முரண்
முரண்
மாலை ஏழு மணி. விளையாட்டில் மூழ்கியிருந்தாள் எழில். சீக்கிரம் உள்ளே வந்து படிக்க ஆரம்பிக்கும்படி அம்மா கண்டித்தார். வெறுப்புடன் எழில் வீட்டிற்குள் வந்தாள். அப்போது அலுவலகத்திலிருந்து அவளுடைய அப்பாவும் வந்தார்.
இன்னுமா படிக்க ஆரம்பிக்கவில்லை? அப்பாவின் அனல் கேள்வி இது.
நாளை பள்ளிக்கு விடுமுறைதான். அதனால் இன்று ஒரு நாள் படிக்கவில்லையென்றால் ஒரு பிரச்சனையுமில்லை. எழிலின் பதில் இது.
படிப்பு காரியத்தில் எதையும் தள்ளிப்போடவோ தாமதிக்கவோ கூடாது. நீ வளருகின்ற பிள்ளை. நாங்கள் சொல்லாமலே நீ எல்லாவற்றையும் செய்யப் பழக வேண்டும். வற்புறுத்திச் செய்ய வைக்க நீ ஏதும் அறியா குழந்தையில்லை.
அப்பாவின் பரிவான வார்த்தைகளைக் கேட்டுப் படிக்க ஆரம்பித்தாள் எழில்.
அடுத்த நாள். காலை பத்து மணியிருக்கும். அப்பா தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். எழிலிற்கு ஆச்சரியம். அன்று அப்பா அலுவலகம் செல்லாமலிருந்ததே அந்த வியப்பிற்குக் காரணம்.
இன்று வாக்கெடுப்பு நாள். அதனால் எனக்கும் விடுமுறைதான். சொல்லிவிட்டு மீண்டும் செய்தியில் ஆழ்ந்தார் அப்பா.
நீங்கள் ஓட்டுப் போடப் போகவில்லையா அப்பா? மகளின் கேள்வியை எதிர்கொண்டார் அப்பா.
எனக்கும் உன் அம்மாவும் தூத்துக்
குடியில்தான் ஓட்டு இருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து போய்விட்டு வர எப்படியும் பாதி நாள் போய்விடும். இரண்டு ஓட்டுதானே. போனால் போகட்டும். வாக்களித்தாலும் யாரும் பாராட்டப் போவதில்லை. வாக்களிக்காவிட்டால் தண்டிக்கவும் போவதில்லை. எதற்கு இந்த வீண் அலைச்சல்? வீட்டிலேயே பொழுதைக் கழிக்கலாம். அப்பாவின் விளக்கம் வந்தது.
இது தவறில்லையா? எழில் வினவினாள்.
இது சுதந்திர நாடு. ஓட்டுப் போடுவதும் போடாததும் தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம். யாரும் அதைப் பறிக்க முடியாது. தன் தத்துவத்தை முன்மொழிந்தார் அப்பா.
அம்மாவிடமிருந்து எதிர்ப்பு எதுவும் வரவில்லை. இருவருமே ஒருமனப்பட்ட நேரம் அது. ஏதும் பேசாமல் எழில் சென்றாள்.
ஒரு நாள் படிக்கவில்லையென்றால் பிரச்சனை. ஆனால் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை செலுத்தும் வாக்கைச் செலுத்தாமல் போனால் பிரச்சனையில்லை. தன் பெற்றோரின் முரண்பாடான சிந்தனையை அலசினாள் எழில். யாருடைய வற்புறுத்தலும் வாழ்த்துதலும் இல்லாமல் சுதந்திரமாக (தாமாக) முன்வந்து அனைவரும் வாக்களிக்கும் காலம் வரனும். என்னுடைய எதிர்காலத்தில் அதை நான் செய்வேன். அது சுதந்திர இந்தியாவின் எதிர்காலம். சத்தமற்ற சக்திவாய்ந்த எழிலின் உறுதிமொழி இது. #FreeIndia.