Bala Ji

Action

5  

Bala Ji

Action

கடமை அழைக்கிறது

கடமை அழைக்கிறது

7 mins
441


அந்த ராணுவ வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் மிக வேகமாக விரைந்து கொண்டிருந்தது . இந்திய விமான படையின் கருட் (Garud ) படை பிரிவை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் குழுவை சுமந்து செல்லும் அந்த வாகனம் இன்னும் அரை மணி நேரத்தில் பஞ்சாபில் உள்ள அந்த விமானப்படை தளத்தை அடைந்து விடும் .சரவணன் உட்பட அனைத்து கமாண்டோ வீரர்களும் பரபரப்பாக இருந்தனர் .


நேற்று வரை அந்த விமானப்படை தளம் பற்றி பஞ்சாப்பில் உள்ளவர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை . ஆனால் இன்று காலை முதல் அனைத்து செய்தி சேனல்களிலும் அதை பற்றிய செய்திதான் . பாகிஸ்தானில் இருந்து நுழைந்த தீவிரவாதிகள் குழு ஒன்று ,விமான படை தளத்தின் முக்கிய சிறு பகுதியை கைப்பற்றி தாக்குதல் நடத்தி கொண்டிருந்தது . 10 மணி நேரமாக இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி கொண்டிருக்கின்றனர் .உள்ளே சிக்கியுள்ள விமானப்படையினரின் குடும்பத்தை மீட்க கருட படை பிரிவு அழைக்க பட்டிருக்கிறது .


சரவணனுக்கு இது எத்தகைய சூழ்நிலை என நன்றாக தெரியும் . இந்த தீடிர் தாக்குதலை இந்திய அரசை போல் அவனும் எதிர்பாத்திருக்கவில்லை .அன்றைய தினம் மற்ற நாட்களை போல் சாதாரணமாக அமைந்திருந்தால் நிறை மாத கர்ப்பிணியான அவன் மனைவியுடன் இருந்திருப்பான்


இருவரும் தங்கள் முதல் குழந்தையை எதிர்நோக்கி பூரிப்புடன் காத்திருக்கின்றனர் . இன்னும் ஓரிரு தினங்களில் பிரசவ வலி வரலாம் என இரண்டு தினங்களுக்கு முன்பே டாக்டர் சொன்னது அவனுக்கு நியாபகம் வரவே , அவன் மலர்விழிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை எண்ணி பார்த்தான் .


---------------------------------------


இரண்டு தினங்களுக்கு முன்பு ..


ராணுவ விடுப்பில் இருந்த சரவணன் தோட்டத்தில் ரோஜா செடிக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தான் . அவன் நட்டு வைத்திருந்த ரோஜா செடியில் மிக அழகிய ரோஜாக்கள் பூத்திருந்தன .


டாக்டர் செக்கப் முடித்து விட்டு மலர்விழி சரவணனை தேடி கொண்டு வந்தாள் .


"என்னங்க .. நீங்க இங்க இருக்கீங்களா ."


"மலர் .டாக்டர் என்ன சொன்னாரு ?"


"இது வழக்கமான வலிதானாம். ஆனா ரெண்டு மூணு நாள்ல பிரசவ வலி வர சான்ஸ் இருக்கு .அதனால கவனமா இருக்க சொன்னாரு .முடிஞ்சா நளைக்கே வந்து அட்மிட் ஆகிடுங்க .இல்லனா பக்கத்துல யாராச்சும் ஒருத்தர் அவசரத்துக்கு இருக்கணும்னு சொல்லிருக்காரு "


பின் சிறிது இடைவெளிவிட்டு ,


"ஆனாலும் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு ."


"எதுக்கு பயப்படுற ..அதான் அம்மா கூட இருக்காங்க இல்ல ? நானும் இங்கதான் இருக்கேன் .இன்னும் லீவு முடிய ஒருவாரம் இருக்கு "


"குழந்தை பொறக்குறவரைக்கும் என் கூடவே இருப்பிங்களா ?"


"ஏன் அப்படி கேக்குற ?"


