DEENADAYALAN N

Abstract

4.8  

DEENADAYALAN N

Abstract

முதல் முதலாய்

முதல் முதலாய்

2 mins
137


கோவையில் பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி! அங்குதான் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்! கல்லூரிக்கு பேருந்தில்தான் சென்றேன். கல்லூரி வாசலிலேயே பேருந்து நிறுத்தம். இறங்கி கல்லூரிக்குள் நுழைந்தேன்.


சிலர் காரில் வந்து இறங்கினார்கள். முதல் நாள் என்பதால் நிறைய கூட்டமாய் இருந்தது. ஆண்கள் கல்லூரிதான் என்றாலும் முதுகலை வகுப்புகளில் மட்டும் சில பெண்கள் இருப்பார்கள் என்று சொல்லியிருந்தார்கள்.


கல்லூரி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையை நோக்கி சென்றேன். யாருக்கு எந்த பிரிவு, எந்த வகுப்பு என்கிற விபரங்கள் அங்கே தான் வெளியிடப்பட்டிருந்தது. மிகுந்த கூட்டம் இருந்ததால் உள்ளே புகுந்து சிரமப் பட்டு விவரங்களை சேகரித்துக் கொண்டு வெளியே வந்தேன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்பட டிக்கட் கௌண்டர் கூட்டத்தில் புகுந்து சட்டையெல்லாம் கசங்கி வெளியில் வந்தது போன்ற அனுபவம்.


அலைந்து திரிந்து வகுப்பைத் தேடி கண்டு பிடித்து வகுப்பினுள் நுழைந்த போது ஆசிரியர் – மன்னிக்கவும் – பேராசிரியர் இன்னும் வந்திருக்கவில்லை. முன் வரிசை இருக்கைகளும் பின் வரிசை இருக்கைகளும் நிரம்பி விட்டன. நான் இடைப்பட்ட வரிசையில் ஒரு ஓர இருக்கையில் அமர்ந்தேன்.


அருகில் இருந்த மாணவர், கையில் ஒரு நாற்பது பக்க நோட்டுடன் அமர்ந்திருந்தார்.  ‘நாமும் ஒரு நோட்டு வாங்கி வந்திருக்கலாமோ' என்று தோன்றியது. இருவரும் சிறிது நேரம் எம்.ஜி.ஆர் / நம்பியார் போல் விரைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். பின் நானே சரண்டர் ஆகி, ‘நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சீங்க’ என்று ஒரு பிட்டைப் போட்டு ஆரம்பித்து வைத்தேன். அவர் பெயர் ஜெய்குமார். என் பெயரை சொன்னேன். சிறிது நேரத்தில் மற்றொரு மாணவர் வந்து எங்கள் வரிசையிலேயே அமர்ந்தார். ‘நீஙக் எந்த ஸ்கூல்‘ என ஆரம்பித்து பரஸ்பரம் பெயர்களைப் பரிமாறிக் கொண்டோம். அவர் ஷாநவாஸ்கான். நான்காவதாக நாகராஜன் என்னும் மாணவர் எங்களுடன் ஐக்கியமானார்.


(அந்த வருடம் முழுவதும் நாங்கள் நான்கு பேரும் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்தோம்)


ஆசிரியர் வந்தார். மிகவும் இளைஞர். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். அந்தக் கல்லூரியிலேயே எம்.எஸ்.சி படித்து முடித்து, அங்கேயே எங்களுக்கு வகுப்பெடுக்க நியமிக்கப் பட்டிருந்தார். நாங்களும் ஒவ்வொருவராக எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம்.


ஒரு மாணவர் ஆசிரியரை கிண்டலடிப்பது போல் ஏதோ சொன்னார். ‘இப்பொதான் காலேஜிலே நுழைஞ்சிருக்கே. நீயே இந்த ஆட்டம் போட்டா, ஆறு வருஷமா இங்கேயே படிச்சி இங்கேயே உனக்கு ‘லெக்சரரா வந்திருக்கற நான் எவ்வளவு ஆட்டம் போடுவேன்’ என்று சொல்ல, ‘சாரி’ என்று அந்த மாணவன் எழுந்து நின்றான். ‘உட்கார்’ என்று சொல்லி விட்டு அடுத்த மாணவனிடம் வந்தார்.



அடுத்த வகுப்பு பாடத்தை  எடுக்க    ஒஸ்மான் சேட் என்னும் ஆங்கில ஆசிரியர் வந்தார். அவரும் இளைஞர்தான். ஆங்கிலத்தில்தான் பேசினார். நிறைய நீதிகள் சொன்னார். அம்மா அப்பா கஷ்டம், மாணவர்களின் பொறுப்பு, பிற்காலத்தில் அம்மா அப்பாவுக்கு எப்படி உதவ வேண்டும் என்றெல்லாம் சொன்னார். வகுப்பில் நடந்து கொண்டே இருந்தவர் என்னருகில் வந்ததும் நின்றார். என்னை நோக்கி ஆங்கிலத்தில், ‘எதிர் காலத்தில் திடீரென்று உன் அம்மாவோ அப்பாவோ உடல் நிலை சரியில்லாமல் நோயாளியாக மாறி விட்டால் நீ அவர்களை வைத்து காப்பாற்றுவாயா?’ என்று கேட்டுக் கொண்டே என் கண்ணில் என்னைப் பார்த்தார். நான் சிறிதும் தயங்காமல் ‘In such a situation it is my duty Sir’. என்றேன். “Excellent Answer” என்று சொல்லி விட்டு மெதுவாக நகர்ந்து விட்டார். (உயர்நிலைப் பள்ளியில் நான் ஆங்கில மொழி வழி படித்திருந்ததால் ஆங்கிலம் எனக்கு சிரமமாக இருக்கவில்லை)


கல்லூரியில் என் முதல் நாள் நினைவு!


Rate this content
Log in

Similar tamil story from Abstract