அப்பா யார்?
அப்பா யார்?
சந்தத்தில் சிக்கிய வார்த்தைகளாய், அந்த இரண்டு சுட்டிகளும் கையைக் கோர்த்துக்கொண்டு, துள்ளிகுதித்து வந்துகொண்டிருந்தனர். அவள் அவர்களைப் பார்த்து புன்னகை பூத்துக்கொண்டிருந்தாள், மனதிலும், இதழிலும். மழலைகள் என்றுமே மனித இனத்தை பிரதிபலிப்பதில்லை.
ஏதோ பரிணாமத்தில் தனியே கிளைவிட்ட இனமாகத் தோன்றுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டாள். அம்மா, அம்மா, “என்னோட அப்பா யார்?” என்று மூச்சு வாங்கிக் கொண்டே சந்தம் இசைத்தது, குதித்து வந்த சுட்டிகளில் ஒன்று. அந்தக் கேள்வியை ஆறு வருடங்களாக அவள் எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள் என்றாலும், அதற்கான பதிலை காலம் வரும்போது தீர்மானித்துக் கொள்ளலாம் என்றே விட்டுவைத்திருந்தாள்.
அவள் அவனிடம் பேச ஆரம்பிப்பதற்குள், “டேய் உனக்குப் புடிச்ச பட்டாம்பூச்சி பார்டா” என்று அவனோடு துள்ளிவந்த இரட்டைக் குடிமி சுட்டி அவனைத் தரதரவென இழுத்துப் போய்க்கொண்டிருக்கையில், அவளின் மனம் அவளை ஏழு வருடங்களுக்கு முன் அழைத்துக்கொண்டு போனது.
இன்று அவனிடம் அதைப் பற்றிப் பேசியே தீரவேண்டும் என்ற முடிவுடன், அந்த சிறுவர்களுடன் மொட்டைமாடியில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே ஆடிக்கொண்டிருந்தாள் அவள். “அக்கா, அக்கா” என்று அந்த சிறுவர்கள் அனைவரும் அவர்கள் பங்கிற்கு அவளை மேலும் நனைத்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தை முடித்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்ததும், அவனுக்குப் போன் செய்தாள்.
இன்னிக்கு சாயங்காலம் உன்னைப் பார்த்து பேசவேண்டும் என்றாள். அவன் இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கு, ஷாப்பிங் பண்ணனும். நீ உன்னோட வெட்டி கதையெல்லாம் என்னோட ஷாப்பிங் பண்றப்போ சொல்லு. 2 மணிக்கு மீட் பண்லாம் என்று போனைத் துண்டித்தான். ஷாப்பிங் பண்ணப் போறயோ, ஷாக்கிங் ஆகப் போறயோ, என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் அவனைப் பார்க்கப் போய்க்கொண்டிருந்தாள்.
மழை பெய்து ஓய்ந்துவிட்டிருந்ததால், சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக்கிடந்தது. அதை வெவ்வேறு வாகனங்கள் வெவ்வேறு விதமாக சிலுப்பிவிட்டுப் போய்க்கொண்டிருந்தன. இந்த பிரபஞ்சமும் அப்படித்தானே, அது தேக்கிவைத்த விஷயங்களை வெவ்வேறு மனிதர்களும் வெவ்வேறு விதமாக வாழ்ந்து சிலுப்பிவிட்டுப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டாள். திடீரென அவள் கண்களுக்குள் பூக்கள் பூத்தன.
அந்த மழலைக் கூட்டம் தண்ணீரில் குதித்து வர்ணம் தெளிக்கையில் சிலும்பிய நீர் கூட சிரித்துக்கொண்டது அவர்கள் பிஞ்சுப் பாதங்களில். குழந்தைகளைப் பார்த்துவிட்டாள் அவள் ஏனோ உலகை மறந்து விடுகிறாள். அந்த மழலைக் கூட்டத்தைக் கண்ணில் தேக்கிக்கொண்டு அந்த ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தாள் அவள்.
