Bala Ji

Others

4  

Bala Ji

Others

இனி அய்யனார் துணை

இனி அய்யனார் துணை

5 mins
372


பூம்பட்டி கிராமம்.. அந்த ஊரின் சாதி சங்க தலைவரான பெரிய தேவர் மிகுந்த யோசனையில் இருந்தார்.. அவர் மனதில் சற்று ஆதங்கம் .. சென்னையில் இருந்து அவரது மகன் அய்யனாரின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் வரை அவர் சந்தோஷமாக தான் இருந்தார்.. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தால் தன் மீது கோபித்து கொண்டு இன்று வரை தன்னுடன் பேசாதிருக்கும் அய்யனார் இரண்டு தினங்களுக்கு முன் ஊருக்கு வருவதாக கடுதாசி போட்டிருந்ததால் பெரிய தேவர் மகிழ்ச்சி அடைந்திருந்தார்.. ஆனால் அவர் எதிர்பார்த்த படி

அய்யனாரின் கோபம் இன்னும் தணியவில்லை..


அன்று காலை அந்த பங்களா வீட்டின் முன் கார் வந்து நின்றது.. சத்தம் கேட்டு பெரிய தேவரும் அவர் மனைவி சாவித்தரியும் வாசல் முன் வந்து நின்றனர்.. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அய்யனார் காரிலிருந்து இறங்கினான்..


"வாப்பா அய்யனாரு.. இப்பதான் உங்கப்பன் நியாபகம் வந்துச்சா..? "


கேள்வி கேட்டு கொண்டே கட்டி தழுவ வந்த பெரிய தேவரை வழிய தவிர்த்தான் அய்யனார்.. அம்மா சாவித்திரியின் காலில் விழுந்து ஆசி வாங்கியவன் பெரிய தேவரை கண்டும் காணாமல் அவன் தன் சூட்கேசுடன் வீட்டிற்குள் நுழையலானான்..


பெரிய தேவர் கோபத்துடன் பின் தொடர்ந்தார்..


"டேய் நில்லுடா.. "


அய்யனார் திரும்பி பார்த்தான்..


" பெத்த தகப்பன் நான் எதிர்ல நிக்கேன்.. உன் பாட்டுக்கு கண்டுக்காம போற...


அய்யனார் அவரை முறைத்து பார்த்தான்..


"அம்மா..! ஏதோ நீ கடுதாசி மேல கடுதாசி போட்டு ஊருக்கு வர சொல்லி கூப்பிடதால தான் நான் வந்தேன்.. மத்தபடி எதையும் மறக்கவும் இல்ல..மன்னிக்கவும் இல்ல. உன் புருஷன் கிட்ட சொல்லு.. .. "


சொல்லியவன் நேராக தன் அறைக்குள் சென்று சென்று விட்டான்..


பெரிய தேவர் முகத்தில் ஏமாற்றம்..


"ஏய் சாவித்திரி.. நீயும் எதுவும் பேசாம உம்முனு வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்குற.. உன் புள்ள என்ன பேசிட்டு போறான் கேளு.. "


"இத பாருங்க.. இதுல நான் தலையிட முடியாது.. நீங்க பண்ண காரியத்த என்னாலயே மறக்க முடியாது.. அவன் மறப்பனா..? இங்கயே இருந்தா நடந்தத நினைச்சே வருத்தப்படுறானு தான் அவன் சென்னையில நிம்மதியா இருக்கட்டும்னு

ஒரே மகன பிரிஞ்சிருந்தாலும் பரவாயில்லைனு மனச கல்லாக்கி கிட்டு கிடக்கேன்.. என் பொண்ணுதான் இனிமே இல்லனு ஆகிடுச்சி... என் பையனையும் இழக்கனுமா.. அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாக்கணும்னு தான் அவன கடுதாசி போட்டு வர சொன்னேன்.. உங்க விருப்பபடி நம்ம சாதியிலியே பொண்ணு பாருங்க.. "


சாவித்திரி சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் சமையல் கட்டிற்குள் நுழைந்தாள்..


பெரிய தேவருக்கு பேயறைந்தார் போல் ஆயிற்று.. அவரது கண்கள் சுவரில் மாட்டப்பட்டிருந்த இறந்து போன அவரின் மகள் படத்தை உற்று நோக்கின. லேசான கண்ணீர் துளிகள் கண்களில் எட்டி பார்த்தன.

"என்ன தான் இருந்தாலும் சாதிய விட்டு குடுத்துட முடியுமா? "என நினைத்தபடியே தன் தோள் துண்டால் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டார்.


