Dr.PadminiPhD Kumar

Tragedy

2.9  

Dr.PadminiPhD Kumar

Tragedy

முட்டிக்குள் மூச்சு

முட்டிக்குள் மூச்சு

5 mins
233


முட்டிக்குள் மூச்சு 

   

               புனிதா பத்மநாபனிடம் ,"வேண்டாங்க ....விட்டுடுங்க .இப்போ நமக்கு என்ன குறை ? எல்லாமே இருக்கு . இனியும் நீங்க இப்படி போட்டி போட்டுக் கொண்டு உங்கள் பிரமோஷனுக்காக ரொம்பவும் ட்ரெயின் பண்ண வேண்டாம் .டாக்டர் சொல்றதைக் கேளுங்களேன்... ப்ளீஸ் ...."என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

             பத்மநாபன் சென்னையின் மிகப்பெரிய கம்பெனியின் மேனேஜர் .இளம் வயதிலேயே துடிப்போடு வேலை செய்து மேனேஜர் பதவி அடைந்ததை பலரும் பாராட்டினர் .அவன் காதல் மனைவி புனிதா அவன் மனம் அறிந்து நடப்பவள் .அவர்களின் காதல் அடையாளமாக மகன் பிரிதிவிராஜ் பிறந்ததும் பத்மநாபன் கொண்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை. சொந்தமாக பங்களா, கார் ,வேலை ஆட்கள் என வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள் அனைத்தும் அமைந்தன .

               ஹாலில் அமர்ந்திருந்த புனிதாவிடம் பத்மநாபனின் செகரட்டரி வந்து ,"இன்று மேனேஜர் ஐயாவுடன் லஞ்ச் சாப்பிட மும்பை கம்பெனி மேனேஜர் பத்ராவும் வருகிறார் அம்மா !"என்று சொல்லவும் புனிதா சமையல்காரரை அழைத்து லஞ்சில் இன்று விருந்தாளிக்காக என்னென்ன உணவுகள் தயார் செய்ய வேண்டும் எனச்சொல்லி அனுப்பினாள்.பின்னர் அவள் டைனிங் ஹாலை ஒரு நோட்டம் விட்டாள்.அழகான இம்போர்ட்டட் பெல்ஜியம் கண்ணாடி மேஜையும் அதைச் சுற்றிலும் அழகான மர வேலைப்பாடுகளுடன் கூடிய நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன .அதன் விலையே லட்சக்கணக்கில் இருக்கும் .மேஜையின் மேலே சான்டலியன் எனப்படும் அலங்கார கண்ணாடி விளக்கும், அதன் இரு பக்கமும் இரண்டு மின்விசிறிகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

               ஹாலில் இருந்து டைனிங் ஹாலுக்குள் செல்லும் கதவு அமைந்த இடைப்பட்ட சுவரில் ஒரு அலமாரியும் இணைந்து கட்டப்பட்டிருந்தது. அந்த அலமாரியில் ஹாலில் உள்ளது போலவே டிவியும் மற்ற அலங்காரப் பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.சமையலறைக்கு ஒரு கதவு எதிர் சுவரில் அமைந்திருந்தது .பக்கவாட்டின் ஒரு புறத்தில் ஒரு வராண்டா தென்படும்.வராண்டாவில் நடந்து சென்றால் வாஷ்பேசினை அடையலாம் .வாஷ்பேஷன் பக்கத்தில் ஒரு பாத்ரூம் கதவு தென்படும் .மிகவும் நேர்த்தியாக பார்த்து பார்த்து பிளான் செய்து பத்மநாபன் இந்த பங்களாவை கட்டியிருந்தார்.