"இல்ல .தீடிர்னு ஏதாச்சும் எமெர்ஜென்சினு உங்கள சீக்கிரம் கூப்பிட்டாங்கன்னா ? அப்படி நீங்க கிளம்பி போய்ட்டீங்கனா , நான் பயங்கரமா கோவிச்சிப்பேன் "


"மலர் செல்லம் !! இப்போதைக்கு அங்க எந்த எமெர்ஜென்சியும் இல்ல .உன் பக்கத்துல இருந்து ,பொறக்க போற நம்ம குழந்தையையோட முகத்த பாத்துட்டு தான் நான் போவேன் "


"பிராமிஸ் ஆவா ?"


"ஆமா ."


தன் சத்தியத்தை நம்பாத மாறி தன்னை பார்த்து கொண்டிருந்த மலர்விழியை அணைத்தான் சரவணன் .


"சத்தியமா நான் உன் கூடவே இருப்பேன் " சொல்லி கொண்டே ரோஜா செடியில் இருந்து ஒரு ரோஜாவை பறித்து அவளிடம் நீட்டினான் .


உள்ளத்தின் காதல் முகத்தில் வடியவே , வெட்க சிரிப்புடன் அதை வாங்கி கொண்டாள் மலர்விழி .


அந்த சத்தியத்தை காப்பற்ற முடியாத வகையில் சொல்லி வைத்தாற் போல் ,உடனே வரும்படி ராணுவத்திலிருந்து அழைப்பு வந்து விட்டது .


----------------------------------------------------


விமான படை தளத்தை அடைந்த ராணுவ வாகனத்திலிருந்து சரவணன் உட்பட கமாண்டோ படை வீரர்கள் இறங்கி தற்காலிக கட்டுபாட்டு மையமான அந்த கட்டிடத்தை அடைந்தனர் .


என் .எஸ் .ஜி படை பிரிவை சேர்ந்த மேஜர் முகுந்தனிடம் சரவணன் தன் குழுவை அறிமுகம் செய்து நிலைமையை விசாரித்தான் .


"இப்ப என்ன நிலைமை மேஜர் ? எத்தனை தீவிரவாதிகள் உள்ள இருக்காங்க ?"


"மொத்தம் 15 தீவிரவாதிகள் உள்ள நுழைஞ்சிருக்காங்க .சரியா தெரியலை .அதுல 2 பேர் ஆரம்ப தாக்குதல்ல செத்துட்டாங்க .கொறைஞ்சது 7 பேராவது எங்க தாக்குதல்ல காயம் பட்டிருக்கலாம் . பட் திரும்ப அட்டாக் பண்ணிக்கிட்டே இருக்காங்க "


"நாம மொத்தமா இறங்கி சுத்தி வளைச்சி தாக்க முடியாதா ?"


"நெகடிவ் .அவங்க இப்ப இருக்குற ஏரியாவுக்கும் நமக்கும் நடுவுல விமானப்படை குடும்பங்கள் வசிக்கிற குவாட்டர்ஸ் இருக்கு .நிறைய பேரை நாங்க அங்க இருந்து செக்கியூர் பண்ணிட்டோம் .ஆனாலும் சில குடும்பங்கள் ஒரு கட்டிடத்துல மாட்டிகிட்டு இருக்காங்க .அவங்களால அங்க இருந்து தப்பிக்க முடியல . அவங்களை அங்க இருந்து மொத்தமா ரெஸ்க்யூ பண்ணாம நாம கவுண்டர் அட்டாக் பண்ணா உயிரிழப்புகள் அதிகமா இருக்கும் .ஏற்கனவே நம்ம சைடுல 6 காசுவாலிட்டீஸ் "


"ஓ மை காட் !!"


-----------------------------------------------------------


வீட்டின் பின்புறம் மலர்விழி தோட்டத்தில் அமர்ந்து இருந்தாள் . அவசர அழைப்பு வந்ததும் சரவணன் சற்று தயக்கத்துடன் கிளம்பினாலும் மலர்விழி தைரியத்துடன் தான் இருந்தாள் .ஆனாலும் அந்த சூழ்நிலையை கடிந்து கொண்டு அவனை பற்றி நினைத்து கொண்டே ஹாலுக்கு வந்து தொலைக்காட்சியை ஆன் செய்தாள் .


