என் வெண்ணிலவே
என் வெண்ணிலவே


மனதை மயக்கும் மாய கண்ணாடியே.. நீ யார்?..
பார்க்கும் போதெல்லாம் சலிக்காத பரவசத்தை தருகிறாயே.. அது எப்படி?
பிரபஞ்சத்தையே இயக்கும் கதிரவனையும் கண்ணார கண்டு ரசித்தவர் எவருமிலர்!...
ஆனால் நீயோ, அவனிடம் கடன் பெற்ற ஒளியைக் கொண்டு கண்களை கவர்ந்திழுத்தாயே...அழகே...
மாதந்தோறும் ஒளியை தரும் ஆதவனும், சித்திரையில் வெப்பத்தை கொடுத்து வதக்கினாலும்,
நீ அதே சித்திரையில் முழு நிலவாய் பேரழகாய் எங்களை வசீகரிக்கும் ராஜதந்திரம் தான்.. என்னே!
ஏங்கும் போதொல்லாம் விரும்பிய முகம் காட்டும் மனக்கண்ணே..
தூங்கும் போதெல்லாம் இருள் நீக்கும் மண்விளக்கே....
மயங்கும் போதெல்லாம் மடி கொடுக்கும் மனப்பெண்ணே...
நீ இரவு தனிமை துணையே...
இளைப்பாறப் பல கதைகள் சொல்லும் நினைவலையே...
மலைகளின் சிகரங
்களிலும்,
வானில் மேகங்களிலும்,
கடலின் கரைகளிலும்
மரங்களின் கிளைகளிலும் நீ மறைந்து ஆடும் மாயக்காரி...
இரவு பயணங்களில் நீ ஜன்னலோர தோழி..
வழியெங்கும் துணை வரும் நீ வானுலகின் ராணி...
வருடங்கள் கடந்தாலும் வயதேறா வரம் பெற்றவள் நீ...
வறுமையில் இருப்போருக்கும் வஞ்சகம் இல்லா ஒளி தருபவள் நீ..
தென்றலும் முகிலுமாய் நீ உலா வரும் இரவுகளில் வானம் விழாக்கோலம் கொண்டதுவே..
தேய்ந்து வளரும் தேவதையே நீ வான் பெற்ற ஒப்பில்லா வெண் முத்தே...
படிப்பறிவு அற்ற பாமரனையும் செய்யுள் படைக்க வைக்கும் பால் வண்ண அழகே..
உழைத்து களைத்து உறவற்று தூங்கும் பலருக்கும் நீ தானே அருமருந்தே..
உன்னைச் சொல்லச் சொல்ல வார்த்தைகள் முடியவில்லை..
எண்ண எண்ண நினைவுகள் கொள்ளவில்லை என் வெண்ணிலவே....