Bala Ji

Children Stories Drama

5  

Bala Ji

Children Stories Drama

டீக்கடை முருகனும் ஓடி வந்த சிறுவனும்..

டீக்கடை முருகனும் ஓடி வந்த சிறுவனும்..

4 mins
447


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அந்த இரவு பொழுதிலும் எப்போதும் போல் பரபரப்பாக இருந்தது. அதன் வெளியே உள்ள அந்த டீக்கடையில் வழக்கம் போல் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. முருகன் அங்கு பணிபுரிபவன். அவன் போடும் டீ, காபியின் சுவை தனி ரகம்..வருபவர்களுக்கு டீ போடுவது முதல் கிளாஸ்களை கழுவி சுத்தம் செய்வது என சகல வேலையும் அவனே செய்வான்.. கல்லா பெட்டியில் காசு வாங்கி போடுவது மட்டும் முதலாளியின் வேலை.


அன்றும் வழக்கம் போல் வேலை அதிகமாகவே இருந்தது. திடீரென அங்கு கடைக்கு பக்கத்தில் ஒருவன் மயங்கி விழவே பதறி போய் எட்டி பாரத்தான். மயங்கி விழுந்தவனுக்கு 15 வயதிருக்கும். முருகன் உடனே துரிதமாக செயல்பட்டு அவன் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பினான். அவன் கண்ணை திறக்க முடியாமல் திறக்கும் போதே அது பசி மயக்கம் என விளங்கிற்று. அவனை அருகில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்து டீயும் பன்னும் சாப்பிட குடுத்தான். அதை வாங்கி அவன் அவசர அவசரமாக சாப்பிடவே விக்கி கொள்ளாமல் இருக்க ஒரு தண்ணீர் பாட்டிலும் கொடுத்தான்.

அவனை பார்க்க பார்க்க ஊரில் இருக்கும் அவன் தம்பி ஞாபகம் வந்தது முருகனுக்கு.


பின் சென்று தன் வேலையை பார்க்க துவங்கினான். இரவு 10.30 மணி . கடையை அடைத்து விட்டு வந்தவன் வெளியே அந்த பையன் சுருண்டு படுத்திருப்பதை கண்டான். அவனை தட்டி எழுப்பினான்


"தம்பி...! யார்ப்பா நீ.. எந்த ஊரு ? இங்க என்ன பண்ற?


அவன் பதில் பேசவில்லை..


"தம்பி.. இந்த நேரத்தில இங்க படுக்க வேணாம். ஏன் கூட வா.. "


அவன் முகத்தில் சிறிது பயம்


"பயப்படாத தம்பி.. நீ இன்னும் பட்டினியா இருக்கேனு தெரியுது. என் கூட வா..நான் ஏதாச்சும் வாங்கி தரேன் "


பக்கத்து கடைக்கு அவனை அழைத்து சென்று பரோட்டா ஆர்டர் செய்து அவனிடத்தில் கொடுத்தான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை

பொறுமை காத்தான்.


இருவரும் பின் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தனர். அந்த பஸ்ஸில் தான் முருகன் வழக்கமாய் வீடு திரும்புவான்


"வீட்டை விட்டு ஓடி வந்திட்டியா? " முருகன் அவனிடத்தில் யதார்த்தமாய் கேட்டான்


அவனது கள்ள மொளனமே அதை உண்மையென உண்ர்த்தியது.


"என்பேரு முருகன்.உன் பேரென்ன தம்பி? "


"அறிவுக்கரசு "


"எந்த ஊரு..? "


" கரூர்ல இருக்குற காவக்காரன் பட்டி "


" அப்பா.. அம்மா? "


" இருக்காங்க. அப்பா ஊர்ல மளிகை கடை வெச்சிருக்காரு.. அம்மா வீட்லியே அப்பாவோட கடைய பாத்துக்கறாங்க. ஒரு தங்கச்சி இருக்கா.. 5வது படிக்குறா. "


"நீ என்னப்பா பண்ற? "


"பத்தாவது படிக்குறேன் "


"நல்லா படிப்பியா? "