"வணக்கம் ..தலைப்பு செய்திகள் .பஞ்சாப் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் "


தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் தாக்குதல் நிலவரத்தை தலைப்பு செய்தியாக விவரித்து கொண்டிருந்தார் .கூடவே ராணுவ வாகனத்திலிருந்து கமாண்டோ வீரர்கள் இறங்குவதையும் காட்டி கொண்டிருந்தனர் .அதில் சரவணனும் இருந்தான் .


அதிர்ச்சியுடன் அதை பார்த்து கொண்டிருந்த மலர்விழி பதற்றத்துடன் தன் அத்தையிடம் செய்தி சொல்ல அவசரமாக எழுந்து செல்கையில் கால் தவறி "அம்மா" என்று அலறி கொண்டே விழுந்தாள் . பின் கட்டில் வேலை செய்து கொண்டிருந்த சரவணனின் அம்மா மீனாட்சி ,சத்தம் கேட்டு ஓடிவந்தார் .


----------------------------------------------------------------


மேஜை மீது விமானப்படை தளத்தின் வரைப்படத்தை விரித்த முகுந்தன் சரவணனை பக்கத்தில் அழைத்தார் .


"இது இப்போ நாம இருக்குற இடம். இங்க இருந்து 400 மீ தொலைவில் இருக்குற இந்த கட்டிடத்துல தான் அந்த பேமிலிஷ் மாட்டிருக்காங்க . பக்கத்துல இருக்குற இந்த பகுதில இருந்து தீவிரவாதிகள் அந்த கட்டிடத்துல நுழைய முயற்சி பண்றாங்க . அப்படி அவங்க நுழைஞ்சிட்டா அந்த குடும்பங்கள் பணய கைதிகளா சிக்கிடுவாங்க ."


"அப்படி நடந்தா நிலைமை இன்னும் மோசம் ஆகிடும் .இல்லையா மேஜர் ?"


"ஆமா .அதனாலதான் அவங்க அந்த பகுதியை கிராஸ் பண்ண முடியாதபடி நாங்க தொடர் தாக்குதல் நடத்திக்கிட்டு இருக்கோம். ஆனா ரொம்ப நேரத்துக்கு நம்மளால தாக்குப்பிடிக்க முடியாது .உடனடியா ஏதாச்சும் செய்யணும் "


சிறிது இடைவேளைக்கு பின் முகுந்தன் தொடர்ந்தான்.


"நமக்கும் அந்த கட்டிடத்துக்கும் நடுவுல இருக்குறது பிளைன் சைட் . மறைஞ்சிக்க எதுவும் இல்ல . அதனால நாம முன்னேறி போனாலோ இல்ல அந்த குடும்பங்கள் தப்பிக்க நினைச்சாலோ தீவிரவாதிகளின் தாக்குதல் கடுமையா இருக்கும் "


"அவங்க கிட்ட என்ன மாதிரியான ஆயுதங்கள் இருக்கு ?"


"ஏ .கே 47 துப்பாக்கிகள் , க்ரானைட்ஸ் அப்புறம் சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்ஸ் "


"சிறிது நேரம் அந்த வரைபடத்தை உற்று பார்த்தபடி ஆராய்ந்து கொண்டிருந்த சரவணன் பின் தனது திட்டத்தை கூறினான் "


"இப்போதைக்கு வான் வழி மீட்புக்கு நாம காத்திருக்க முடியாது .அதனால் எங்க டீம் ரெண்டு கவச வாகனங்களோட உள்ள நுழைஞ்சி அவங்களை மீட்கணும் "


"ஆனா இருபது பேருக்கும் மேல அங்க இருப்பாங்களே .அதோட உங்க டீமையும் சேர்த்து ரெண்டு வாகனங்கள்ல எப்படி பத்திரமா ரெஸ்க்யூ பண்ணி கொண்டு வருவீங்க ?"


