செ.பாரத் ராஜ்

Abstract Drama Tragedy

4.7  

செ.பாரத் ராஜ்

Abstract Drama Tragedy

தந்தையின் மடியில்

தந்தையின் மடியில்

6 mins
447


அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை இவ்வாறு வலிக்கும் என்று. இதற்கு அவனது தந்தையின் வேப்பங்குச்சி அடி எவ்வளவோ மேல் என்று நினைத்தான். பேசாது அதையே வாங்கியிருக்கலாம் என்று கூட நினைத்தான். வீட்டின் திண்ணையில் படுத்து கொண்டு வயிற்றை பிடித்தவாறு அம்மா, அம்மா, என்று கத்தி கொண்டும் துடித்து கொண்டும் இருந்த மகன் மகேந்திரனைப் பார்த்த அவனது தாய் சந்திரா மேகத்தின் பின் ஒளிந்து கொண்டு "என்னிடம் வந்திவிடாதே மகனே", என்று கண் கலங்கிக் கொண்டிருக்கிறாள்.


 மகேந்திரன் இப்போதுதான் பள்ளிப்படிப்பை முடித்தான். கல்லூரியில் எதனைப் படிக்கலாம் என்று அவனுக்கு மாறி மாறி அவனின் சொந்தங்கள் அவனது காதில் ஓதி கொண்டிருந்த காலம் அது. அவனுக்கு மீசை சற்று தெரிய ஆரம்பித்தாலும் விளையாட்டு புத்தி குறைய ஆரம்பிக்கவில்லை. அது கூடிக் கொண்டே தான் போகிறது. அவன் விளையாட்டாக செய்யும் விஷயங்கள் சில நேரம் விபரிதம் ஆவது உண்டு. 


 அப்படி தான் ஒரு நாள் விளையாட்டாக தனது தந்தையின் தொலைபேசியை சற்று தூக்கி போட்டு பிடிக்காலம் என்று தூக்கி போட்டு பிடிக்க கீழே விழுந்து பல பாகங்கள் ஆனது அவரது தொலைபேசி. கீழே விழுந்த பாகங்கள் பலவற்றை அப்படி, இப்படி, எப்படி என்றெல்லாமோ சேர்த்து வைத்து பொருத்தி பார்த்தான். ஒன்றும் வேளைக்கு ஆகவில்லை. அப்பா சற்று தாமாக வந்தால் தனது பெரியப்பா மகனிடம் கொண்டு போகலாம். அவனுக்கு தோலைப்பேசியை இணைப்பது எல்லாம் கைவந்த கலை என்று நினைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வர அவன் எதிரே வந்தார் சுப்பிரமணியம்.


 முறுக்கு மீசையும், சற்று நரைத்த தலைமுடியும், வயலில் உழைத்து கருத்து முறுக்கேறிய உடலுமாக அவர் இருந்தார்‌. வயது ஐம்பதை சென்ற வாரம் தான் தொட்டது. நான்கு ஏக்கர் நன்செய் நிலத்தில் விவசாயம் செய்கிறார். நெல் அறுத்த வயகாட்டில் மெய்ச்சலுக்கு கட்டிய மாட்டை அவிழ்த்து கொண்டு வந்தார். அவரைப் பார்த்து முழித்து கொண்டு இருந்த மகேந்திரனை ஒருமாதிரி பார்வையிட்டு கொண்டே மாட்டு கொட்டைகையில் மாட்டை கட்டும் போது,

"யாராச்சும் ஃபோன் பண்ணுனாங்களா?",என்று சாந்தமாக கேட்டார்.

"இல்ல பா",என்றான் மகேந்திரன் கேள்வியை முழுமையாக கேட்டு முடிப்பதற்கு முன்.


 முகம் கை கால் கழுவிவிட்டு வீட்டில் புகுந்தவர் தனது அம்மாவை தேடி கொண்டு சமையல் அறையில் நுழையும் போது தான் தெரிந்தது, அவள் அவளது அம்மா ஊருக்கு சென்று இருக்காள் என்று. இவ்வளவு நேரம் ஆகியும் அம்மா இன்னும் ஏன் வரவில்லை. நாலு மணி பேருந்தை பரதுரில் பிடித்திருந்தால் இன்னேரம் சூரக்குழிக்கு வந்திருக்க வேண்டுமே என்று கணக்கிட்டார். சரி எதற்கும் தனது தாய்மாமாவின் மகனுக்கு அழைத்து கேட்போம் என்று தொலைபேசியை தேடினார், காணவில்லை. அது சில துண்டுகளாக மகேந்திரன் மடித்து கட்டியிருக்கும் லுங்கியில் இருந்தது.


