மஞ்சள் வெயில்
மஞ்சள் வெயில்
மஞ்சள் வெயில்
அந்த குளத்தங்கரையில் அமர்ந்து
மஞ்சள்வெயிலைபார்த்துக்கொண்டு இருந்தாள்பூங்கொடி.அவளுக்கும்வயதுமுப்பதைநெருங்கி கொண்டு இருந்தது.
ஒவ்வொரு சூரிய அஸ்த்தமத்தை பார்க்கும் போதெல்லாம்,ஒரு நாள் வயது கூடி விட்டது என்று நினைத்துக் கொள்வாள்.கரைக்கு எதிர்ப்புறம் ஒரு சுடுகாடு,பெரும்பாலும் அனாதை பிணங்கள் அங்கு கொண்டு வந்து புதைப்பார்கள்.அது எப்பாவாவது நடக்கும்.இவள் அதை பார்த்தால் ஐயோ பாவம் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வாள்.
அவளுக்கு வேறு யாரும் இல்லை,வயதான பாட்டி,அப்பாவின் அம்மா மட்டும் தான் உறவு என்று சொல்ல.அவளும்,யாரோ ஒருத்தன் வந்து தாலி கட்டி கூட்டிக்
கொண்டு போய் விட்டால் இந்த கிழவியை யார் பார்த்துக்கொள்வார்கள், என்று வருத்தப் படுவாள்.
ஆனால் கிழவி,இவளுக்கு ஒரு கல்யாணம் ஆகி விட்டால் நிம்மதியாக கண்ணை மூடுவேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறாள்.தூங்காமல் இருக்கும் போது கிழவி எனக்கெல்லாம் பதிமூன்று வயதில் கல்யாணம், ஆனா இன்னைக்கு, இப்ப பிறகு என்று முப்பது வயது தாண்டும் வரை கல்யாணம் செய்யாமலே இருக்கிறார்களே என்று அங்கலாய்த்து கொண்டாள்.
உண்மை தான்,இந்த மஞ்சள் வெயில் நேரத்தில் தான் அவனை இந்த குளத்தங்கரையில் தினமும் சந்தித்து வந்தாள்.
அவனும் பட்டணம் சென்று பெற்றோருக்கு தெரிவித்த பிறகு வந்து அவளை முறைப்படி கல்யாணம் செய்து அழைத்து செல்வதாக கூறி இருந்தான்.கூடவே பாட்டியையும் அழைத்து செல்லலாம் என்று கூறி இருந்தான்.பாட்டியும் கூட வருவாள் என்று இவளுக்கு மகிழ்ச்சி.
இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகி விட்டது.அவன் யாரென்று கேட்க இவளுக்கும் தோன்றவில்லை.
ஒரு கதை எழுத வேண்டும் என்று கரையில் வந்து உட்கார்ந்து இருப்பான்.இவளும் குளத்தில் துணி துவைக்க அந்த நேரத்தில் வந்து செல்வாள். ஒரு தடவை கால் வழுக்கி தண்ணீரில் விழபோனாள்,சத்தம் கேட்டு ஓடி வந்து கை பிடித்து தூக்கி விட்டான்.
அவன் தான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறினான்.
அவளும் அவனை நம்பினாள்.வேறு யாரும் வராத போது,இவனாவது சொன்னானே என்று சந்தோச பட்டுக்கொண்டு இருந்தாள்.
இதே இடத்தில் இன்னும் ஒரு வாரத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனவன்,வருவான்,வருவான் என்று வந்து காத்து இருக்கிறாள்.ஆனால் மஞ்சள் வெயில் தினமும் வந்து போனது,அவன் வரவில்லை.
அவன் சொன்னது போல ஒரு வாரத்தில் அவன் அவளை சந்திக்க வந்து கொண்டு தான் இருந்தான்.இன்னும் ஒரு கிலோமீட்டர்,வந்து விட்டால் குளக்கரை வந்து விடும்.மஞ்சள் வெயில் கண்ணை கூச குறுக்கே வந்த மாட்டை கவனிக்க தவறி விட்டான்.அவன் வந்த இரு சக்கரம் மாட்டின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு,தலையில் அடிபட்டு இறந்து போனான்.இறந்தவன் அடையாளம் தெரியவில்லை.
ஆம்புலன்ஸ் வந்து அவனை அள்ளி சென்றது. அடையாளம் தெரியவில்லை என்று அவனை குளக்கரையில் எதிர்ப்புறம் இருந்த இடுகாட்டில் அனாதை பிணமாக புதைக்க பட்டான்.
அவளும் அதை பார்த்து கொண்டு தான் இருந்தாள்,அது அவன் தான் என்று தெரியாமல்,பாவம் என்று மட்டும் சொல்லிக்கொண்டு இன்னும் அவனுக்காக மஞ்சள் வெயில் போகும் வரை காத்து இருக்கிறாள்.