"குழந்தைகளையும் வயசாவனங்களையும் மட்டும் வாகனத்துல ஏத்திட்டு நடக்க முடிஞ்சவங்கள எல்லாம் ,கவச வாகனங்களை ஒரு கேடயமா பயன்படுத்தி இந்த பிளைன் சைட்டை கடக்க வெக்கணும் . தீவிரவாதிகள் தாக்க முடியாதபடி நாம எதிர்த்தாக்குதல் நடத்தி அவங்க கவனத்தை திசை திருப்பனும் "


"இந்த ரெஸ்க்யூ ஆபரேஷனுக்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை சரவணன் ?"


"குறைஞ்சது 20 நிமிடங்கள் "


"ஓகே ..நீங்க உங்க டீமோட ரெடியா இருங்க .இன்னும் அரை மணி நேரத்துல கவச வாகனங்களை வரவழைக்க முயற்சி பண்றேன் . இந்த ரெஸ்க்யூ ஆபரேஷன் வெற்றிகரமா முடிஞ்சா ,அப்புறம் அந்த தீவிரவாதிகளை அடக்குறதும் ஈஸியாகிடும். "


சரவணன் நிலைமையையும் தன் திட்டத்தையும் விவரிக்க தொடங்கினான்


--------------------------------------------------------


சரவணனின் அம்மா மீனாட்சி பதைபதைப்புடன் வெளியே காத்து கொண்டிருந்தாள்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலர்விழியை டாக்டர் கமலா தீவிரமாக பரிசோதித்துவிட்டு வார்டிலிருந்து வெளியே வந்தார்.


"டாக்டர் ..இப்போ என் மருமக எப்படி இருக்கா ? அவளுக்கும் குழந்தைக்கும் ஒன்னும் ஆகலியே ?"


"நிலைமை கொஞ்சம் மோசமா தான் இருக்கு .கீழே விழுந்ததுல குழந்தையோட பொசிஷன் இடம் மாறி இருக்கு ."


"ஐயோ கடவுளே ..!! என்ன சொல்றிங்க ..? ரெண்டு உசிருக்கும் ஆபத்து இருக்கா ?"


"இப்போதைக்கு நாங்க எதுவும் சொல்ல முடியாது . சுக பிரசவத்துக்கு இப்போ வாய்ப்பு இல்ல .அதனால உடனடியா சிசேரியன் பண்ணியாகணும் . அதுவும் இப்ப ரிஸ்க்தான் "


மீனாட்சிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை .


"அவங்க கணவர் சரவணன் இல்லையா ? லீவுல தான இருக்கார் ?"


"இல்ல டாக்டர் . ஏதோ அவசரம்னு அவனை சீக்கிரம் கிளம்பி வர சொல்லிட்டாங்க .தீவிரவாதிங்க தாக்குதலாம் . அவனை டீவில காட்டுறாங்கனு இவ பதட்டமா என்ன கூப்பிட வரும்போது தவறி விழுந்துட்டா "


"ஓ ஆல்ரைட் ..நீங்க பயப்படாம தைரியமா இருங்க . எங்களால முடிஞ்சதை நாங்க பண்ணிகிட்டு இருக்கோம் ." என சொல்லி கொண்டே நர்ஸை அழைத்தார் டாக்டர்.


"நர்ஸ்..இவங்ககிட்ட பார்ம்ல கையெழுத்து வாங்கிக்கோங்க .அப்படியே சிசேரியனுக்கு எல்லா ஏற்பாடையும் பண்ணுங்க ."


மீனாட்சி தன இஷ்ட தெய்வங்களிடத்தில் எல்லாம் தாயும் சேயும் நலம் பெற வேண்டி கொண்டாள் .


--------------------------------------------------------------------------------------------------


விமானப்படைத்தளத்தின் அந்த பகுதி சிறிய போர்க்களமாக மாறியிருந்தது .


"எல்லோரும் சீக்கிரம் ஏறுங்க.நடக்க முடிஞ்சவங்க எல்லாம் வண்டிக்கு இந்த பக்கம் மறைஞ்சிக்கங்க "


இரண்டு தீவிரவாதிகள் குறிவைத்து வாகனத்தை நோக்கி சுடவே சரவணனும் மற்ற வீரர்களும் திருப்பி சுட ஆரம்பித்தனர் .


