Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

வல்லன் (Vallan)

Classics

5.0  

வல்லன் (Vallan)

Classics

வேலுநாச்சி 8

வேலுநாச்சி 8

3 mins
206


அத்தியாயம் 10 காளையார் கோயில் போர்


தெற்கத்திய சீமையில் வரி தராமல் எதிர்த்த பாளையங்கள் மூன்று இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை. அதில் இராமநாதபுரம் இப்போது நவாப்பின் பிடிக்குள் வந்துவிட்டது. நவாப்பின் அடுத்த இலக்கு சிவகங்கை சமஸ்தானம். ஆனால் முத்துவடுகநாதரை நேரடியாக எதிர்கொள்வது சிங்கத்தின் வாயில் தலையை விடுவதற்குச் சமம். என்ன செய்வது ? எங்கு போனாலும் நிழல் போல பின் தொடரும் ‌மருது சகோதரர்கள். எப்படி முத்துவடுகநாதரைக் கொல்வது? 


நரிகளுக்கு என்ன திட்டம் தீட்ட கற்றுத்தரவா வேண்டும்? துரோகத்தால் வளர்ந்த நவாப் அரசு, வஞ்சத்தால் வளர்ந்த வெள்ளையர்கள் கூட்டனிப் பொருத்தமே பத்துக்குப் பத்து.


எப்போது என நாள் பார்த்து குறிக்காத குறை ஒன்றுதான். நெடுநாட்களாக ஒற்றர்களைக் கொண்டு தேவரின் நடவடிக்களையும், என்ன செய்கிறார் என இடைவிடாது கண்காணித்தனர். தேவர் எப்போது, எந்த நேரத்தில் எங்கே யாருடன் இருப்பார், எப்பெப்போது எங்கெல்லாம் செல்வார், எப்படிச் செல்வார் என அனைத்தையும் நன்கு ஆய்ந்து அறிந்து வியூகம் வகுத்தனர் வெள்ளையர்களும் நவாப்பும் சேர்ந்து. 


முத்து வடுகநாதரை ஆலோசனை செய்து சமாதானம் பேசலாம் என தூது அனுப்பினார் நவாப்பு. 


தூது வந்தது யாருக்கும் சரியெனத் தோன்றவில்லை. அனைவரும் ஒரே மனதாக மன்னரை சமாதானத் தூதுக்கு போகவேண்டாம் என மறுத்தனர். ஆனால் மன்னரோ அதனைப் பொருட்படுத்தாமல் பதிலுக்குத் தான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருவதாக செய்தி சொல்லிவிடும் என சொல்லிவிட்டு விடுவிடுவென உள் அறை நோக்கி விரைந்தார். 


சமாதான பேச்சுவார்த்தை நடத்த குறித்த நாள் நிறைந்த பௌர்ணமி நன்னாள். முத்து வடுகநாதர் என்றும் தவறாது நிறைந்த பௌர்ணமி அன்று காளையார் கோயில் இறைவனை தரிசிப்பது வழக்கம். கோயிலுக்குச் செல்லும் போது என்றும் துணைக்கு இருக்கும் மருது சகோதரர்களை வேறு வேலைகளைப் பார்க்க அனுப்பிவிடுவார். உடன் காவலுக்கு எந்த வீரனும் இருக்கமாட்டான். தானும் தற்காப்புக்கென்று ஒரு ஆயுதமும் எடுத்துச் செல்லவும் மாட்டார். 


வெள்ளையன் குறி வைத்தது தப்பவில்லை. கழுதைப்புலிகள் விரித்த வலையில் சிங்கம் அகப்படப் போகிறது. இராணி வேலுநாச்சிக்கு மனது ஏனோ பெரும் பாரமாக சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது அன்று. 


தேவர் கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்து ஆலோசனைக்குச் செல்வதாக உத்தேசம். எல்லாமே அதன்படியே நடந்தது. தேவர் இளைய நாச்சியார் கௌரியையும் உடன் அழைத்து வந்திருந்தார். 


