என்ன தவம் செய்தனை?
என்ன தவம் செய்தனை?


வண்ணத்துப் பூச்சியே!
எத்தனை… எத்தனை… வண்ணமடி
உன் சிறகில்!
வானவில்லின் வண்ணம் கொண்டு….
இரவிவர்மன் தூரிகையினால் தீட்டியதோ?
அவன் கைவண்ணத்தில் உண்டான கலையழகோ?
ஊசியினும் மெல்லிய உறிஞ்சுக் குழலை யாரிடம் பெற்றாய்?
கண்ணனவன் கரத்திலிருந்த குழலோ?
நீ சிறகடித்து செல்லும் அழகை கண்டு
என் சிந்தை மயங்குதடி!
உன்னைப்போல் உல்லாசமாய்
சிறகடித்துப் பறக்க...
உள்ளம் ஏங்கிக் கிடக்குதடி!
மலரவள்…. பூப்பெய்திய சேதியை…
சுகந்தத்தைக் காற்றினில் பரப்பி…
உனக்கு தென்றலைத் தூது அனுப்பினாளோ?
அல்லது வண்டினை அனுப்பினாளோ?
அவள் புன்னகை சிந்தும் இதழ் கண்டு
…..
காதல் மயக்கம் கொண்டு
மெல்லிய இதழ் சுவைத்து…
அவள் படைத்திட்ட மதுரசம் பருகி……
போதையில் களியாட்டம் போடுகிறாயோ?
சின்னஞ்சிறு புழுவாய் உலா வந்த நீ….
சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சியாய்….
உருமாறிய மாயமென்ன?
பார்ப்போரையெல்லாம் உன் அழகில் கிறங்கடிக்கிறாயே!
‘கம்பளிப்பூச்சி’ என அருவருப்போடு
கண்ட விழிகளெல்லாம்…
உன் அழகைக் கண்டு
வியப்பில் மிளிருகிறதே!
கூட்டுக்குள் உன்னை சிறையிட்டுக் கொண்டு…..
இறையவனை வேண்டி
உன் குறையதனைக் கூறி…
என்ன தவம் செய்தனை?
பிரம்மன் இத்தனை அழகாய் செய்தான் உனை!
கொஞ்சம் சொல்லிவிட்டுத்தான் போயேன்……