ஒரு கவச வாகனத்தின் சிறிது தூரத்தில் ஒரு குண்டு விழுந்து வெடித்து சிதறியது .விமானப்படை குடும்பத்தினர் அலறியபடியே குனிந்து கொண்டனர் .கவச வாகனம் குண்டின் மொத்த அதிர்வுகளையும் தாங்கி கொண்டது .


அந்த இரண்டு கவச வாகனங்கள் அந்த கட்டிடத்தை விட்டு மெதுவாக புறப்பட்டது .வாகனங்களில் பாதி பேர் இருந்தனர் .கமாண்டோ குழுவினர் உட்பட மற்றவர்கள் வாகனத்தின் ஒரு பக்கத்தில் மறைந்து கொண்டு மெல்ல அந்த பகுதியை கடக்க தொடங்கினர் .அந்த கவச வாகனங்களின் மறு பக்கத்தை தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகள் துளைக்க முயற்சித்து கொண்டிருந்தன .


முகுந்தனின் என்.எஸ் .ஜி படையினரும் தீவிரவாதிகளை நோக்கி சுட்டு கொண்டிருந்தனர் .


சரவணனின் குழுவினர் மெல்ல மெல்ல கவனமாக வாகனங்களை நகர்த்தி கொண்டிருந்தனர் .பதில் தாக்குதல் கொடுத்து கொண்டே உயிர்சேதம் வராத படி அந்த பகுதியை கடப்பது அவர்களுக்கு நினைத்ததை விட சவாலாக இருந்தது .


அப்போது எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு சரவணனின் காலில் பாய்ந்தது .


----------------------------------------------------


விமானப்படை குடும்பத்தை காப்பாற்ற சரவணன் போராடி கொண்டிருக்கும் அதே நேரத்தில் மருத்துவமனையில் மலர்விழிக்கு சிசேரியன் நடந்து கொண்டிருந்தது . டாக்டர் கமலா இருவர் உயிரையும் காப்பாற்ற போராடி கொண்டிருந்தார் .


வெளியில் அமர்ந்திருந்த மீனாட்சிக்கு நிமிடங்கள் யுகங்களாக தெரிந்தது . விடாது எல்லா தெய்வங்களிடத்திலும் அவள் வேண்டி கொண்டிருந்தாள் .


ஆபரேஷன் அறையிலிருந்து நர்ஸுகள் அவசரமாக வெளியில் வருவதும் உள்ளே போவதுமாக இருந்தனர் .


அங்கிருந்த தொலைக்காட்சியில் பிரபல செய்தி சேனல் ஒன்று தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றிய செய்திகளை விடாது ஒளிபரப்பி கொண்டிருந்தது .


--------------------------------------------------------------------


காலில் பாய்ந்த குண்டு கடும் வலியை கொடுத்திருக்க வேண்டும் .ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் கவச வாகனத்தின் பின்னால் மறைந்து சரவணன் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்தான் .


பாதி தூரத்திற்கும் மேல் எப்படியோ கடந்தாயிற்று .இன்னும் சிறிது தூரம்தான் .


தீடிரென தீவிரவாதிகளில் ஒருவன் ராக்கெட் லாஞ்சர் மூலம் சுட்ட குண்டு ,கவச வாகனத்தின் பின்புறம் தாக்கியது . சரவணன் உட்பட கமாண்டோ குழுவினர் அனைவரும் ஒருகணம் நிலைகுலைந்தனர் . நல்ல வேலையாக உயிர்ச்சேதம் இல்லை .


ஆனாலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மூன்று தீவிரவாதிகள் கவச வாகனத்தை நெருங்கி வந்து கையெறி குண்டுகளை ஏறிய தயாராகி கொண்டிருந்தனர் .


கீழே விழுந்திருந்த சரவணன் இதை கண்டதும் சுதாரித்து எழுந்து முதல் இரண்டு தீவிரவாதிகளை குறி வைத்து சுட்டு வீழ்த்தினான் . மற்றொரு தீவிரவாதி சரவணனை நோக்கி சுடவே நான்கு துப்பாக்கி குண்டுகள் அவன் உடலை துளைத்தன .எதிர் தாக்குதலில் அவனையும் சுட்டு வீழ்த்தினான் சரவணன் .பின் நிலை தடுமாறி கீழே விழுந்தான் .


