வல்லன் (Vallan)

Classics

4  

வல்லன் (Vallan)

Classics

வேலுநாச்சி 2

வேலுநாச்சி 2

4 mins
534


முந்தைய அத்தியாத்துக்கான இணைப்பு


https://storymirror.com/read/story/tamil/3dy8jfow/veelunaacci/detail


அத்தியாயம் 3 குற்றாலக் கலவரம்


நாட்டு மக்களின்‌ நல்லாசியுடனும், பெரியோர்களின் வாழ்த்துடனும், பெற்றோர்களின் பேராசியுடனும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. சேது நாட்டு இளவரசி இனி சிவகங்கை நாட்டு இராணி வேலுநாச்சியானாள்.


புதுமணத்தம்பதிகள் தேனிலவு செல்ல வேண்டாமோ? நம் அரச தம்பதிகளும் சென்றார்கள் தேனிலவுக்கு குளுகுளு தண்ணீர் ஒடி வந்து எட்டி குதிக்கும் குற்றாலமலைக்கு. 


வசந்தகாலத்தில் அல்லவா வந்திருக்கின்றனர், மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. மாமரம் கனிகளின் பாரம் தாங்காமல் கிளைகள் முறிந்திடுவது போல வளைந்து தொங்குகின்றது, பலா மரத்திலோ பருத்துப் பெருத்த காய்கள் எல்லாம் வேரடியிலே உருண்டு திரண்டு கிடக்கின்றன... ஒன்று தெரியுமா வேரில் பழுத்த பலாவின் சுவைக்கு அமுதமே தோற்றுவிடும். ஓங்கி வளர்ந்த பாக்குமரங்கள் எல்லாம் கழுத்து பாரம் தாங்காமல் தொங்கிக் கிடக்கின்றன, நல்ல குலைகள் தள்ளிய தென்னை மரங்கள் காற்றில் அசைந்து அசைந்து ஆடுகின்றன, அறுபதடி கமுக மரங்கள் சடைவிரித்தாற் போன்று நிற்கின்றன. வானரங்களும் மந்திகளும் மர நிழலில் மடியில் படுத்து கொஞ்சிக் கொண்டும், குழாவிக் கொண்டும் விளையாட்டோடு காதல் புரிந்துக் கொண்டிருக்கின்றன. குயில்களும் குருவிகளும் கிள்ளைகளும் குழவிக் குழவி கொஞ்சு மொழியில் கெஞ்சிப் பாடுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் வற்றாத நீர்வளம் உள்ளதால் பசுமையே போர்வையாக உள்ளது குற்றாலம். சுருங்கச் சொன்னால் பூமியின் பூத்துக்குலுங்கும் சோலைச் சொர்க்கம்.

              

இங்கே மான்களும் மீன்களும் துள்ளி விளையாடும். மான்களை வேட்டையாட வேங்கைப்புலியும், மீன்களைக் கொத்த கொக்குகளும் பதுங்கி, காத்து நின்றிருக்கும். இதுவே இயற்கை சமநிலையைத் தக்கவைக்க எடுக்கும் நடவடிக்கை. என்ன ஒரு விந்தையான சமநிலைச் செயல், தான் படைத்த உயிர்கள் ஒன்றை ஒன்று மற்றொன்றின் பிடியில் வைத்து கட்டுப்படுத்துவது என்பது உண்மையிலேயே வியப்புதான். இயற்கை அவ்வளவு எளிதில் விளங்கிடாது, அதுவே அதன் சூட்சுமம். ஆனால் ஏனோ இந்த மனித இனம் மட்டுமே தன் இனத்தை அழிப்பதோடு பிற உயிரினங்களையும் சேர்த்தே அழிக்கின்றது. 

மனிதன் பூமிக்கு வரமா சாபமா என்றால் நிச்சயமாக சாபம்தான், தன் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையின் எழிலைச் சிதைக்கும் சின்ன புத்தியுடைய மட்டமான விலங்கு அவன்.


ஆனால் அவன் தன்னைத்தானே பகுத்தறிவைப் பெற்ற உயர்ந்த இனம் என்று எந்த எண்ணத்தில் பறைசாற்றிக் கொள்கின்றான் எனத் தெரியவில்லை. அன்றைய நாட்களில் இந்த தொந்தரவு இல்லை, மக்களும் இயற்கையோடே இயைந்து வாழ்ந்தனர். 


அரச பரிவாரங்கள் புடைசூழ பல்லக்கில் நாச்சியாரும் , குதிரையில் மன்னன் முத்துவடுகநாதரும் இரண்டு நாள் பயணமாக குற்றாலத்தை அடைந்தனர். இவர்களின் வருகைக்காக வசந்த மாளிகை பூரண அலங்காரத்துடன் புதுப்பொலிவுடன் மிளிர்ந்தது. அகிலின் தூபம், சந்தனத் தூபம் எல்லாம் அரைக்காத தூரம் முன்னரே மூக்கைத்துளைத்தன. அதுமட்டுமல்லாது வருபவர்களுக்கு உணவு வேறு தயாராகிய நிலையில் நெய் மணம் ஒருபக்கம், பட்டை லவங்கம் போட்டு செய்த கிழங்கு கறி ஒருபக்கம், வறுத்துக் கொட்டிய முந்திரி வாசம் பால்பாயாசத்தில் இருந்து ஒருபக்கம், குழம்பு தாளித்த கருவேப்பிலை மணம் ஒருபக்கம் என வருவோர் அனைவருக்கும் பசியைத் தூண்டியவண்ணம் ஊர் முழுக்க மணம்பரப்பின. 

