கிப் போனதே!
~~~