இரயில் பயணம்
இரயில் பயணம்
அந்நியங்களை ஜீரணித்த
அகோரப் பசி
மிளகாய்பொடி விரசிய
மிருதுஇட்லியின் ருசி
சண்டையிட்டு இடம்பிடித்த
சன்னலோர இருக்கை
இதயதுடிப்பை அதிகரிக்கும்
இரவல்வாங்கிய பத்திரிக்கை
குரட்டைகளை ஊமையாக்கும்
குருட்டுகிழவன் பாடல்
மடிகளை புடைக்கவைக்கும்
மழலைகளின் ஊடல்
பழம்நினைவுகளை மேயவிடும்
பசும்புல்லின் வாசம்
கனவுகளை ஸ்தம்பிக்கவிடும்
கட்சித்தொண்டர்கள் கோசம்
குழந்தைபோல் அலரவிடும்
குகையின் இருட்டு
ம
ூக்கைச் சுழிக்கவிடும்
மூதாட்டியின் சுருட்டு
சில்லரையைத் தேடவிடும்
சிறுமியணிந்த கந்தல்உடை
வெட்கத்தை சட்னியாக்கும்
வெறித்துப்பார்க்கும் மசால்வடை
ஆற்றுப்பாலத்தை கடக்கையில்
தடக்தடக் சத்தம்
பிரியாவிடை கொடுப்பவரின்
பிரியமான முத்தம்
எதிர்வரும் இரயில்பெட்டியில்
எதிர்கொள்ளும் பார்வை
கமகமக்கும் ஏலக்காய்டீ
களைந்துவிடும் சோர்வை
இன்னும்பல அனுபவம்
இதமான இரயில்பயணம்
இணையாத தண்டவாளமாய்
இறுகிப்போகும் இரயில்சிநேகம்!!!