 வாசலுக்கு வந்து பார்த்தார். மகன் லுங்கியைப் பிடித்து கொண்டு சத்தமில்லாமல் நடந்து செல்வதைக் கவணித்தார்.

"டேய் நில்றா",என்று சத்தமிட்டார் சுப்பிரமணியம். நின்றான் மகேந்திரன். அவனது லுங்கியில் மடிப்பில் இருப்பது தொலைபேசி என்று கண்டு பிடித்துவிட்டார்.

"ஃபோன கூடு",என்றார் கோபமாக. மகேந்திரனுக்கு வேர்வையோடு சேர்ந்து கண்ணீரும் சொட்ட சொட்ட எடுத்து கொடுத்தான் துண்டான தொலைபேசியை.

"என்ன டா இது"

"தெரியாம கீழ் விழுந்துடுச்சு பா"


  வாசல் அருகே நின்றுக்கொண்டு, அதன் போக்கிற்கு ஆடி கொண்டிருந்த வேப்ப மர கிளையை பிடித்து நிறுத்தினார். இருப்பதில் அவர் கண்ணுக்கு பெரிது என்று தெரிந்த கழியைப் பிடித்து முறித்தார். வேப்ப இலை கொண்ட காம்புகளை இலையோடு அகற்றி விட்டு,

"எப்டி டா தெரியாம விழும்",என்று கேட்டார்.

 மகேந்திரனின் உடலில் இப்படி தான் விழும் என்று தோல் பட்டை பட்டையாய் சிவக்கும் அளவு விழுந்தது அடி. துடித்தான். அவனது அம்மாவை பத்து நிமிடமாக கூப்பிட்டான். அவள் வந்து தடுக்கவில்லை. அவள் சென்று பதினேழு வருடங்கள் ஆகிவிட்டது. பின் ஆயா என்று கூப்பிட்டான் சாலையில் நடந்து வந்த எழுபது வயது சுப்பிரமணியத்தின் அம்மா ஓடி வந்தாள், தன் மகனைத் தடுக்க. 

"என் சாமிய கொன்னுடாத சாமி",என்று பேரனைக் கட்டி அனைத்து கொண்டாள் காமாட்சியம்மா.


  இது முதல் முறை இல்லை. இதற்கு முன் பல முறை நடந்தேறி இருக்கிறது இக்காட்சி. தந்தை வேப்ப குச்சியை உடைப்பதுவும், உடைத்த குச்சி உடையும்வரை அடிப்பதுவும், அதை மகன் வேண்டாம் வேண்டாம் என்று கூறி வாங்குவதும். அப்போதெல்லாம் ஆயா என்று மகேந்திரன் கூப்பிடும் வரை பேரன் அலறல் சத்தம் காதில் விழாதவாறே வேளை செய்து கொண்டிருப்பாள் காமாட்சியம்மா. காமாட்சியம்மாவிற்கு ஏதோ மகேந்திரன் அம்மா என்று கூப்பிட்டால், அதனைக் கேட்கமாட்டேன் என்கிறது போல் அவளது காது.

   

 மகேந்திரனுக்கு ஆறு வயது ஆகும் வரை தாய் இல்லா பிள்ளை என்று செல்லம் கொடுத்து சுப்பிரமணியம் வளர்த்த போது, ஊர்காரன் ஒருவன் பையனுக்கு செல்லம் கொடுத்து வளக்காதயா கெட்டுப் போய்டுவான் என்று கூற, அன்று எடுத்தார் வேப்பகுச்சியை, மகன் செய்யும் சின்ன சின்ன தவறுகளைத் தட்டி கேட்க.


 மகேந்திரன் இப்போது வயிற்றை பிடித்து கொண்டு துடிக்க காரணம் எதுவென்றால், ஒரு ஆட்டு குட்டி. ஆட்டு குட்டி யா? ஆம் ஆட்டு குட்டியே தான். அது பிறந்து மூன்று வாரங்கள் கூட முடியவில்லை. சரியாக சொல்லவேண்டும் என்றால் பதினேழு நாட்கள் தான் ஆகிறது. பதினேழு நாட்கள் ஆகிய ஒரு ஆட்டு குட்டி பதினேழு வருடங்களை வெற்றிகரமாக கடந்த ஒருவனை இக்கதியில் ஆக்கிவிட்டது.

