parthasarathy srinivasan

Comedy

5  

parthasarathy srinivasan

Comedy

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

3 mins
4


இந்த விளையாட்டை இப்படித்தான் சொல்ல வேண்டும். "ஜ" என்பது வடமொழியாயிற்றே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் வேறு வழியில்லை. சல்லிக்கட்டு என்று சொன்னால் மிக சல்லித்தனமாக இருக்கும். ஏறு தழுவுதல் என்று சொன்னால் யாருக்கும் புரியாது. அதனால் உங்கள் தமிழுணர்வை சற்றே அமைதிப்படுத்தி விளையாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 


இந்த விளையாட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. வீரம் என்றால் வழக்கமான வீரம்தான். மிரண்டால் எகிறுவது, மிரட்டினால் பம்முவது. இந்த விளக்கம் தெளிவாக இல்லை என்று கருதுபவர்கள் தயவுசெய்து தொலைக்காட்சியைத் திறந்து தமிழில் ஏதாவது ஒரு செய்தி ஊடகத்தை தேர்ந்தெடுங்கள். அனைத்து செய்தி ஊடகங்களிலும் நேரடி ஒளிபரப்பு. காலை 8 மணியிலிருந்து தொடர் நேரலை. தொடர் என்றால், விளம்பர இடைவெளிகளோடுதான். ( நாங்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?).


வாடிவாசல் என்று ஒரு சின்ன திறப்பு இருக்கிறது. அதன் வழியாக ஒவ்வொரு மாடாக - சரி காளையாக - அவிழ்த்து விடப்படுகின்றன. கிட்டதட்ட 350க்கும் மேற்பட்ட காளைகள் இந்த வாடிவாசல் வழியாக வருவதற்கு வரிசையில் காத்திருக்கின்றன - கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு. ஒரு 

 நிமிடம் வைத்தால் 6 மணி நேரமாகும். அதனால் ஒரு காளைக்கு ஒன்று அல்லது இரண்டு நிமிடத்திற்கு மேல்கொடுக்க வாய்ப்பில்லை. நாம் தேவர் படங்களில் எம்ஜிஆரோ சிவாஜியோ சித்தரித்தது போல் 15 அல்லது 20 நிமிடங்கள் மாட்டுக்கும் மனிதனுக்கும் போராட்டம் நடக்கும் என்று நினைத்தால் ஏமாற்றம்தான்.

வெளியே வந்த காளைகளில் பெருமளவு எனக்கும் இந்த விளையாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நீளமான மைதானத்தில் ஒரே ஒட்டமாக ஓடிவிடுகின்றன. நமது வீரர்களால் அவற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. பொதுவாக மிரண்டு ஓடும் மாடுகளில் ஓரளவு மெதுவாக ஓடும் மாடுகளின் மீது மூன்று அல்லது நான்கு பேர் பாய்ந்து அதன் வேகத்தை மேலும் குறைக்கிறேன் ஆகும். அது திமிறி தொற்றியவர்களைக் கீழே தள்ளுகிறது. ஒருவர் மட்டும் மேலும் 10 அல்லது 20 நொடிகள் மாட்டின் திமிலைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்கிறார். உடனே மைக் பிடித்து "காம்பியர்" செய்பவர், "மாடு, பிடிமாடு. மாடு பிடிமாடு" என்று அறிவிக்கிறார். "தம்பி, வந்து எவர்சில்வர் அண்டாவை வாங்கிக்கப்பா." என்கிறார். மேடையிலிருந்து பரிசை அளிக்கும் நபர் அண்டாவைக் கீழே போட வீரர் காட்ச் பிடிக்கிறார். அவரிடமிருந்து அண்டாவை வாங்கி வைத்து அவரைத் தனது வீர விளையாட்டைத் தொடரச் செய்ய சில நண்பர்கள் அல்லது உறவினர்கள் காத்திருக்கின்றனர். ஒரு சில மாடுகள் ஓடவும் செய்யாமல் யார் கையிலும் பிடிபடாமல் ஒரு இடத்தில் நின்று ஒரு சுற்று சுற்றி அனைவரையும் எட்டத்தில் நிறுத்துகின்றன.மாடு சில நொடிகள் அப்படி நின்றால், "மாடு பிடிமாடு இல்லை. அருமையா சுத்துது. மாடு ஜெயிக்குது" என்கிறார் அறிவிப்பாளர். உடனே மாட்டுக்காரருக்கு ஒரு பரிசு வழங்கப்படுகிறது. இரண்டு பக்கமும் பரிசுகள் "ஸ்பான்சர்" செய்யப்படுபவை தான். வெறும் வேட்டியில் இருந்து சொகுசு கார் வரை பட்டியல் நீள்கிறது. உள்ளூர் பெரியதலைகள், வார்டு கவுன்சிலர், மேயர், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதலமைச்சர் என்று பரிசளிப்பவர்களின் பட்டியல் நீள்கிறது. இவர்கள் யாருமே தங்கள் வீட்டுப் பிள்ளைகளை இந்த விளையாட்டில் ஈடுபடுத்தி தமிழர் பண்பாட்டை மேம்படுத்துவதில்லை என்பது வெள்ளிடை மலை.


  வீரர்களில் 80% பேர் மாட்டின் வழியில் நிற்காமல் தள்ளி நிற்கின்றனர். சிலர் சவுக்கு கம்புகளால் கட்டப்பட்ட வேலிகள்மீது பாதுகாப்பாக நிற்கின்றனர். காவலர்கள் சிலர் மைதானத்துக்குள் நிற்கின்றனர். அவர்களும் அடிக்கடி வேலிகள் மீது ஏறும் சூழல் ஏற்படுகிறது. பாவம் அவர்கள் நிலை பரிதாபம். மாடுகளுக்கு சாதியில்லை என்றாலும் , மாட்டின் சொந்தக்காரருக்கு சாதி உண்டு. மாடுபிடி வீரருக்கும் சாதி உண்டு. இந்த போட்டிகள் நடைபெறும் இடங்கள் பெரும்பாலும் வீரத்தின் விளை நிலமான மதுரையைச் சுற்றி - அலங்காநல்லூர், ஆவணியாபுரம், பாலமேடு. பாலமேட்டில் இந்த சண்டைகளைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகமே எடுத்து நடத்துகிறது - பொங்கலை ஒட்டி 3 நாட்களில் 4500 மாடுகள், 12000 போட்டியாளர்கள், 3000 காவல் துறையினர் பங்குபெறும் முக்கிய நிகழ்வு இது. உலகமுதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் லட்சக்கணக்கான கோடிகள் முதலீடு வந்து பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படும் நேரத்தில் தமிழர்கள் மாடுபிடித்துக் கொண்டு இருந்தால் வருபவர்கள் யாரை வேலைக்கு எடுப்பார்கள் என்று கேட்பது புரிகிறது. இதற்கு பதில் சொல்லி என் தமிழ்ப்பற்றைக் குறைத்து மதிப்பிட நான் அனுமதிக்க மாட்டேன். இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம். வடமாநிலத்தவர் வந்து வேலை செய்யட்டும் அவர்களும் எங்களை நம்பி ஓட்டுப் போடும் பட்சத்தில் அவர்களையும் தமிழர்களாக  ஏற்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.


வாழ்க தமிழ். வளர்க தமிழகம். 

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. உங்களால் நிற்க முடியாது என்றால் உட்கார்ந்து கொண்டே தமிழனென்று சொல்லுங்கள்.


Rate this content
Log in

Similar tamil story from Comedy