அடுத்த சில நாட்களில் முறைப்பெண்ணாகிய பக்கத்து புலியூரை சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் செம்பருத்திருக்கும் அய்யனாருக்கும் கல்யாணம் செய்து முடிப்பதென இரு வீட்டாரும் பேசி முடிவு செய்தனர். ராமலிங்கம் பெரிய தேவரை போலவே அவ்வட்டாரத்தில் பெரிய தலைக்கட்டு. அந்தஸ்த்திலும் சாதி உணர்ச்சியிலும் பெரிய தேவருக்கு குறைவில்லாதவர். அவருடன் சம்பந்தம் பேசி முடித்ததில் பெரிய தேவருக்கு ஏக திருப்தி.


"அடியே சாவித்திரி.. நம்ம சாதி சனத்துல யாரும் நடத்தாத அளவுக்கு பெருசா இவன் கல்யாண பண்ண போறேன். "

தன்னை சுற்றி இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் அய்யனார் எதிலும் ஈடுபாடு காட்டவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவன் அதே ஊரில் இளமை துள்ளலுடன் வலம் வந்தவன்தான் .ஆனால் அந்த ஒரு சம்பவம் அவனை ஒட்டு மொத்தமாக புரட்டி போட்டது.


அந்த கிராமத்தில் அதுவும் அந்த வீட்டில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. வீட்டின் எந்த மூலையை பார்த்தாலும் அவன் தங்கை பூங்கொடி நினைப்புதான் அவனுக்கு வந்தது. புள்ளி மான் போல் வீட்டை சுற்றி வலம் வந்த அவள் அன்புதங்கையின் நினைவுகள்..! இதோ அந்த அறையில் தான் அவன் கடைசியாக அவளை பார்த்தான்.. பிணமாக..! இத்தனைக்கும் காரணமாக இருந்த பெரிய தேவரை அந்த வீட்டில் அடிக்கடி பார்க்க வேண்டியிருந்தது. ஆதலால் வீட்டில் தங்காமல் கிராமத்தில் வயல் வரப்பு, தோட்டம் என வலம் வந்து கொண்டிருந்தான்..


நாட்கள் வேகமாக நகர்ந்தன. அடுத்த வாரத்தில் அவன் கல்யாணம். வழக்கம் போல் எந்த ஈடுபாடும் இன்றி கிராமத்தின் அந்த தென்னந்தோப்பு வழியாக உலா வரலானான்.

தூரத்தில் ஒரு பெண் வேகமாக அழுது கொண்டே சென்று கொண்டிருந்தாள்.


என்ன நினைத்தாளோ திடீரென பக்கத்தில் இருந்த ஆழ்கிணற்றில் குதித்து விட்டாள். இதை கண்ட அய்யனார் வெகு வேகமாக கிணற்றை அடைந்தான். விழுந்த அந்த பெண்ணுக்கு நீச்சல் தெரியாது என்பதை அவள் தத்தளித்து மூழ்கி கொண்டிருந்ததன் மூலம் அவன் தெரிந்து கொண்டேன்.. பக்கத்தில் யாரும் இல்லை. சற்றும் யோசிக்காது சடாரென கிணற்றில் பாய்ந்து அந்த பெண்ணை மீட்டு வெளியில் கொண்டு வந்து தரையில் கிடத்தினான். அவளது முகத்தை கண்டவனுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி..!!


அடுத்த சில நாட்கள் அவனால் நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை. தற்கொலை முயற்சியில் இருந்து செம்பருத்தியை காப்பாற்றிய பின் அவள் அழுது கொண்டே கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன..


"மாமா ..இந்த கல்யாணத்துல கொஞ்சங்கூட எனக்கு இஷ்டமில்ல. நான் ஒருத்தர மனசார விரும்புறேன். அவர் தாழ்ந்த சாதிக்காரருங்கிற ஒரே காரணத்தால எங்க அப்பா ஒத்துக்கவே இல்ல. அவர மறந்துட்டு உங்கள கட்டிக்க ஒத்துக்கலனா அவர கொன்னுடுவேனு மிரட்டுனாதால தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். ஆனா அவர என்னால மறக்க முடியல மாமா.. அதான் இப்படி... "

அழுது விம்மி கொண்டே அவள் கூறிய வார்த்தைகளை அவன் இதற்கு முன் கேட்டிருக்கிறான்.. அவள் தங்கையிடத்தில்..



இரண்டு வருடங்களுக்கு முன் அவன் உயிருக்குயிரான தங்கை, கூட படிக்கும் பையனை காதலித்த தால் தன் அப்பா பெரிய தேவரால் வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அய்யனார் அப்போது சென்னையில் இருந்தான். அவன் நண்பன் ஒருவன் மூலம் பூங்கொடியின் விஷயத்தை அறிந்து பதறி போய் ஓடி வந்தவனால் அவனது ஆருயிர் தங்கையை பிணமாக தான் பார்க்க முடிந்தது.


சாதி பெருமை காரணம் காட்டி பெரிய தேவர் அந்த பையனை ஆணவ கொலை செய்திருந்தார். இதை கேள்விபட்டதும் பூங்கொடி மனம் ஒப்பாமல் தற்கொலை செய்து கொண்டாள். அன்று உடைந்த அவன் மனதின் ரணம் இன்னும் ஆறவில்லை.