  

 சென்ற வருடம் சுப்பிரமணியம் மாடுகளோடு சேர்ந்து ஆடும் வளர்களாம் என்று நினைத்தார். அதற்கு காரணம் மாட்டு எருவை விட ஆட்டு எருவு நிலத்திற்கு சக்தியுள்ளது என்று அவர் ஏதோ ஒரு வார இதழில் படித்திருக்கிறார். முதலில் ஒரு ஜோடி வெள்ளாடு வாங்கினார். வளர்த்து பார்க்கலாம் முடிந்தால் வைத்து வளர்க்களாம் இல்லை என்றால் விற்றுவிடலாம் என்று நினைத்தார். ஆடு வந்தநாளிருந்து வேப்ப குச்சிகள் நிறையவே உடைத்தார் மகனை அடிப்பதற்கு அல்ல ஆட்டுக்கு உணவளிக்க. 


 ஒருவருடமாய் மகனுக்கு அடி எதுவும் விழாது இருந்தது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறான் அவன் என்று நினைத்து அவர் அடிக்காமல் இருந்தாரா? இல்லை இனி அடிக்க வேண்டாம் என்று நினைத்தாரா? இல்லை அவரைக் கோபபடுத்தும் அளவிற்கு மகேந்திரன் எதுவும் செய்யாமல் இருந்தானா?. அது அவர்களுக்கு தான் தெரியும்.


 தேர்வு முடிந்து விடவும் ஆடு குட்டி போடவும் சரியாக இருந்தது. அன்று மகேந்திரன் வீட்டிற்கு வரும் போது அவனது தந்தையைப் பார்த்தான். அவர் அவனைக் கூட இப்படி கொஞ்சியிருப்பாரா என்று தெரியவில்லை அவனுக்கு.

"என் செல்லம், என் தங்கம், என் பவுனு, என் லட்டு",என்று கொஞ்சி தள்ளினார் ஆட்டுக்குட்டியை. அது ஒரு பெண் குட்டி. அன்றே அவர் முடிவு செய்தார், ஆட்டினை தொடர்ந்து வளர்க்களாம் என்று. ஒரு மாதம் முடிந்த பின்னர் மீண்டும் ஒரு ஜோடி ஆடு வாரங்களாம் என்றும் மனதில் நினைத்துக் கொண்டார்.


 மகேந்திரனும் அந்த ஆட்டுகுட்டியை கொஞ்சாமல் இல்லை ஆங்கிலத்தில்

"மை பேபி, மை ஸ்வீட்டி",என்று கொஞ்சினான். 

இவனைப் பார்த்தால் அந்த குட்டி என்ன நினைக்குமோ தெரியாது, ஓடி சென்று அவளது தாயின் அருகில் நின்றுகொள்ளும். அவ்வாறு அது செய்யும் போதெல்லாம் கடிகாரத்தை பார்ப்பான். மாடு பிடிக்க சென்ற தந்தை வர இன்னும் நேரம் இருந்தால் விடுக்கென்று அதனை பிடித்து கொண்டு

"நான் என்ன உன்ன பண்ண போற", என்று குட்டியைத் தூக்கி கொள்வான். அது மே மே என்று கத்த அவளது தாயும் மே மே என்று சத்தமிடம். வீட்டின் பின் புறத்தில் மகனுக்கு சுட தண்ணீர் போட்டுவிட்டு அடுப்பிள் விரகை தள்ளி கொண்டிருக்கும் காமாட்சிம்மா

"ஏன் சாமி ஆடு கத்துது", என்று மகேந்திரனை கேட்க.

"சும்மாதா யா",என்று ஆட்டுக்குட்டியை தாயிடமே மேதுவாக விட்டுவிடுவான்.


 அப்படிதான் இன்றும் தூக்கி வைத்திருந்தான். அவளது தாய் மே மே என்று கத்த,

" இந்த நீயே வச்சுக்கோ உன் புள்ளைய வச்சுக்கோ", என்று கீழே மேதுவாக இறக்கி விடாது சற்று வேகமாக தூக்கி போட்டு விட்டான். போத்தேன்று விழுந்த ஆட்டுக்குட்டியின் கழுத்து திருப்பிக் கொண்டு முறிந்து சத்தம் கேட்டது. மூச்சு பேச்சில்லாமல் ஆட்டுக்குட்டி இருக்க, அதன் மூக்கின் அருகே விரல் வைத்து மூச்சுவருகிறதா? என்று பார்த்தான். வரவில்லை ஆட்டுக்குட்டி இறந்துவிட்டது. இரத்தம் எங்கும் வரவில்லை. ஆனால் இன்னும் சற்று நேரத்தில் அவனுக்கு இரத்தம் வர போகிறது, அவனது தந்தை அடிக்கும் அடியில்.