"இல்ல ஏதோ சுமாரா.... இப்ப நடந்த எக்ஸாம்ல ரெண்டு சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆயிட்டேன் "



" ஓ.. அதான் அப்பா அம்மா திட்டிருப்பாங்க. நீ கோவிச்சுகிட்டு ஓடி வந்துட்டல்ல.. "


அவன் அழ ஆரம்பித்தான். "அப்பாவுக்கு ஏன் மேல பாசமே இல்ல. எப்ப பாரு மார்க் கம்மியாடிச்சினு திட்டிக்கிட்டே இருப்பாரு.. முந்தா நேத்து என்ன அடிச்சிட்டாரு.. அதான் கோவிச்சிட்டு இங்க ஓடி வந்துட்டேன்.. ஆனா எங்க போறதுனு தெரியாம இங்கயே ரெண்டு நாளா சுத்திகிட்டு இருக்கேன். "


முருகன் இதை கேட்டு கடகடவென சிரிக்க ஆரம்பித்தான்.


"அடப்பாவி ... அப்படி அடிச்சி பாசம் காட்டகூட அப்பா அம்மாங்குற சொந்தம் இல்லாம வளந்தவன் டா நானு.. "


அறிவுக்கரசு முருகனையே மௌனமாய் பார்த்தான்.


"என்ன பாக்குற... ஏன் பூர்விகம் சிலோன்ல இருக்கிற யாழ்ப்பாணம்.. 10 வயசு வரைக்கும் எனக்கும் அப்பா அம்மா தம்பினு அழகான ஒரு குடும்பம் இருந்துச்சு. அப்பதா அங்க போர் வந்துச்சு. எங்கேர்ந்தோ திடீர் திடீர்னு குண்டு போட்டானுங்க. அது எங்கப்பாவ காவு வாங்கிடிச்சு.

என்னையும் என் தம்பியையும் தூக்கிட்டு அம்மா தமிழ்நாட்டுக்கு எப்படியோ கப்பல்ல வந்து சேர்ந்தாங்க.. "


அறிவுக்கரசு இப்போது கவனமாக கேட்க ஆரம்பித்தான்


"கப்பல் னா ஏதோ பெரிய சொகுசு கப்பல்னு நினைச்சுடாத. மீன் பிடிக்கிற கப்பல்ல கூட்டங்கூட்டமா மூணு நாளா கிடந்தோம். அங்க இங்க அசைய முடியாது. எப்பவேணா போட் கவுரலாம்.. இதுல சிலோன் ராணுவத்துக்காரங்க கண்ல படாம உசிர கையில புடிச்சி கிடக்கணும் "


"அப்படி வந்ததுல உடம்பு முடியாம போயி

 மூணு வருஷத்துல அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க... "


சொல்லி முடிக்கவும் முருகனின் கண்களில் கண்ணீர்.


"அப்புறம் நான் வேலைக்கு போய் என் தம்பிய காப்பாத்த வேண்டிய சூழ்நிலை. எனக்கு படிப்பு வரல. இந்த டீக்கடைல வேலை பார்த்து என் தம்பிய படிக்க வெக்கிறேன். ஆனாலும் கூட வெச்சிக்க முடியல. காஞ்சிபுரத்துல இருக்குற ஹாஸ்டல தங்கி படிக்கிறான் "


முருகன் சட்டையால் கண்ணை துடைத்தான்


பஸ்ஸில் இருந்து இருவரும் இறங்கி நடந்தனர்.


