மழை நாட்களும், நானும்!!!
மழை நாட்களும், நானும்!!!
சிரிக்கும் பட்டாம் பூச்சிகளை
பருந்துகளிடம் விலை பேசிவிட்டு
கருகிய சறுகுகளிடையே
தவழ்ந்துக் கொண்டிருக்கும் நான்
மழை நாட்களில் மட்டும்
மீண்டும்
புது சிறகுகள் வளர்க்கிறேன்
வானவில் வரைந்த கண்ணாடியை
வாழ்க்கை சந்தையில் அடகுவைத்து
கருப்புக் கண்ணாடி மாட்டி
கனவுகள் காணாமல் குருடாகிய நான்
மழை நாட்களில் மட்டும்
மீண்டும்
வண்ணங்களில் கனவிடுகிறேன்
குதூகளிக்கும் என் உள்ளக் குழந்தையை
இரண்டாவது தெரு முனையில் தொலைத்துவிட்டு
நிற்கவும் நேரம் இல்லா பயணத்தில்
சத
ா ஓடிக்கொண்டிருக்கும் நான்
மழை நாட்களில் மட்டும்
மீண்டும்
ஜன்னலின் கண்ணீரை ரசிக்கிறேன்
நகத்தின் இடுக்கில் பொங்கிய பூக்களை
நகச்சாயங்களுக்காய் விலை மாற்றி
இயந்திரமாய் இயங்கி, கசங்கி
ஓய்ந்து போன நான்
மழை நாட்களில் மட்டும்
மீண்டும்
பூக்களாய் பூக்கிறேன்
இரும்பு சங்கிலியால் இறுக
பிணைந்த உறவுகளில், என்னை
யார் யாருக்காகவோ
பச்சோந்தியாய் நிறமாற்றிய நான்
மழை நாட்களில் மட்டுமே
மீண்டும்
நானாகிறேன்
முழுதாகிறேன்...