புரிதல்...!
புரிதல்...!
வாழ்வின் புரிதல்...!
உறக்கம் வராத இரவுகளில்
வெளியிருட்டு பழகியதால்
உள்ளிருட்டின் விஸ்வருபம்
புலப்படும்போது,
மனதின் அழுக்குகள்
மனித ஜென்மத்தின்
தவிர்க்கமுடியாததாகி
ஒவ்வொன்றாக விரியும் போது
பழைய கவலைகள்
நிகழ்காலத்தைப் பாழாக்கும்
போது
எதிர்கால பயங்களும்
நிகழ்வை நிலைகுலையச் செய்யும் போது
மனதின் உள்நோக்கி
ஆராயப் பயப்படும் போது
ஒவ்வொரு வருடமும்
முடிவின் எல்லைக்கு நகர்த்தும்போது
எப்படித்தான்
வாழ்ந்து தொலைப்பது என்று
இத்தனை வருடங்களாகியும்
புரியாத போது
எதற்காக வாழ்கிறோம்
என்று சஞ்சலப்படும்போது
வாழ்வே எதற்கென்று
புரியாத போது
எதையோ தேடித்தேடி ஓடும்போது
தேடுவது கிடைத்தாலும்
இதைத்தான் தேடினோமாவென தெரியாமலே மீண்டும் ஓடும்போது
உள்ளுக்குள் வைத்தக்கொண்டு
ஊரெல்லாம் ஏன்டா தேடுகிறாய்
என நடுமண்டையில்
நச்சென்றடித்துப்
புரிய வைக்கிறதே ஒரு குரல்!
அதுதான் ஆன்மாவின் குரல்!
அதன் வெளிச்சத்தில்
மனதின் இருட்டு ஆடைகளை
ஒவ்வொன்றாய்க் களைந்து
நிர்வாணமானால் தான்
எதற்காக வாழ்கிறோம்
என்பது புரியவேண்டிய
அவசியமில்லை என்று புரியும்!