"தம்பி அறிவுக்கரசு...! இங்க நிறைய பசங்களுக்கு அம்மா அப்பாவே கிடையாது. தனக்கு சொந்தம்

னு சொல்லிக்க ஆளில்லாம இங்க நிறைய பேர் ஏங்கிட்டு இருக்காங்க. உனக்கு கடவுள் அப்பா அம்மாவ குடுத்துருக்காரு...அவங்க உன்ன நினைச்சு எவ்ளோ கவலப்படுவாங்கனு யோசிச்சு பாரு.. அவங்ககிட்ட போன் பண்ணி பேசு "



"ஆனா எங்கப்பாவ நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு "


"நீ நம்பர் குடு.. நான் பேசிக்கிறேன்..நீ ரொம்ப களைப்பா இருப்ப.. ரெஸ்ட் எடுத்துக்கோ.. "


நம்பரை வாங்கிய முருகன் அவன் அப்பாவிடத்தில் பேசினான். அவரின் தவிப்பை முருகனால் உணர முடிந்தது. பையன் பத்திரமாக இருப்பதாக சொல்லி தன் முகவரியை கூறினான்



போன் பேசி முடித்த நேரத்தில் அறிவுக்கரசு நன்கு தூங்கியிருந்தான்.


பொழுது விடிந்தது. கண்ணை விழித்து பார்த்த அறிவுக்கரசு எதிரில் தன் பெற்றோரை கண்டதும் ஆச்சரியப்பட்டான்.


தன் அப்பா அம்மாவின் முகத்தில் கலவரத்திலும் ஆனந்த கண்ணீர் ஊற்றெடுப்பதை அறிவுக்கரசு கண்டான் . எந்த சூழ்நிலையிலும் கம்பீரமாக இருக்கும் தன் அப்பா இன்று தன்னை கட்டி கொண்டு அழுவதை அறிவுக்கரசு நம்ப முடியாமல் பார்த்தான்.


" இந்தாங்க எல்லாரும் டீ சாப்பிடுங்க.. " முருகன் குரல் கொடுத்தப்படியே டீ தம்பளர்களுடன் வந்தான்.


"ரொம்ப நன்றி சார்..! எம்புள்ளைய என்கிட்ட ஒப்படைச்சிட்டீங்க.. உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போறேனு தெரில."


"அதெல்லாம் எதுக்கு சார்.."


"அப்படியில்ல.. சின்ன வயசில குடும்ப பாரம் மொத்தமும் என்கிட்ட வந்ததால என்னால 10வதுக்கு மேல படிக்க முடில.. எனக்கு கிடைக்காத அந்த படிப்பும் வாய்ப்பும் என் புள்ளைங்களுக்கு கிடைக்கும்னு என்னால முடிஞ்ச எல்லாமே செய்றேன். நிறைய சமயத்துல இவன் சரியா படிக்கலேனு இவன்கிட்ட அதுக்காக கோவப்பட்டதுண்டு. அது இப்ப தப்பாகிடுச்சு. அவன் அத சரியா புரிஞ்கிக்காம இப்படி பண்ணிட்டான். " அவன் அப்பா இப்படி வருத்தப்பட்டது அறிவுக்கரசுவால் தாங்கி கொள்ள முடியவில்லை.


"சரி விடுங்க சார்.. இந்த வயசில இப்படித்தான். இனி அவன் புரிஞ்சிப்பான் " முருகன் சொல்லி முடிக்கும் முன்பே அறிவுக்கரசு அவன் அப்பாவிடத்தில் அழத் தொடங்கினான்.


"இனிமே அப்படி பண்ண மாட்டேன் பா.. "


அங்கு மேலும் சில நிமிடங்களுக்கு இந்த பாச பிணைப்பு காட்சிகள் அரங்கேறின


"சரி வாடா அறிவு.. நாம கிளம்புவோம். உன் தங்கச்சி நீ எங்கனு கேட்டுக்கிட்டே இருக்கா... "


முருகனிடம் விடை பெற்றுக் கொண்டு அறிவுக்கரசு அவன் பெற்றோருடன் கிளம்பினான். அவர்கள் சென்ற பிறகு அங்கு ஒரு வெறுமை சூழ்வதை முருகனால் உணர முடிந்தது..

அவன் தம்பியின் ஞாபகம் வரவே இந்த வாரம் அவனை சென்று பார்க்க வேண்டும் என தோன்றியது..


இந்த வாரம் ஒரு நாள் லீவு சொல்லியாக வேண்டும் என நினைத்தபடியே வேலைக்கு கிளம்பினான்..


எல்லாம் சுபம்..!!


Rate this content
Log in