மர்மம்
மர்மம்
ஆனந்த் என் நண்பன். ஆலோசனை மையத்திற்கு அன்று நம்பிக்கையுடன் சென்றார். மூன்று மாத மருத்துவ சிகிச்சை முடிந்தது. ஆலோசனையின் கடைசி நாள் அன்று. ஆலோசகரின் உறுதுணையால் அவர் மனநிலையில் நல்ல மாற்றம்.
மது குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை. குடும்பத்தில் நிம்மதி துளிர்விட ஆரம்பித்தது. அப்பா! என்று அழைக்கும் அன்பு மகளின் பார்வையில் முன்பிருந்த பயம் இல்லை. குடிகார கணவனை இனி நம்ப வேண்டாம். தானே வேலை செய்து குடும்பத்தை கவனிப்பது தான் ஒரே வழி என்ற எண்ணத்தை மாற்றிவிட்டார் ஆனந்தின் மனைவி. குடியை விலக்கிய பின்பு பல மாற்றங்கள்.
இப்படியாக எண்ணங்கள் அவரது மனதில் பறந்தன. மழை பெய்ய ஆரம்பித்தது. அருகிலிருந்த பூட்டிய கடையின் மறைவில் ஒதுங்கினார். சிறிது நேரத்திற்குள் வானம் வழிவிட்டது. மறுவாழ்வு மையத்திற்கு தொடர்ந்தார்.
"நான் எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே நீங்கள் மாறிவிட்டீர்கள். இவர் அனைவருக்கும் ஒரு முன் மாதிரி".
அனைவர் முன்பும் ஆலோசகரின் இந்த பாராட்டில் பெருமிதம் கொண்டார்
. சாதனை பல நிகழ்த்தியது போன்ற ஓர் உணர்வு.
குடும்பத்தாரும் தன்னை பாராட்டுவர் என்றே நினைத்து வீட்டிற்கு வந்தார்.
"நீங்க மாற போவதில்லை. நானும் என் மகளும் கண்காணாத இடத்திற்கு போகிறோம். அப்போதாவது உங்களுக்கு புத்தி வரட்டும்".
இப்படி கோபத்தைக் கொட்டினார் அவருடைய மனைவி. ஏன் இந்த கோபம் என்று தெரியாது ஆனந்த் நின்று கொண்டிருந்தார்.
- மழைக்கு ஒதுங்கியது ஒரு மதுபான கடையில் என்று தெரியாது.
- தன் மனைவியின் தோழி அதை பார்த்துவிட்டார் என்றும் தெரியாது.
- "உன் கணவர் உன்னை ஏமாற்றுகிறார். இன்று மதுபான கடையில் அவரைப் பார்த்தேன். மழை நேரத்தில்கூட மது குடிக்க முனைகிறார்.கடை பூட்டியிருந்ததால் சென்றுவிட்டார். இல்லையென்றால் நிச்சயம் குடித்திருப்பார்". தோழி தன் மனைவியிடம் இப்படி சொன்னதும் அவருக்கு தெரியாது.
- அதை உண்மையென நம்பிய பின்பு தான் தன் மனைவி இப்படி பேசினார் என்றும் அவருக்கு தெரியாது.