அன்று அவள் தங்கை.. இன்று செம்பருத்தி. பலவாறாய் யோசித்தவன் சட்டென ஒரு முடிவுக்கு வந்தான்.


சரியாக கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் அய்யனார் ராமலிங்கம் வீட்டுக்கு விரைந்தான்.


"மாமா...! பக்கத்து ஊர்ல இருக்குற என்னோட ஒரு வாத்தியார்க்கு பத்திரிக்கை வைக்கணும். செம்பருத்தியும் நானும் ஒண்ணா சேர்ந்து போனா

நல்லாருக்கும்."


"அதுக்கில்ல மாப்ள.. கல்யாணம் இன்னும் ரெண்டு நாள்ல வெச்சிகிட்டு ...அது வழக்கமில்லியே..பின்ன எப்படி மாப்ள? "


"ஒரு மணி நேரத்தில கொண்டு வந்து விட்டுறேன் மாமா. நம்ம வாய்க்கா வழியா தான் போறேன். யாரும் பாக்க மாட்டாங்க. "

அவரின் பதிலுக்கு கூட அவன் காத்திருக்காமல் செம்பருத்தியை அழைத்து சென்றான். இருபது நிமிட பயணத்திற்கு பின் ஊரின் வெளிபுறத்தை அடைந்தார்கள். அங்கு வந்த டவுன் பஸ்ஸில்

அய்யனார் செம்பருத்தியை ஏற்றிவிட்டு தானும் அமர்ந்தான். பஸ் புறப்பட்டது. வழி நெடுக அய்யனார் எதுவும் பேசவில்லை. ஒரு மணி நேர பயணத்தில் பஸ் , மத்திய பேருந்து நிறுத்தத்தை அடைந்தது. அய்யனார் கீழே இறங்கினான் .


அடுத்து இறங்கிய செம்பருத்தி அங்கு அவள் ஆருயிர் காதலன் நின்று கொண்டிருப்பதை கண்டு ஆனந்த அதிர்ச்சி கொண்டாள். அங்கு நடப்பதை அவளால் நம்ப முடியவில்லை.


"என்ன செம்பருத்தி அப்டி குழப்பமா பாக்குற. இந்த அய்யனார் தான் எல்லாத்துக்கும் காரணம். நாம ஒன்னு சேரணும்னு இவ்வளவு உதவி பண்றாரு "


செம்பருத்தி அய்யாரை பாரத்தாள்.


அய்யனார் சிரித்துக் கொண்டே.. "என்ன செம்பருத்தி அப்படி பாக்குற. ரெண்டு வருஷம் முன்னாடி என் தங்கச்சிய இந்த சாதி வெறியால பறி கொடுத்தேன். அந்த நிலம இன்னொரு பொண்ணுக்கு வர விட மாட்டேன். அதனால தான் நீ விரும்புனவர் கூடவே உன்ன சேர்த்து வெக்க போறேன். "


செம்பருத்தி கண்களில் ஆனந்தக் கண்ணீர்


"ஆனா மாமா.. எங்கப்பாவ நினைச்சா தான்... "


"அத பத்தி கவல படாத.. சென்னையில இருக்கிற என் ஃபிரண்ட்ஸ்கிட்ட நான் நேத்தே பேசிட்டேன். நீங்க ரெண்டு பேரும் இப்பவே சென்னைக்கு போறிங்க. இது என் ஃபிரண்டு ராமரோட அட்ரஸ். அவன் உங்களுக்கு தேவையான உதவிகள பண்ணுவான். இவருக்கும் வேலை ஒன்னு ஏற்பாடு செய்வான்.


நீங்க சென்னை போற விஷயம் எனக்கு மட்டும் தான் இப்போதைக்கு தெரியும். இதுக்கு அப்புறம் ஒரு பெரிய பிரச்சினையே வெடிக்கபோகுது. அத நான் பாத்துக்கிறேன். நீங்க கிளம்புங்க.. "


சொல்லிவிட்டு கைசெலவுக்கு வேண்டிய பணத்தையும் கொடுத்து விட்டு அய்யனார் புறப்படலானான்.. அவன் மனம் அடுத்து நடக்க போகும் பிரச்சினையை சட்ட ரீதியாக எதிகொள்ள வேண்டிய வழிகளை யோசித்து கொண்டிருந்தது


செம்பருத்தி மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் ,ஆனந்த கண்ணீரை அடக்க முடியாமல் அய்யனார் சென்ற திசை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள்..


பிறகு அவர்கள் இருவரும் சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறி கொண்டனர். இனி அவர்களுக்கு அந்த "அய்யனார் " சாமியே துணை.. !!!!


Rate this content
Log in