               மகன் பிரிதிவிராஜ்க்கு இரண்டரை வயதாகிறது. வீட்டின் முன்னால் உள்ள புல் தரையில் அவன் ஆசைப்பட்டான் என்பதற்காக வாங்கிய வெள்ளை முயல்குட்டியை துரத்திக் கொண்டு ஓடியாடி விளையாடுவதை பார்த்து பத்மநாபனும் புனிதாவும் மனம் மகிழ்ந்து நிற்பதுண்டு. தன் மகனை தன்னைவிட மிகக் கெட்டிக்காரனாக வளர்க்க வேண்டும் என்ற உந்துணர்வால் ஊட்டி லவ்டேயில் உள்ள பழமையான பாரம்பரிய மிக்க ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கான்வென்டில் அவனுக்கு அட்மிஷன் வாங்கி இருந்தார். அந்த பால்மணம் மாறாத பச்சிளங்குழந்தையை இரண்டரை வயதிலேயே பெற்றோரை விட்டு ,உற்றார் உறவினரை விட்டு ,துள்ளி விளையாடும் வீட்டை விட்டு, ஹாஸ்டலில் தங்கி படிக்க அனுப்ப முடிவு செய்யப்பட்டது. புனிதாவிற்கு மனம் கேட்காமல் தன்     கணவரிடம்," இப்போது என்ன அவசரம் .....அவனுக்கு மூன்று வயது கூட ஆகவில்லை. இப்போதே அவனை ஹாஸ்டலுக்கு அனுப்ப வேண்டுமா?" எனக் கேட்க பத்மநாபனும் ,"உனக்குத் தெரியாது, புனிதா! இந்த உலகம் எவ்வளவு போட்டி மனப்பான்மை நிறைந்தது என்று .இந்த உலகில் வாழ்க்கையில் நாம் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அவன் இப்போதே தயாராக வேண்டும். அவன் என்னை விட மிக ஆற்றலோடு வளர்ந்தால் தான் அவனால் இந்த போட்டிகள் நிறைந்த உலகில் முன்னேறி வாழ முடியும். அவன் ஹாஸ்டலில் அந்தப் பள்ளியில் படித்து வந்தால் தான் என் லட்சியம் நிறைவேறும்." என்று உறுதியாக பதில் கொடுத்தான் .வேறு வழியின்றி ஒரு பெரிய சூட்கேசில் குழந்தைக்கு தேவையான டிரஸ் , ஸ்வெட்டர்,ஷூ, சாக்லேட், பிஸ்கட் என அனைத்தையும் பேக் செய்து "டா,டா" சொல்லிக் கையசைத்து கனத்த மனதுடன் புனிதா பிரித்விராஜை வழி அனுப்பி வைத்தாள்.

               பத்மநாபன் மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவன் .அவர்கள் வீட்டில் தாத்தா, பாட்டி ,பெரியப்பா ,சித்தப்பா, அத்தை ,மாமா ,அவர்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட ஒரு டஜன் குடும்பத்தினர்கள் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் இருந்தனர் .பத்மநாபனின் அப்பா நடுவில் பிறந்தவர் என்பதால் அண்ணன் ,தம்பி இருவரிடமும் மிகவும் பாசத்துடன் இருப்பார். வீட்டில் பொதுவாகவே மூத்த பிள்ளை என பெரியப்பாவிற்கும், கடைக்குட்டி என சித்தப்பாவிற்கும், ஒரே பெண் என அத்தைக்கும் கிடைக்கும் சிறப்பு சலுகைகள் எதுவும் பத்மநாபனின் அப்பா பார்த்தசாரதிக்கு கிடைப்பதில்லை ; அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதும் இல்லை .இதே நிலைதான் அவர்கள் குழந்தைகளுக்கும் தரப்பட்டன.

              ஒரு நாள் டிவியில் படம் பார்க்கும்போது படத்தில் அம்மா தன் மகளிடம்," ஆசைப்பட்டால் மட்டும் போதாது; அடம் பிடிக்கவும் தெரியணும்"என்று சொல்வதைக் கேட்ட பத்மநாபன் அன்று முதல் மற்ற குழந்தைகளுக்கு போலவே தனக்கும் சமமாக எல்லாம் கொடுக்கப்பட வேண்டும் என அடம் பிடிக்க ஆரம்பித்தான் .ஆரம்பித்தில் அவன் போக்கால் ஆச்சரியப்பட்ட அவன் பெற்றோர்கள் பத்மநாபன் தன் படிப்பால் அனைவரையும் விட அதிக மதிப்பெண் வாங்கி வரும்போது பூரிப்படைந்தனர்.