இதற்கிடைப்பட்ட நேரத்தில் திருச்சி கோட்டையில் படைகள் இரு பிரிவாகப் பிரிந்து தளபதி ஸ்மித் தலைமையில் ஒன்றும் மற்றொன்று பாஞ்சோர் தலைமையிலும் தயாராக இருந்தது வீரிட்டு புறப்பட.


இதே நேரத்தில் இராணி வேலுநாச்சி இரகசிய படை ஒன்றை முத்துவடுகநாதரைத் தொடர்ந்து கண்காணிக்க அனுப்பி வைத்தார். 


வஞ்சகத்தை நெஞ்சுக்குள் வைத்து நல்லவன் போல் நடித்து புறமுதுகில் குத்துபவர்கள் தானே நாட்டில் ஏராளம். அதே போல் தான் அன்று நம்பி வந்த ஒரு மனிதனை சிறிதுகூட அரசியல் ரீதியான நாகரிகம் இல்லாமல் நயவஞ்சகமாக கொல்ல துணிந்திருந்தனர் படுபாவிகள். 


நிலையில்லா இவ்வுலகிலே ஏன் இந்த நிலையற்ற மனிதன் மட்டும் இவ்வளவு வஞ்சனையும் ஆசையும் நிறைந்து கொடுவிலங்கினும் கேவலமாய் இருக்கிறான் என்பது ஏனோ இன்றளவும் விடை தெரியாக் கேள்வியாக மட்டுமே இருக்கிறது. 


கோயிலில் இருந்து வெளியே வந்த முத்துவடுகநாதரும் இளையநாச்சியாரும் வண்டியில் ஏறும் தருணம் அது, பரங்கிப்படை அவர்களைச் சூழ்ந்து கொண்டது. கர்னல் பாஞ்சோர் கொடூர சிரிப்புடன் அவர்களை வளைய வளைய சுற்றிவந்தான். இதற்குள் வேலுநாச்சி அனுப்பியிருந்த இரகசியப் படை தேவரைப் பாதுகாக்கும் பொருட்டு முன்னுக்கு வந்தது. அவர்கள் என்னவோ வெறும் ஏழு பேர்தான், வந்த பரங்கியர்களோ இருநூற்றுக்கும் அதிகமானவர்கள். 


இதே நேரத்தில் இந்த கொடூரச் செய்தி சிவகங்கை அரண்மனை அந்தப்புரத்துக்கு எட்டியது. 


மேலும் இன்னொரு இன்னல் சிவகங்கைக்கு வருவது சற்று நேரத்தில் பெரியதொரு அதிர்ச்சியாக இருந்தது. தளபதி ஜான்சன் ஸ்மித் தலைமையில் பெரும் படை ஒன்று வருகிறது என்பது தான் மற்றொரு அதிர்ச்சி. இந்த பரங்கிப்படைகளை மருது சகோதரர்கள் சமாளிப்பதாகவும், இராணி வேலுநாச்சியாரையும் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரையும் தளபதி தாண்டவராயனுடன் தப்பித்துச்செல்லுமாறு கோட்டையைவிட்டு இரகசியமாக அனுப்பி வைத்தனர்.


இராணி வேலுநாச்சி பாதி வழி செல்லும் போது ஒற்றன் மூலம் செய்தி வந்தது... சிவகங்கை சிங்கம், மறவர் குல மாணிக்கம் பரங்கியன் பாஞ்சோர் தலைமையிலான படைகளால் சூழப்பட்டு நயவஞ்சகமாக துப்பாக்கி குண்டுகளால் கொல்லப்பட்டார் என்ற துர்செய்தி...


இனி என்னவெல்லாம் நடக்குமோ? அந்த காளையார் கோயில் ஈசனுக்கே அம்பலம்... 



Rate this content
Log in

Similar tamil story from Classics