 தன்னை ஒரு வருடமாக அவனது தந்தை அடிக்காமல் இருந்ததற்கான காரணம், அவன் பனிரெண்டாம் வகுப்பு படித்ததால் என்று அவனே உறுதி செய்தான். தொலைபேசி சிதறியதற்கே தசை எடுக்கும் அளவிற்கு அடி. ஒருவேளை அன்று ஆயா வராவிட்டால் உயிரை கூட அவர் எடுத்திருக்க கூடும் என்று நம்பினான். 

"என்ன செய்ய இப்போது ஒரு ஆட்டையே கொன்று விட்டேன். கண்டிப்பாக அவர் என்னை கொன்றுவிடுவார்", என்று ஏதேதோ யோசிக்க செய்தான். எடுத்தான் பரண்மீதிருந்த எலிக்கொல்லி மருந்தை, குடித்துவிட்டு, அதனை இருந்த இடத்திலே வைத்துவிட்டு, வந்து திண்ணையில் படுத்தான். படுத்த மறுகணம் வயிரை பிடித்தவன் தான் துடித்து கொண்டிருக்கிறான் ஐந்து நிமடமாய்.


 ஆடு சத்தமிடவில்லை ஆட்டுக்குட்டியும் சத்தமிடவில்லை இவன் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் அம்மா அம்மா என்று. காமாட்சியம்மா வந்தாள் ஆடு சத்தம் கேட்வில்லையேன்றல்ல பேரன் சத்தம் கேட்கிறது என்று. நல்லவேளை அம்மா என்று அழைத்தும் வந்தாளே. திண்ணையில் படித்திருந்த பேரனைப் பார்த்தாள். அவன் துடிப்பதை பார்த்தாள்.

"என்ன சாமி பன்னுது",என்று பதைப்பதைக்க கேட்டவளிடம். ஒரே வார்த்தையில்.

"எலி மருந்த குடிச்சுட்ட ஆயா",என்று அவன் கூற. 

"ஏன் சாமி அப்டி பண்ண", என்று கதறிய காமாட்சியம்மா மகன் சுப்பிரமணியத்தை தேடி ஒட எதிரே சுப்பிரமணியம் மாட்டைப் பிடித்துக் கொண்டு வந்தார்.


 அழுதுகொண்டு வந்த தனது தாயைப் பார்த்து சற்று பதட்டம் அடைந்த அவர்,

"என்ன மா ஆச்சு",என்று கேட்க.

"உன் மவ எலி மருந்த குடிச்சிட்டா யா சிக்கர வா",என்று காமாட்சியம்மா கூற. 

"என்ன ஆச்சு ஏன் அவன் அப்படி செய்தான்", என்றேல்லாம் அவர் கேட்கவில்லை காமாட்சியம்மாவிடம். மாட்டு கயிறை விட்டுவிட்டு வீட்டிற்கு விறைந்து ஓடினார் சுப்பிரமணியம். துடித்து கொண்டிருந்த மகனை ஒரே தூக்காக தூக்கி தோலில் போட்டு கொண்டு ஓடினார் வீரப்பாண்டியின் வீடை நோக்கி. 


 வீரப்பாண்டி வீட்டில் நல்லவேளை நான்கு சக்கர வாகனம் சாவாரிக்கு எங்கும் செல்லாமல் நின்றுக்கொண்டு இருந்தது. வண்டியின் பின் இருக்கையில் மகேந்திரனை சுப்பிரமணியமும் வீரப்பாண்டியும் ஏற்றினார். பின் இருக்கையில் மகேந்திரனின் தலையை மடியில் வைத்து கொண்டு சுப்பிரமணியம் கதவை மூடிய பிறகு, வீரப்பாண்டி வண்டியை எடுத்தார். வண்டி காற்றைக் கீழித்துக்கொண்டு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுவாத்தி மருத்துவமனையை நோக்கி சென்றது.


 மகன் துடிப்பதைப் பார்த்து கண்ணீரை தேக்கி வைத்து கொண்டிருந்த தந்தை, இப்போது தான் கேட்டார்.

