கொலை
கொலை
வீட்டிற்கு ரக்ஷாபந்தன் கயிறுடன் வந்த பவித்ரா அண்ணன் குடித்துவிட்டு டிவியில் ஆபாசமான படம் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். எப்பதான் திருந்துவாயோ! எனக் கத்திவிட்டு டிவியை அணைத்தாள். உனக்கு கல்யாணம் செய்து வைத்தால்தான் திருந்துவாய்..இல்லையா அண்ணா! என்றபடி கையில் இருந்த கயிறை குணாளன் கையில் கட்டினாள். வேலை எப்ப வேணும்னாலும் வாங்கிடலாம். ஆனால் நல்ல பெயரைச் சம்பாதிப்பது கடினம்.
புரிந்ததா! எனக் கூறியபடி சமையலறைக்கு நகர்ந்தாள். அவள் உடையெல்லாம் ரத்தமாக இருப்பதைப் பார்த்த குணாளன் வேகமாக சமையலறைக்குச் சென்று அவள் என்ன செய்கிறாள் எனப் பார்த்தான். சமையலறைக் கத்தியைச் சிங்க்கில் கழுவிக்கொண்டிருந்தாள். தங்கை கொலை செய்துவிட்டு சர்வசாதாரணமாக கழுவறதை அவனால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. என்ன இது? எனக் கேட்டான். நீ ஆபாசபடம் கூப்பிட்டு வச்சு,பாட்டில் பார்ட்டி வைத்தாயே! எதிர் ஃப்ளாட் வீட்டுக்காரன் இன்னைக்கு மாடிப்படி ஏறும்போது அசிங்கமாகப் பேசி தகராறு செய்தான்.
அதுதான் தண்ணீர் கேன் திறக்க வைத்திருந்த கத்தியை வைத்து கொன
்றுவிட்டேன். நீ வக்கீல் என்னைக் காப்பாற்றமாட்டாயா? தற்காப்புக்காக பெண் தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம்தான். அதற்காக கொலை செய்வார்களா? இது தவறு. நீ தண்டனை அனுபவிக்க வேண்டியவள். நான் தவறுக்கு ஒருபோதும் துணை போக மாட்டேன். அப்ப குடிக்கிறது,ஆபாசபடம் பார்க்கிறது தவறு இல்லையா? அதுவும்,கொலையும் ஒன்றாகி விடுமா?
தூண்டிவிட்டு கொலை என்ற பெயரில்தானே கேஸ் பதிவாகும்.....நீ திருந்தாமல் என்னைத் திருந்து என்றால் எப்படி என ஒரு முறைப்பு காட்டினாள் பவித்ரா. அறையில் வைத்திருந்த மதுபாட்டில்களை எல்லாம் உடைத்தான். ஆபாச சிடிக்களை அள்ளி குப்பைத் தொட்டியில் அமுக்கினான்.
அடுத்து என்ன செய்வது.....என யோசித்தான்.
அண்ணா! என்றபடி அருகில் அமர்ந்த பவித்ராவை அசூயையுடன் பார்தான். இனி குடிப்பியா?படம் பார்ப்பியா?
இனி எதுக்கு இந்த கர்மம் எல்லாம்.......
அப்ப எனக்கு இந்த சிவப்பு மை தேவையில்லை என்றபடி சிவப்பு மைபுட்டியைச் சிரித்தபடி தூக்கி எறிந்ததைக் கண்ட குணாளன் பொய்யா சொன்னாய்? எனக் கத்தியபடி விளையாட்டிற்காக அவளை அடிக்க ஓடினான்.