எதுக்கும் ஒருசத்தியம் பண்ணீரு!
எதுக்கும் ஒருசத்தியம் பண்ணீரு!


நட்பிற்கு சத்தியம்
அவசியந்தான்
நடுவினிலே உடை
படாமல் இருப்பதற்கு!
நல் உறவிற்கும் சத்தியம்
அவசியந்தான்
இடையினிலே தடை
படாமல் இருப்பதற்கு!
வாக்கினிலும் சத்தியம்
அவசியந்தான்
போக்கினிலே மாற்றம்
இல்லாமல் இருப்பத்ற்கு!
ஆனால்…
சற்றும் சலிப்பின்றி
சதிபதியாய் வாழ்கின்றோம்
சந்தோஷமாய் இருக்கின்றோம்
சத்திய நாள் நமக்கெதற்கு?
அன்பே!
சூரியனாய் நீ இருந்தால்
பகலாக நான் இருப்பேன்
சந்திரனாய் நீ இருந்தால்
இரவாக நான் இருப்பேன்
மேகமாய் நீ இருந்தால்
மழையாக நான் இருப்பேன்
கடலாய் நீ இருந்தால
அலையாக நான் இருப்பேன்
படகாய் நீ இருந்தால்
துடுப்பாக நான் இருப்பேன்
ஊர்தியாக நீ இருந்தால்
உந்துநீராய் நான் இருப்பேன்
பறவையாக நீ இருந்தால்
வானமாக நான் இருப்பேன்
மீனாக நீ இருந்தால்
நீராக நான் இருப்பேன்
மானாக நீ இருந்தால்
கானகமாய் நான் இருப்பேன்
தமிழானாக நீ இருந்தால்
பண்பாக நான் இருப்பேன்
இலக்கியமாய் நீ இருந்தால்
இலக்கணமாய் நான் இருப்பேன்
மனதாக நீ இருந்தால்
உனதாக நான் இருப்பேன்
உடலாக நீ இருந்தால்
உயிராக நான் இருப்பேன்
உயிராக நீ இருந்தால்
மூச்சாக நான் இருப்பேன்
கண்ணாக நீ இருந்தால்
பார்வையாக நான் இருப்பேன்
சர்க்கரையாய் நீ இருந்தால்
இனிப்பாக நான் இருப்பேன்
பாகற்காய் நீ என்றால்
கசப்பாக நான் இருப்பேன்
‘இல்லை’யாக நீ இருந்தால்
நாத்திகனின் கடவுள் நான்!
உற்ற நம் உள்ளத்தில்
உறுதி இல் லாதிருந்தால்
மற்றவர் இந்நேரம்
மரித்தே போயிருப்போம்!
உறுதி அற்ற அன்பு நம்
உள்ளத்தில் இருந்திருந்தால்
உயிரோடா இருந்திருப்போம்
ஒரு நாளும் இல்லை!
மேற் சொன்ன வற்றுள்
ஒன்றில்லை என்று சொன்னால்
மற்றொன்று இருப்பதற்கு
சாத்தியமே இல்லாத போது
சத்தியமாய் நமக்கிங்கு
சத்திய நாள் எதற்கு?