        

  படிப்பில் பத்மநாபனை வெல்ல முடியாது எனத் தோன்றியதால் பெரியப்பா பையன் பசுபதி அவனிடம் வீட்டிற்கு வெளியே கிரிக்கெட் விளையாடும் போது," ஐ வில் சி யு ஹியர்"என்று ஆங்கிலத்தில் சொல்வான் தன் முட்டியை மடக்கிக் காண்பித்து .உடனே என்னவென்று புரியாத போதும் பத்மநாபனும் பதிலுக்கு முட்டியைக் காட்டி," ஐ வில் ஆல்சோ சீ யூ"என்று சொல்லிக் கொண்டான்.வீட்டில் ஒரு நாள் கேரம் போர்டு விளையாடும் போது இதே போல் இருவரும் ஒருவரை பார்த்து மற்றவர் முட்டியைக் காட்டி ,"ஐ வில் சீ யூ"என்று கூறுவதைப் பார்த்த தாத்தா தான் ,இது என்னடா! இந்த வயதில் இப்படி போட்டி போடுகிறீர்கள்! பசுபதி என்னமோ பத்மநாபனை," என் கை முட்டிக்குள் நீ" என்பது போல் காட்டுகிறான். பத்மநாபன் அதேபோல் பசுபதியை "என் முட்டிக்குள் உன்னை அடக்குவேன் "என்பது போல் காட்டுகிறான். என்னடா இதெல்லாம்..... நல்லாவா இருக்கு.... பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் தானே நீங்கள்! இப்படி போட்டி போடலாமா?" எனக் கேட்டபோதுதான் பத்மநாபனுக்கு முட்டியின் அர்த்தம் புரிந்தது.

                  முட்டியை மடக்கிக் காண்பிக்கும் பழக்கத்தை அதன் பிறகு அவன் விடவே இல்லை .எங்கேயாவது யாராவது அவனை போட்டி மனப்பான்மையோடு பார்த்தாலே போதும் ....முட்டியை தூக்கிக் காட்டி," ஐ வில் சீ யூ" என்பான் .தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் சிறுவயதில் ஏற்பட்ட முட்டி பழக்கம் பத்மநாபனிடம் 40 வயதிலும் காணப்பட்டது .யாராவது சக அதிகாரி அவனை விட சிறந்த முறையில் ப்ராஜெக்ட் முடித்து கம்பெனி ஓனர் மித்ராவிடம் பெயர் வாங்கி விட்டால் உடனே தன் முட்டியை காண்பித்து," ஐ வில் சீ யூ" என சொல்லிக் கொள்வான். சொல்வதோடு நில்லாமல் அடுத்த ப்ராஜெக்ட் மிகச் சிறப்பாக செய்து ஓனர் மித்ரா எல்லோரும் முன்னே தன்னை பாராட்டும்படி செய்தும் காட்டுவான் ஆனால் இந்த முறை மும்பையில் இருந்து வந்த பத்ரா பத்மநாபனுக்கு மிகப்பெரிய சவாலாக தோன்றினான்.

