கண்ணாடி
கண்ணாடி
கணித ஆசிரியர் திருத்தப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு அமர்ந்தார்.
அச்சமயம் ஆசிரியரை நோக்கிச் செல்லவிருந்த அருணை தடுத்து நிறுத்தினான் அவன் நண்பன் பிரேம்.
ஒரு மதிப்பெண்ணிற்காக அவரிடம் வசை வாங்க போகிறாயா? பேசாமல் உட்காரு!
அருணை அடக்க முயற்சித்தான் பிரேம்.
அதெப்படி சும்மாவிட முடியும். இந்த ஒரு மதிப்பெண் கிடைத்தால் எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும். கணிதத்தில் நூறு மதிப்பெண் என்றால் சாதாரண காரியமா என்ன!
உடனடி பதில் வந்தது அருணிடமிருந்து.
அதெல்லாம் சரிதான். ஆனால் நீ அந்த ஒரு மதிப்பெண் கேள்விக்கு இரண்டு விடையை எழுதியிருக்கிறாய். சரியான விடை 'ஆ'. ஆனால் நீ முதலாவது 'இ' என்று எழுதிவிட்டு பின்பு அதை அடித்து 'ஆ' என்று சரி செய்துள்ளாய். பின்பு எப்படி முழு மதிப்பெண் கிடைக்கும்? ஆசிரியர்தான் ஏற்கனவே எச்சரித்திருந்தாரே. சரியான விடையை தேர்ந்தெடுக்கும் கேள்விகளுக்கு ஒரே ஒரு பதில்தான் எழுத வேண்டும். அதையும் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். ஒரு வேளை அப்படி எழுதியிருந்தால், அது சரியான விடையாக இருந்தாலும் மதிப்பெண் கிடையாது.
ஆசிரியரின் இந்த எச்சரிக்கையை அருணுக்கு நியாபகப்படுத்தினான் பிரேம்.
அருண் அந்த எச்சரிக்கையை மறுக்கவில்லை. ஆனாலும் தான் செய்தது நியாயம் என்பதால் தைரியமாக ஆசிரியரை அணுகினான்.
சார்! இந்த கேள்விக்கு நான் எழுதிய விடையை அடித்து சரியான விடையை எழுதினதால்தான் மதிப்பெண் வழங்கவில்லையா?
தன் கேள்வியை அச்சமின்றி கேட்டான் அருண்.
ஆமாம்! அதிலென்ன சந்தேகம். முன்பாகவே இது குறித்து நான் அனைவருக்கும் சொல்லியிருந்தேனே. அதுமட்டுமில்ல ஒரு வேளை நீ யாரையாவது பார்த்து திருத்தியிருக்
க வாய்ப்பு இருக்கிறதல்லவா! எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்? அதனால் நான் செய்தது சரிதான். ஒரு மதிப்பெண் குறைவதால் ஒன்றும் குறையபோவதில்லை. இது வெறும் இடைக்கால தேர்வுதான். அடுத்து வரும் அரையாண்டு தேர்வில் இது போன்ற தவறு செய்யாமல் முழு மதிப்பெண் எடுக்க முயற்சி செய். நீ போகலாம்.
ஆசிரியர் அருணை மடை திருப்பினார்.
போகிறேன் சார்! ஆனால் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு மதிப்பெண்ணிற்காகவோ அல்லது முழு மதிப்பெண் பெறுவதற்காகவோ இதை விரும்பவில்லை. தேர்வு எழுதும் போது ஏதோ ஒரு அவசரத்தில் முதலாவது தவறான விடையை எழுதிவிட்டேன். ஆனால் இறுதியில் அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதிய பின்பு மீண்டும் எல்லாவற்றையும் சரிபார்த்தேன்.
அப்போதுதான் நான் செய்த தவறு எனக்கு தெரிந்தது. உடனே அந்த விடையை ‘ஆ’ என்று திருத்தினேன். எனக்குள் ஒரு மன திருப்தி ஏற்பட்டது. மீள்பார்வை செய்வது நன்மையானது என்ற படிப்பினையை கற்றுக்கொண்டேன். தவறு செய்யாமல் இருப்பது நல்லதுதான். ஆனாலும் தவறுவது இயல்பானது. அதே சமயம் அந்த தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்போது திருத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்யாமலிருப்பதுதான் அந்த தவற்றை செய்ததைவிட மிகப்பெரிய பிழை. சார்! இந்த மதிப்பெண் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்த வாழ்க்கை பாடம் கிடைத்த திருப்தி எனக்கு இருக்கிறது.
இப்படி சொல்லிவிட்டு மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பின அருணை நிறுத்தினார் ஆசிரியர். அவனுடைய விடைத்தாளை வாங்கினார். முழு மதிப்பெண் வழங்கினார். இந்த மதிப்பெண் உன்னுடைய செயலுக்கான என்னுடைய பரிசு என்று பாராட்டி அனுப்பிவைத்தார் ஆசிரியர்.