உலகின் உயிர்
உலகின் உயிர்


அன்று வழக்கத்தைவிட வெயில் கூடுதலாக இருந்தது.'தேனு ..தேனு' என அழைத்துக் கொண்டு
சரக்.. சரக் என்னும் செருப்புச் சத்தத்துடன் சபாபதி வீட்டின் வெளியே வந்து நின்றார். தேனு என்று
அழைக்கப்படும் தேன் மொழி, இதோ வந்துட்டேன்பா .. எனக் கூவிக்கொண்டே கதவைத்
திறந்தாள். முகத்தில் மலர்ச்சியுடன் கதவைத் திறக்கும் மகளின் முகத்தைப் பார்த்ததும் மனதில்
ஒரு சிலிர்ப்புத் தோன்றியது.வறுமைத் தாண்டவமாடும் சூழ்நிலையிலும் மலர்ச்சியுடன் இருக்கும்
முகத்தை பார்த்ததும் பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடின. மகளைப் பார்த்ததும் ஏனோ தாயின்
நினைவு தோன்றியது. எல்லா தந்தைக்கும் இப்படிதான் தோன்றுமோ !என நினத்துக் கொண்டார்.
' சாப்பிட வாங்கப்பா' எனக்கூறிக் கொண்டே சாப்பாட்டினை எடுத்து வைத்தாள். நீ சாப்பிட்டியாமா? எனக்கேட்டுக்கொண்டே சபாபதி சாப்பிட அமர்ந்தார். லோன், கிடைசுதாப்பா..
எனக்கேட்கும் மகளிடம் பதில் கூறத்தெம்பில்லாமல்' கிடைச்சுடும்மா',-என சாப்பாடு சாப்பிடுவது
போலக் குனிந்துக்கொண்டார்.
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மகளுக்கு பக்கத்து ஊரிலே பதினோராம் வகுப்பு படிக்க ஆசை,வானம் பொய்த்துப் போனதால் பயிர் கருகி விளைச்சல் இல்லாமல் போனது, ஆடி
மாதம் விதைவிதைச்சு தை மாதம் அறுவடையில்லாமல் போனது,சுத்தமாக கையில் காசில்லை,
பக்கத்தில் உள்ள மில்லில் மனைவி வேலைக்குச் செல்கிறாள், அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடக்கிறது. பேங்கில் லோன் கிடத்தால் போர் போட்டாவது ஒரு போகம்
பார்க்கலாம் என மனது அலைகிறது.
சாப்பிட்டானதும் வெளியில் வந்து வயக்காட்டைப் பார்த்தார். கண்ணீர் வந்தது, துக்கம்
தொண்டையடைத்தது. முப்போகம் விளைந்த பூமி, அச்சயப்பாத்திரம் போல் வாரிவழங்கியது.
பச்சை பசேல் என்று வயக்காடு, பூத்துக்குலுங்கும் மாமரம், சலசலவென்று ஓடும் வாய்க்கால்,
எல்லாம் நினைவில் வந்து குலுங்கி குலுங்கி அழுதார்.
யாரை நொந்து கொள்வது, ஆறு, ஏரியெல்லாம் பாதி பிளாட்டாக மாறியிருந்தது,தண்ணீர் இல்லை,வானமும் பொய்த்து விட்டது. கடன் வாங்கி பயிர் செய்ததெல்லாம் வீணாகிப்போனது.
திரும்பவும் பேங்க் லோன்கேட்டுச் சென்றார்.கிடைக்கவில்லை.ஏற்கனவே கொடுத்த பணம்
சரியாகக் கட்டவிலை என மறுத்துட்டாங்க.என்னசெய்வதென்று தெரியவில்லை.
அவருக்கு தெரிந்ததெல்லாம் விவசாயம்தான்.மனைவி நிலத்தை கம்பெனிகாரனுக்குக்
கொடுத்துவிட்டு, டவுனுக்கு போகலாம் என்று சொன்னது நியாபகம் வந்தது,மனது ஏற்க பொழுது போச்சு மனைவி வேலை முடிச்சு வந்துட்டா.மனதுக்குத் தெம்பாக
இருந்தது.அவள் ஏதாவது ஆறுதலாச் சொல்வாள் என்று நினைத்தார்.ஆனால்....அவள் பேச்சு வருத்தத்தைத் தந்தது.
ஏங்க ,லோனுக்குப்போய் அலையாதீங்க ,கொடுக்க மாட்டாங்க,ஏற்கனவே வாங்குன லோனுக்கு
வட்டியும் கட்டல்ல பேசாம நிலத்த கொடுத்திடலாங்க என்றாள்.நாட்கள் ஓடியது.'தேனு நல்ல மார்க் எடுத்திருக்கா பக்கதில டவுன் ஸ்கூல்ல படிக்க வைக்கனும்'நிலத்தை விக்க சம்மதம்னு
கம்பெனி காரனுக்கு சொல்லிட்டு வாங்க என்றாள்.
ஆச்சு, நிலத்துக்கு அட்வான்ஸ் தொகை வாங்கியாச்சு,டவுனுல வீடு ஒத்திக்குப் பார்த்தாச்சு,
தேனுக்கும்,மனைவிக்கும் சந்தோசம் பிடிபடல.
நிலத்த கிரயம் செய்து கொடுத்தாச்சி.வீட்டு சாமான் எல்லாம் லாரில ஏத்தியாச்சி,
அப்போ மனைவி,' ஏங்க ஏர்கலப்பை,மத்த உழவு சாமானெல்லாம் என்ன செய்யிறதுன்னு'
கேட்கி றாள்.சபாபதிக்கு என்ன சொல்றதுன்னு தெரியிலே,
ஏர்கலப்பையெல்லாம் தடவிப்பார்கிறார். மனசு வலிக்குது.அப்படியே வெளியே வருகிறார்,
நிலத்தை பார்கிறார்,அரக்கன் உயிர் கிளில இருக்கிற மாதிரி அவர் உயிர் விவசாயம் என
புரிந்துபோனது. அப்படியே மண்ணில் சரிகிறார் உயிர் பிரிகிறது.