           பத்ராவை லஞ்சுக்கு தன் வீட்டிற்கு அழைத்து வந்து தன் சிறப்பான வாழ்க்கையைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பத்மநாபன் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தான். பத்ராவை பார்த்ததுமே புனிதா விற்கும் புரிந்தது அவன் பேச்சில் பத்மநாபனை விட தான் அதிசாமர்த்தியசாலி என்பதை தெரியப்படுத்திக் கொண்டே இருந்தான்.லஞ்ச் முடிந்ததும் பத்ராவை ஆபீஸில் கொண்டு போய் விட்டு இரவு வீடு திரும்பிய பத்மநாபனுக்கு மிகவும் வேர்த்து கொட்டியது .என்றும் இல்லாமல் ஏசியில் இருந்த பத்மநாபனுக்கு வியர்த்துக் கொட்டுவதை பார்த்த புனிதாவிற்கு சந்தேகப்பொறி தட்ட உடனே டாக்டரை போன் செய்து வரவழைத்தாள். டாக்டர் வந்து பரிசோதனை செய்தபின் பத்மநாபனின் முன்னே அமர்ந்து ,"உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. இன்று ஆபீஸில் உங்களுக்கு அதிக வேலையா? நீங்கள் உங்களை அதிகம் வருத்திக் கொண்டு வேலை செய்கின்றீர்கள் என நினைக்கின்றேன். தயவு செய்து கொஞ்ச காலம் ஓய்வு எடுங்கள் .தற்சமயம் ஓய்வு தான் உங்களுக்கான மருந்து. ஓய்வு எடுத்துக்கொண்டு வேலைப்பளுவையும் குறைத்துக் கொண்டால் மேற்கொண்டு இதயம் பலவீனம் ஆகாமல் பார்த்துக் கொள்ள முடியும். எனவே கொஞ்ச நாள் ஓய்வெடுங்கள். நாளைக் காலையில் ஹாஸ்பிடலில் என்னைப் பார்க்க வாருங்கள் .அங்கே சில டெஸ்ட் செய்த பின் மேற்கொண்டு என்னென்ன மாத்திரைகள் சாப்பிட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்கள் பற்றி பேசலாம் "என்று கூறினார்.

                  புனிதா மிகவும் பயந்து போனாள். டாக்டர் போனபின் பத்மநாபனிடம்," வேண்டாங்க... விட்டிடுங்க" என சொல்லிக் கொண்டிருந்தாள்.ஆனால் பத்மநாபன் வழக்கம் போல் காலையில் ஆபீசுக்கு கிளம்புவதை பார்த்த புனிதா டாக்டர் சொன்னதை நினைவூட்ட," புனிதா ,இந்த டாக்டர்களே இப்படித்தான். அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று சொல்லி அவர்கள் வாங்கி வைத்திருக்கும் அத்தனை மெஷின்களுக்கும் வேலை கொடுக்க இப்படிச் சொல்வதே வழக்கமாகிவிட்டது. எனக்கு வாயு பிரச்சனை .நெஞ்சு வலி என்று சொல்லி பூச்சாண்டி காட்டி பயமுறுத்தி காசு பண்ண பார்க்கின்றார். என்னிடமேவா! ஐ வில் சீ "என முட்டியைக் காட்டிவிட்டு சிரித்துக் கொண்டு புறப்பட்டு போய்விட்டான் .புனிதா செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றாள்.

                   ஆபீசில் உள்ளே நுழைந்ததும் அவன் கண்ட காட்சி பத்ராவும் ஓனர் மித்ராவும் அவரது கேபிளில் சிரித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்ததைத்தான் .செக்யூரிட்டி வந்து அவன் காதில் ,"சார், பத்ராவின் ப்ராஜெக்ட் நல்ல முறையில் முடிந்து விட்டது. அனேகமாக அவருக்கு பிரமோஷன் உறுதியாகிவிடும்போலத் தெரிகிறது" எனச் சொல்லவும் பத்மநாபனின் கை தன்னிச்சையாக உயர்ந்து முட்டியைக் காண்பித்து," ஐ வில் சீ ஹிம்"என்றான். தன் கேபினுக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்து மேஜையின் மேல் தன் முட்டியை வைத்து தட்டியதும் அவனுக்குள் ஒரு பிரளயம் நடந்தது போல் உணர்ந்தான்; மூச்சு திணறியது; வேர்த்து கொட்டியது ;அப்படியே நாற்காலியில் சாய்ந்தான்.ஃபைலுடன் அறைக்குள் நுழைந்த ஸ்டெணோ நிலைகுத்தி மேலே பார்த்த வண்ணம் இருக்கும் பத்மநாபனின் கண்களையும் மேஜை மேல் அசையாமல் இருக்கும் மூடிய முட்டியையும் பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினாள்.

மூடிய முட்டிக்குள் மூச்சு அடங்கியதோ!


Rate this content
Log in

Similar tamil story from Tragedy