            

வந்தவர்கள் களைப்பு நீங்க ஓய்வெடுத்து, குளித்து முடித்து புத்துணர்ச்சி பெற்று வந்து பண்டங்களை ஒரு கை பார்த்தனர். மற்றவர்கள் உணவின் மீது நாட்டத்தைச் செலுத்த நம் இளஞ் ஜோடிகளோ காதலில் லயிக்க தோட்டத்திற்குச் சென்றுவிட்டனர். நல்ல அந்திவேலையில் பூக்கள் எல்லாம் மலர்ந்து சுகந்தம் பரப்பி காதலின் சாயம் பூசின அந்த வனத்திற்கு. கண்கள் ஒன்றை ஒன்று சந்தித்தன, நிலை குத்திட்டு நின்றன, அரவம் ஏதும் கவனிக்கவில்லை, பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன, சரசம் பேசிக்கொண்டன, சண்டையிட்டன அப்பப்பா அந்த கண்கள் என்ன என்ன வேலை செய்கின்றன சற்று நேரத்துக்குள். 

             

தனக்கும் வெட்கப்படத் தெரியும் என்று அன்றுதான் நாச்சியாருக்கும் தெரிகிறது, அதனால்தான் என்னவோ இன்னமும் அதிகமாக வெட்கப்பட்டு கன்னங்கள் நல்ல ரோஜாப்பூ நிறத்தில் மாறின. இதைக்கண்ட தேவருக்குச் சிரிப்புதான் வந்தது. என்ன அரசியாரே தாங்கள் வெட்கப்பட ஏதேனும் வகுப்பு சென்றீரோ என வம்பிழுக்க, நாச்சியார் முகத்திலே பொய்க்கோபம் காட்டி ஆமாம் ஆமாம் எதிரே உள்ளாரே ஒருவர் அவரிடம் தான் கற்றுக்கொண்டேன் எப்படி வெட்கப்படுவது என்று எனத் தேவரை வம்பிழுத்தாள், இருவரும் பேச்சிலே கில்லாடிகள் தானே. 


இப்படியே உரையாடல்கள் வளர்ந்து வளர்ந்து ஊடலில் சென்று முடிந்தது. பல்லாண்டு கூடி வாழும் தம்பதிகளுக்கே இது இயல்பு என்றால் புதுமண ஜோடிகள் மட்டும் என்ன விதிவிலக்கா? வேலுநாச்சி பிணக்கு கொண்டு வேறுபுறம் திரும்பி நிற்க, தேவரும் வனத்தின் சற்று உட்பகுதிக்குள் சென்றான் சுற்றிப்பார்க்க. சிறிது நேரத்துக்குள் உட்புறம் இருந்து சலசலப்பு வரவும் என்னவென்று படபடப்புடன் விரைந்து சென்றாள் நாச்சியார். தேவரை எதிர்த்து பாயத் தயாராய் இருக்கிறது நிணத்திலே ஊறி ஊண் உண்டு களித்துத் திரியும் வேங்கைப்புலி ஒன்று. இதனைக் கண்ட அரசியார் புலியின் கவனத்தைத் திசை திருப்ப அருகில் இருந்த ஒரு கோல் எடுத்து புலி மீது எறிந்தாள். கோவங்கொண்ட புலி நாச்சியார் நின்ற திசை நோக்கி பாய்ந்து வரத்தொடங்கியது. இதைத் தன் சமயோசிதத்தால் முன்னமே ஊகித்த நாச்சியார் மரத்தின் முன் சென்று நின்று கொண்டார். புலி நெருங்கியவுடன் சாதாரணமாக ஒரு எட்டு எடுத்து அந்தப்பக்கம் வைக்க, வந்த வேகத்தில் நிதானமிழந்த புலி மரத்தில் முட்டி மாண்டுபோனது. இவையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்தவை.


 என்னதான் வேகம் இருந்தாலும் விவேகம் வேண்டும் என்பதற்கு வேலுநாச்சியே உதாரணம். நாச்சியாரின் வீரத்தைக் கண்ட தேவர் மெய்சிலிர்த்து, கேள்விப்பட்டதை இன்றுதான் கண்ணால் காண்கிறேன் நாச்சியாரே என்று வியப்பில் இருந்து மீளாதவராய் வார்த்தைகளை உதிர்த்தார். 


சிறிது நேரத்திற்குப் பின் இருவரும் மாளிகைக்குச் சென்று உணவருந்தி விட்டு அவர்கள் அறைக்குச் சென்றனர். இருவருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ள அதிக ஆசை, அன்றைய இரவு முழுதும் இருவரும் பேசியே கழித்தனர். பொழுது விடிந்ததும் அனைவரும் குற்றாலநாதர் கோவிலுக்குக் கிளம்பினர். மலை மீது அழகான சிற்ப வேலைகள் நிறைந்த சிறிய கோவில் தான் என்றாலும் மனதுக்கு நிறைவைத்தரும்படி இருந்தது. 


அந்த மலையில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் காவலாக உள்ளதால் என்னவோ குற்றாலநாதராகி மலை மேல் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் அந்த இறைவன், எதிர் வரும் காலத்தில் நடப்பனவற்றையும் சேர்த்தே.‌‌..


Rate this content
Log in

Similar tamil story from Classics