"ஏன் யா இப்டி பண்ண",என்று மகனிடம்.

"ஆட்டுக்குட்டிய தூக்கி விளையாட்டா போட்ட பா. செத்து போச்சு. நீ வந்து அத பாத்தினா என்ன அடிச்சே கொன்னுடுவியோன்னு பயந்து எலிமருந்த குடிச்சுட்ட பா",என்றான் மகன் தந்தையிடம் அழுதுகொண்டே.

"அய்யோ. எவன் பேச்சோ கேட்டு உன்ன அடிச்சனே. என்ன மன்னுச்சுடு பா இனி அப்பா கைக் கூட ஓங்க மாட்ட",என்று சுப்பிரமணியம் தேக்கி வைத்த கண்ணீரை விடுவித்து மகனிடம் மன்னிப்பு கேட்டார். வீரப்பாண்டி வழியில் ஓடி வந்த ஆடுகளை ஆரன் அடித்து ஒதுக்கி கொண்டு சென்றார்.


 கண்கலங்கிய சுப்பிரமணியத்தைப் பார்த்து மகன் துடித்து கத்தினான். அது அவர் அவனை வேப்பக்குச்சியில் அடிக்கும்போது துடிப்பதை அவருக்கு நினைவு படுத்தியது. 

"என்ன காப்பாத்திடுவல பா

என்ன காப்பாத்திடுவல பா",என்று மீண்டும் மீண்டும் தந்தையை மகன் கேட்கையில்.

"காப்பாதிருவ பா பயப்படாத",என்றார் தந்தை.


 ஆறு வயது வரை மகனை அவர் எப்படியல்லாம் வளர்த்தார். முதல் பிரசவத்தில் பெற்ற பிள்ளையை தாயின் தாய் குளிப்பாட்டுகையில் குழந்தை அழுகிறது என்று,

"ஏன் இவ்ளோ தண்ணீய சூட ஊத்துற", என்று தாயிடம் சண்டைப் போடும் தாயைப்போல, அவரும் மகனைக் குளிப்பாட்டிய அவரது தாயிடம் சண்டைப் போட்டாரே. 

 

 மடியில் போட்டு தாலாட்டு என்று அவர் பாடிய பாடலுக்கும் மகேந்திரன் அன்று தூங்கி தான் போனானே. ஊஞ்சலில் போட்டு தூங்க வைத்தால் புரண்டு கீழே விழுந்து விடுவானோ என்று பயந்து தொட்டில் கட்டினாரே. மூன்று வயது வரை அவர் மடியில் படுத்தால் தான் அவனுக்கு தூக்கமே வந்தது. அப்போது கால் மறுத்து தான் போனது, வலிக்க தான் செய்தது, இருந்தாலும் மகேந்திரனின் முகம் பார்க்கையில், அதெல்லாம் எங்கு சென்றது என்று அவருக்கே தெரியாது.


 இன்னும் மருத்துவமனையை அடைய இரண்டு கீலோமீட்டர் தான் போகிடலாம் சீக்கிரம் என்றார் வீரப்பாண்டி.

"என்ன எப்படியாவது காப்பாத்திடு பா 

நா வாழனும்னு ஆசையா இருக்கு பா

உன் மடியில தூங்கனும்னு ஆசையா இருக்கு பா",என்று மகன் தந்தையிடம் மீண்டும் மீண்டும் கூறுவது குறைந்துகொண்டே சென்றது, மருத்துவமனையை நெருங்க நெருங்க. மகேந்திரன்

"என்ன எப்படியாவது காப்பாத்",என்று சொல்லவந்ததை பாதியிலே நிறுத்த வண்டி மருத்துவமனைக்கு முன் நின்றது. கீழ இறங்கி பின் கதவை திருந்து,

"அண்ணா புள்ளைய தூக்கு ணா",என்று மகேந்திரனின் காலை பிடித்து தூக்க முற்பட்டார் வீரப்பாண்டி. சுப்பிரமணியம் வீரப்பாண்டியைப் பார்த்தார். அவர் பார்வையில் உயிர் இல்லை. அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. 


 வீரப்பாண்டி மகேந்திரனின் காலைப் பிடிக்கும் போது தெரிந்துவிட்டது, நாடி துடிப்பு அடங்கி விட்டது என்று. மகேந்திரன் உறங்கிக் கொண்டிருக்கிறான், அவனது தந்தையின் மடியில்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract