வேலுநாச்சி 4
வேலுநாச்சி 4


முந்தைய அத்தியாத்துக்கான இணைப்பு
https://storymirror.com/read/story/tamil/gmmpp1og/veelunaacci/detail
அத்தியாயம் 6 மருதிருவர்
நீண்ட போராட்டங்களுக்கும், இழப்புகளுக்கும் பிறகு மதுரையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து நாட்டில் அமைதியை நிலைநிறுத்தினார் தேவர் முத்து வடுகநாதர்.
முக்குளம் கிராமத்தில் மொக்க பழநியப்பருக்கும் ஆனந்தாயி அம்மாளுக்கும் இரண்டு சிங்கங்கள் ஐந்து வருட இடைவெளியில் பிறந்தனர். பெரியவன் நல்ல வெள்ளை நிறம் என்பதால் வெள்ளை மருது என்று அழைக்கப்பட்டார். இளையவன் பெரியவனைவிட சற்று உயரம் குறைவு என்பதால் சின்ன மருது என அழைக்கப்பட்டான்.
அண்ணன் தம்பி இருவருக்கும் வயது வேண்டுமானால் வித்தியாசப்பட்டு இருக்கலாம், மனதளவில் ஒரு நாளும் வேறுபட்டவர்கள் இல்லை இந்த இரண்டு சகோதரர்களும்.
இளம் வயதிலேயே ஆய கலைகள் அறுபத்து நான்கும் கற்றுத் தேரந்த காராளர்கள் இருவரும். அதுவும் வளரி எறிவதில் வல்லவன் பெரிய மருது. இருவருக்கும் வாள் வேல் எல்லாம் பல் குத்தும் துரும்பு போல அப்படி அத்துப்படி.
இருந்தாலும் மூத்தது மோளை இளையது களை என்ற பழமொழிக்கு ஏற்றவாறு சின்ன மருது அரசியல் ராஜ தந்திரங்களில் புலி, திட்டம் வகுப்பது, அரச பரிபாலனம் செய்வது, வியூகம் வகுப்பது என எல்லாவற்றிலும் சுட்டி.
பெரிய மருது அப்படியே நேர்மாறு, முன்கோபம், அவசர வேலை, ஆனால் போர் கலையில் மட்டும் நல்ல கெட்டி. அண்ணன் தம்பி இருவரும் மூளையின் இரு பகுதிகள். ஒன்று பிரிந்தால் இன்னொன்று வேலை செய்யாது.
இருவரும் சிவகங்கை படையில் வீரர்களாக இணைந்தனர். அண்ணன் தம்பி இருவரது திறமையை மன்னர் நாளுக்கு நாள் கூர்ந்து கவனித்து வந்தார். மதுரை போருக்குப் பின் அரசியல் எந்தவித குழப்பங்களும் இல்லாமல் சீராக இயங்கிக்கொண்டிருந்தது.
இருந்தாலும் அவ்வப்போது பரங்கியர்களால் இராமநாதபுத அரசுக்கு பிரச்சினை வந்தது. அதற்கு உதவ வேண்டிய கடமை சிவகங்கைக்கு உள்ளதல்லவா...
மருது சகோதரர்கள் இருவரின் தீவிர உழைப்பையும் விசுவாசத்தையும் கவனித்த முத்துவடுகநாதர் இருவருக்கும் படைப்பிரிவுகளில் உயர் பொறுப்புகளையும் வழங்கி, எப்போதும் அவர்கள் இருவரையும் கூடவே வைத்துக்கொண்டார். சில சமயங்களில் அவர்களை பாளையத்தின் பிரதிநிதிகளாகவும் சில கூட்டங்களுக்கு அனுப்பினார் மன்னர். அந்த அளவுக்கு இருவர் மீதும் நம்பிக்கை. சிவகங்கை சீமை பெயரைச் சொன்னால் மருதிருவர் பேரே எங்கும் கேட்கும் அளவுக்கு புகழ் பரவியிருந்தது.
அரசியல் சூழல் அமைதியாக இருப்பது போல வெளியே தோன்றினாலும் உள்ளுக்குள் குமுறும் எரிமலையாக பரங்கியரும் நவாப்பும் பொறுமிக்கொண்டு இருந்தனர். எப்போது காலம் வாய்க்கும் எப்படி சிவகங்கையைக் கைப்பற்றுவது என. அதே நேரத்தில் ஆற்காடு நவாப் மற்றும் பரங்கியர்களுடன் தஞ்சை மராட்டியர்களும் கூட்டு சேர்ந்து இராமநாதபுரத்து அரண்மனைக்குப் பிரச்சினை உண்டு பண்ணினர். இதிலுமே சிவகங்கை தலையீடு அதிகம். இதனால் சிவகங்கையின் எதிரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அதென்னவோ அயலான் வந்து அடிமை படுத்துவதில் அவ்வளவு மும்முரம் காட்டுகிறான், உள்நாட்டு கயவர்களோ தம் மக்களையே அடிமை படுத்த மானமின்றி உதவுகின்றனர்.
காலம் தான் எவ்வளவு வலியது. தன் சக்கரத்தை எவ்வளவு விரைவாக சுழற்றுகிறது. நல்ல செழிப்போடு நாடு நன்கு முன்னேற்றம் அடைந்து மக்கள் குறையின்றி மனநிறைவோடு மட்டற்ற மகிழ்ச்சியோடு மண்ணெல்லாம் பொன் விளைத்து மனம்போல் வாழ்வு வாழந்தனர் தேவர் ஆட்சியில்.
எதிர்வரும் காலத்தில் பலபல அரிய நிகழ்வுகளும், வரலாற்று மாற்றங்களும் நிகழவுள்ளன. கால தேவி தன் சக்கரத்தின் வேகத்தில் என்னவெல்லாம் செய்கிறாள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.