அவளைப் பார்த்ததும் அவன் என்ன விஷயம் சொல்லு என்றான். அவர்கள் பார்மல் டாக்கையெல்லாம் கடந்து 25 வருடங்களாகி விட்டது. ஆம் புத்தகத்தில் இறகை வைத்துவிட்டு, பத்து நாட்கள் கழித்து அது குட்டி போட்டதா? என்று பார்த்துக் கொண்ட நாட்களில் இருவருக்கும் பங்குண்டு. இரு சொல்றேன் என்றாள் அவள். உடனே அவன் தன் அமெரிக்கா பயண திட்டங்களைப் பற்றி பேச ஆரம்பித்தான். இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கு, தலைக்கு மேல வேலை இருக்கு என்றான்.
அவள் தேக்கிவைத்த எண்ணங்களை சிலுப்பிவிட்டாள். என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு இஷ்டம் இருக்கா? என்று கேட்டாள். நெவர் என்றான் அவன். அந்த பதிலை அவள் எதிர்ப்பார்த்திருந்ததால், உடனடியாக அடுத்த வினாவை உடைத்தாள். எனக்கு உன்னிடமிருந்து ஒரு குழந்தை வேண்டும். தருவாயா என்றாள்.
அவன் அவளைப் பார்த்து, ஐயம் சாரி டூ சே திஸ், எனக்கு உன் மீது எந்த விதமான உடல் ஈர்ப்பும் இல்லை. ஐ டோன்ட் தின்க் ஐ கேன் ஹேவ் செக்ஸ் வித் யூ என்றான். அவள் அந்த பதிலையும் தாண்டி முன்னோக்கிப் போகத் தன்னை தயார் படுத்தி வைத்திருந்தாள். ஹௌ அபௌட் யூ டொனேட் யுவர் ஸ்பெர்ம் என்றாள்.
யூ மீன் ஆர்டிபிஷியல் இன்செமினேஷன்? ஆமாம் என்றாள். ஆனா இன்னும் நான்கு நாட்கள் தான் நான் இங்கு இருப்பேன் என்றான். நான் ஏற்கனவே ஒரு கருவுருதல் மையத்தில் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிட்டேன் என்றாள். இன்னிக்கு 7 மணிக்கு ஒரு விசிட், நாளான்னைக்கு காலையில் ஒரு விசிட். அவ்ளோதான். இரண்டு முறை டொனேட் பண்ணனும். உன் மருத்துவ விவரங்கள், மற்றும் வாழ்க்கைமுறை பற்றி எல்லாம் அவர்களிடம் பேசிவிட்டே
ன், விண்ணப்ப படிவத்திலும் எல்லாம் எழுதிவிட்டேன் .
ஆனால் உன் பெயரை எங்கும், யாரிடமும் குறிப்பிடவில்லை என்றாள். அவன் ஒருகனம் அவள் கண்களை ஊடுருவிப்பார்த்தான். ஒருதலைக் காதலுக்காக வாழ்நாள் முழுவதும் அவனையே நினைத்துக்கொண்டு, அவன் வாரிசை வளர்த்துக்கொண்டு சுகம்காணும் கடைந்தெடுத்த அசட்டுக் கூட்டத்தைச் சேர்ந்தவள் அவள் அல்ல என்று அவனுக்குத் தெரியும். பின்பு எதற்காக இது என்று அவள் கண்களில் பதிலைத் தேடிக்கொண்டிருந்தான். பதிலுக்காக தவித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. சரி போகலாம் என்றான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் அந்த கருவுரும் மையத்திற்கு வந்திருந்தார்கள். செயற்கையாக கருத்தரிக்க உதவும் அந்த மையம், இயற்கைவளம் நிரம்பிய ஒரு சோலைக்கு நடுவே இருந்தது. மனித இனம் ஒரு முரண்பாட்டு மூட்டை என்று நினைத்துக்கொண்டே அவன் அவளோடு நடந்து சென்றுகொண்டிருந்தான்.
அப்பொழுது ஒரு பட்டாம்பூச்சி அவனின் கவனைத்தை ஈர்க்கவே, சில நிமிடங்கள் அங்கேயே நின்றுவிட்டான். “அப்படி என்னதான் அந்த பட்டாம்பூச்சில இருக்கோ! எங்க பார்த்தாலும் நின்னுட வேண்டியது” என்று அவனை இழுத்துக்கொண்டே நடந்தாள் அவள். பட்டாம்பூச்சிகள், பறவைகளைப்போல் அல்லாமல், தங்கள் உடலைவிடவும் பல மடங்கு பெரிதான சிறகுகளை மேலும் கீழும் மடக்கிப் பறப்பதில்லை. அவைகள் தங்கள் உடலினை சுருக்கிக்கொண்டு 8 பேட்டர்னில் பறக்கின்றன. அதைப் பார்க்க அழகாக இருக்கும் அவைகளின் சிறகுகள் வண்ணக்களஞ்சியம் மட்டுமல்ல சர்வைவல் சீக்ரட்டும் கூட என்று விளக்கம் அளித்துக்கொண்டே அவள் இழுப்பிற்கு நடந்தான்.
