Joyson Joe Jeevamani

Drama Inspirational Others

4  

Joyson Joe Jeevamani

Drama Inspirational Others

கோடை

கோடை

2 mins
227


மற்றவர்கள் வரும் முன் ஜீவா வந்துவிட்டான். கூட்டம் ஆரம்பிக்க ஐந்து நிமிடமே உள்ளது.

ஜீவா தான் அதைச் செய்ய வேண்டி வரும். வேறு யாரும் செய்ய வாய்ப்பில்லை. பக்கத்து வீட்டிலிருக்கும் இருவரும் வயதானவர்கள். மேல் வீட்டில் கைக்குழந்தையுள்ள குடும்பம். மற்றொரு மேல் வீட்டிலிருப்பவர் இரவு நேர வேலைக்கு செல்பவர். காலை ஏழு மணிக்கு தான் வீட்டுக்கு வருவார். நிச்சயம் அவரையும் செய்ய சொல்லமாட்டார்கள். மீதியிருப்பது ஜீவா வீடு மட்டும் தான். அதனால் அவன் தான் அந்த வேலைக்கு சரியான ஆள்.

"இந்த முறை ஜீவா தம்பி தினமும் காலை ஆறு மணிக்கு மாடிக்கு சென்று எல்லாருடைய வீட்டின் தண்ணீர் வால்வுகளையும் திறக்க வேண்டும். சரியாக அரைமணி நேரம் கழித்து மீண்டும் மூடிவிட வேண்டும். அவ்வளவு நேரம் ஏறிய தண்ணீர் தான் அன்றைய நாள் முழுவதும் நமது நான்கு வீட்டுக்கும் கிடைக்கும் நீர். சிக்கனமாக செலவு செய்யுங்கள். கோடை காலம் முடியும்வரை இதே நிலை தான்."

கீழ்வீட்டு பெரியவர் சொன்னவுடன் அனைவரும் கலைந்து சென்றனர். முடிவு தெரிந்த கூட்டம் இனிதே நிறைவுற்றது.

முதல் நாள். காலை 5:55-க்கு திருமதி ஜீவா அவனை எழுப்பிவிட்டார். தூக்க கலக்கத்துடன் மேலே ஏறிச்சென்றான். வால்வுகளை திறந்துவிட்டு வேகமாக வீட்டுக்குள் வந்து படுத்துக்கொண்டான். மீண்டும் 6:25-க்கு மனைவி எழுப்பிவிட்டார்.

"அதற்குள்ளவா!" அங்கலாய்த்துக் கொண்டே மேலே ஓடினான். 

வால்வுகளை அடைத்துவிட்டு மீண்டும் வந்து படுத்தான். ஆனால் தூக்கம் கலைந்துவிட்டது. ஒரு வாரத்திற்கு இதே நிலை நீடித்தது.

மேல் வீட்டில் குடியிருந்திருந்தால் இவ்வளவு தூரம் ஏறவேண்டியிருந்திருக்காது. கீழ் வீட்டை தேடி குடிபோனது எவ்வளவு பெரிய தவறு என்று தன்னையே நொந்துகொண்டான்.

அடுத்த வாரம் புதிய யோசனையை செயல்படுத்தினான். 5:55-க்கு மேலே செல்பவன் 6:30-க்கு தான் திரும்ப வீட்டுக்கு வருவான். ஏறியிறங்கும் நேரத்திற்குள் கொஞ்சம் தூங்கலாமே! மேலே ஒரு உட்காரும் கருங்கல் இருந்தது அவனுக்கு வசதியாகிவிட்டது. கொஞ்சம் இளைப்பாறுதல் கிடைத்தது. ஆனால் ஓரிரு நாள் தான் அது நீடித்தது.

"நான் மட்டுமே தண்ணீர் நிரப்பிக்கொண்டிருக்கிறேன். அரை மணிநேரத்தில் எல்லாவற்றிலும் நிரப்ப முடியவில்லை. போதாகுறைக்கு பாத்திரங்கள் அனைத்தையும் நானே கழுவவேண்டும். இரண்டையும் நான் இங்கு செய்ய நீங்கள் மட்டும் நிம்மதியாக தூங்கலாமா! கூடாது. வேலைகளை பிரித்துக்கொள்வோம். வால்வுகளை திறந்துவிட்டு வந்து நீங்களும் தண்ணீர் பிடியுங்கள். நான் மற்ற வேலைகளை செய்கிறேன்." ஜீவாவின் திட்டத்திற்கு அவனுடைய மனையாள் எழுதிய முடிவுரை இது.

தன் பாதியின் இந்த கோபத்தை..... இல்லை! கோரிக்கையை..... இல்லை! கோட்பாட்டை ஜீவாவால் நிராகரிக்க முடியவில்லை. செயல்பட ஆரம்பித்தான். நள்ளிரவில் தூங்கச்செல்பவன் இரண்டு மணிநேரத்திற்கு முன்பாக தூங்க ஆரம்பித்தான். முதல் வெயிலுக்கு முன்பாக எழ ஆரம்பித்தான். முடிந்தவரை காலை பணிகளில் மனைவிக்கு கைக்கொடுத்தான். பின் வேலைக்கு செல்வான்.

கோடை காலம் முடிந்தது. தண்ணீர் தட்டுப்பாடு விலகியது. தடையின்றி தண்ணீர் கிடைக்க ஆரம்பித்தது. மாடி ஏற வேண்டிய பணிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் ஜீவாவின் நடைமுறை வீட்டிற்குள் தொடர்ந்தது. கோடை கற்றுக்கொடுத்த பாடமாக அதை ஜீவா கருதினான்.


கருதுவோம்!


Rate this content
Log in

Similar tamil story from Drama