கவச வாகனங்கள் பத்திரமாக அந்த பகுதியை கடந்து சென்றன .


-------------------------------------------------------------------------------


மருத்துவமனையில் ஆபரேஷன் முடிந்திருந்தது .


ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த டாக்டர் கமலா ,மீனாட்சியிடம் வந்தார் .


"டாக்டர் "


"வாழ்த்துக்கள் . உங்களுக்கு பேத்தி பொறந்துருக்கா .தாயும் சேயும் நலம் ."


மீனாட்சிக்கு மிகுந்த மகிழ்ச்சி .


"ரொம்ப நன்றி டாக்டர் ." மீனாட்சி டாக்டரின் கையை பற்றி நன்றி கூறினாள்


"அவங்களை போய் பாக்கலாமா டாக்டர் ?"


"இப்ப அவங்க மயக்கத்துல இருக்காங்க .இன்னும் கொஞ்ச நேரத்துல ஜெனரல் வார்டுக்கு மாத்திடுவோம் . அப்புறம் போய் நீங்க பாக்கலாம் "


மீனாட்சி சந்தோசத்துடன் கடவுளுக்கு நன்றி கூறி கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஒரு நர்ஸ் ராணுவ மருத்துவமனையிலிருந்து மீனாட்சிக்கு டெலிபோன் அழைப்பு வந்திருப்பதாக தகவல் கூறினாள் .


-----------------------------------------------------------------


25 வருடங்களுக்கு பிறகு ...


AFCAT தேர்வு முடிந்து பல கட்ட பயிற்சிக்கு பின் இந்திய விமானப்படையின் ஃபைட்டர் பைலட் ஆக தேர்வு ஆகியிருந்தாள் பாரதி .நியமன ஆணை தபாலில் வந்திருந்தது


அதை தன் அம்மா மலர்விழியியிடம் காட்டினாள் .


"உன்ன நினைச்சி அவர் ரொம்ப பெருமைப்படுவாரு " பாரதியின் அம்மா மலர்விழி கண்கலங்கினாள் .


"போ ..போய் அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ "


பாரதி சுவற்றில் மாட்டி மாலையிடப்பட்டிருந்த அந்த புகைப்படத்துக்கு அருகில் நின்று நியமன ஆணையை வைத்து வணங்கினாள் . அவள் பாட்டி மீனாட்சியின் புகைப்படம் அது.


பின்பு மும்முரமாக பேப்பர் படித்து கொண்டிருந்த தன் அப்பா சரவணனிடம் அந்த நியமன ஆணையை காட்டினாள் .


அதை வாங்கி படித்த சரவணனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி ,பெருமை .


தீவிரவாதிகளின் தாக்குதலில் குண்டடி பட்டு பின் பிழைத்து கொண்டான் சரவணன் . இந்திய அரசும் ராணுவ விருது வழங்கி அவனை கௌரவித்தது . காலில் பட்ட குண்டு எலும்பை துளைத்திருந்ததால் ஊன்று கோல் இத்தனை ஆண்டுகளாய் மூன்றாம் கால் ஆகி போனது .


ஊன்றுகோலை ஊன்றியபடி தன் மகளிடத்தில் வந்த சரவணன் ,பெருமை பொங்க தன் மகளுக்கு சல்யூட் வைத்தார் .


"என்னப்பா .நீங்க போய் எனக்கு சல்யூட் அடிக்கலாமா ?" என கூறி கொண்டே பதில் விமானப் படையினரின் பாணியில் பதில் சல்யூட் வைத்தாள் பாரதி .


பின்பு தன் மகளை கட்டியணைத்து வாழ்த்தி ,


"பின்ன என்ன சும்மாவா ? ..ராணுவத்துல சேர்ரதுல நீ நம்ம குடும்பத்தோட மூணாவது தலைமுறை .எனக்கு இது எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா "


சொல்லி கொண்டே தன் மீசையை பெருமையாக நீவி விட்டு கொண்டார் சரவணன் .


-------



Rate this content
Log in

Similar tamil story from Action