அவர்கள் உள்ளே சென்றதும், எல்லா செயல்முறைகளும், மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தன. அவன், அவள் நிரப்பிவைத்திருந்த விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட்டான். பின்பு அந்த மையத்தின் தலைமை மருத்துவர் அவர்களிடம் உரையாடினார். இந்த முறையை அவள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் கேட்டார். அவன் அவள் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தான். நத்திங் ஸ்பெசிபிக், ஷெக்ஷூஅல் செலக்ஷனுக்கான ஒரு பெண்ணின் உள்ளுணர்வு. அவ்வளவுதான் என்றாள்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இருவரும் அங்கிருந்து வெளியேறினர். அவர்களில் இயல்பு வாழ்க்கைத் தொடர்ந்தது. இரண்டாவது முறையும் எல்லாம் சுமுகமாக நடந்தது. இந்த முறையில் கருத்தரிப்பது அத்தனை எளிதல்ல, 50% தான் வெற்றியின் விகிதம் என்று மருத்துவர் கூறினார். அவளின் உள்ளுணர்வு ஏனோ 100% என்று கூறியது. அவள் தான் இன்னும் ஒரு வாரத்தில் அங்கு வந்து அட்மிட் ஆகுவதாக கூறிக்கொண்டு, இருவரும் கிளம்பினார்கள்.
அடுத்த நாள் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர். நான் உன்னை ஒன்று கேட்கவா என்றான். அவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். எல்லாம் நல்லபடியாக நடந்து குழந்தை பிறந்தால், அதனிடம் அதன் “அப்பா யார் என்று கூறுவாய்?” என்று கேட்டான்.
கண்டிப்பாக உன் பேரை சொல்ல மாட்டேன் என்றாள். இம்முறை அவன் புன்னகைத்தான். அவள் வீட்டிற்கு வந்து அங்கிருந்த வாண்டுகளிடம் வம்பு இழுத்துக்கொண்டிருந்தாள். அவன் மேலே பறந்து கொண்டிருந்தான். அடுத்த வாரம் அவன் உயிர்அணு அவள் கருமுட்டையினுள் நுழைந்து கொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் அடிக்கடி போனில் பேசிக்கொண்டனர், பிறந்த குழந்தையைத் தவிர்த்து, மற்ற எல்லாவற்றை பற்றியும். அவன் திருமண வாழ்க்கையைப் பற்றியும்.
அவள் சட்டென சிலுப்பிக்கொண்டு பட்டாம்பூச்சியின் பின் ஓடிக்கொண்டிருக்கும் தன் பையனைப் பார்த்தாள். அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தது. அவன் மனைவிக்குக் குழந்தை பிறக்காது என்று கன்பர்ம் செய்துவிட்டதாகவும் ,அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவுசெய்துவிட்டார்களெனவும் கூறிவிட்டு அவன் போனை துண்டித்தான்.
அவன் குரலின் சோகத்தை அவளால் உணரமுடிந்தது. அவனுக்கும் தன்னைப் போலவே குழந்தைகளை மிகவும் பிடிக்கும் என்று அவளுக்குத் தெரியும். திடீரென மீண்டும் சந்தம் இசைத்தது. அம்மா, என் அப்பா யார்னு கேட்டேனே? அது கொஞ்சம் நீளமான பேர்டா செல்லம் என்றாள். பரவாயில்லை சுருக்கி சொல்லு என்றான். “டிக்” என்று கூறினாள். வாட்? என்று முகம் சுளித்தது அந்த வாண்டு. Deserving Y Chromosome (DYC) என்றாள். ஓஹோ! என்று தலையாட்டிக்கொண்டே அந்த சந்தம், இரட்டைக் குடிமி சந்தத்தின் இழுவையில் குதித்துக்கொண்டே போனது.