வீட்டில் கிடைக்காத ஜாங்கிரி
வீட்டில் கிடைக்காத ஜாங்கிரி


நாவில் உமிழ்நீர், கண்களில் கண்ணீர்;
உடலில் சிலிர்ப்பு, உள்ளத்தில் களிப்பு;
கைகளுக்கு எட்டாத விதம்,
கண்ணாடிப் பேழைக்குள் அமுதம்;
அப்பாவிடம் கேட்கத் தயக்கம்,
கிடைக்குமா என்ற மயக்கம்;
அம்மாவிடம் கண்களின் மௌனமொழி,
அவளுக்கு மட்டும் கருணைக் கடைவிழி.
வீட்டில் கிடைக்காத ஜாங்கிரி!
ஸ்வீட்கடை வாசலில் பார்த்து ஏங்கும்
அந்த எட்டு வயதை நினைக்கிறேன்.
கையில் கிடைத்தும் விள்ள மனமில்லை,
அதன் அழகைக் கொல்ல மனமில்லை,
பார்த்துப் பார்த்து ரசிக்கிறேன்,
மெல்ல மெல்ல ருசிக்கிறேன்.
இன்று.....
கல்யாண விருந்தில் அமைதியாய்
இலையில் அநாதையாய்
இடக்கையால் புறந்தள்ள
இதோ மூலையில் அமர்ந்திருக்கிறது
பாதிப் பேருக்கு சர்க்கரைவியாதி!