Salma Amjath Khan

Inspirational

4.7  

Salma Amjath Khan

Inspirational

நிறம்

நிறம்

3 mins
432


பிரபல துணிக்கடையில் நான் இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறேன். வருகிற வாடிக்கையாளர்களிடம் துணிகளை காண்பித்து அவர்களை திருப்தியோடு அனுப்பி வைக்கும் வேலை என்னுடையது.

 எவ்வளவு வலி கால்களில் இருந்தாலும் முகத்தில் சூடிய புன்னகையுடனும் அவர்களிடம் கடுகடுக்காமல் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

கொஞ்சம் நேரமாக நேரமாக படுத்தி எடுத்த கால்வலி இப்பொழுது பரவாயில்லை. அதனால் மீண்டும் என் வேலையை பார்க்கலானேன், அந்த சொட்டை மண்டை மேற்பார்வையாளரை மனதில் திட்டிய படி.


என்னை நோக்கி வந்துகொண்டிருந்த வாடிக்கையாளரிடம் கவனத்தை செலுத்தினேன்.


"வாங்க மேடம் என்ன பாக்கணும்?"


"பாப்பாக்கு நெக்ஸ்ட் வீக் பர்த்டே அதுக்கு ஏத்த மாதிரி ஃப்ராக் பாக்கணும்."

அவர் கையைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு ஐந்து வயது சிறுமியை காட்டினார், அந்தப் பெண்.


தன் தாயின் கைகளை பிடித்தபடி தன் குட்டி கண்கள் மிரண்ட படி அவள் தாயை ஒட்டி நின்றாள், அந்த குட்டி தேவதை.


"பாப்பா உங்களுக்கு பர்த்டே வா? அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே..." என அந்த குழந்தையின் கன்னம் கிள்ளினேன்.


"தேங்க்ஸ் ஆன்ட்டி."என்றாள், புன்னகையுடன். ஆனால் அவள் பார்வை மட்டும் எங்கோ இருந்தது.


"சரி சொல்லுங்க. பாப்பாக்கு என்ன கலர் பிடிக்கும்னு? நான் உங்களுக்கு புடிச்ச கலர்ல உங்களுக்கு ஏத்த மாதிரி ஃப்ராக் காட்டுறேன்." என அந்த சின்னஞ்சிறு மலரிடம் கேட்டேன்.


"கலர் நா என்ன ஆன்ட்டி?" என்றாள், அவள் புதிராய்.


ஐந்து வயது சிறுமிக்கு நிறங்களை பற்றிக்கூட தெரியவில்லையே என, "பாப்பாக்கு கலர் நான் என்னன்னு தெரியாதா?" என குறும்பாய் கேட்டேன், அந்தப் பிஞ்சிடம்.


"அது.... அவ..ளுக்கு கண்ணு தெரியாது." என தயங்கிய படி கூறினாள்,அவள் தாய்.ஒரு நிமிடம் பக்கென இருந்தது. என் முன்னால் இருக்கும் அந்த தேவதைக்கு கண் தெரியாதா? இவ்வளவு அழகான குழந்தைக்கு கண் தெரியாது என தெரியாமல் நான் குறும்பாக கேட்ட விதம் என்னை சுட்டது.


என்ன சொல்வது என்ன செய்வது என தெரியாமல், "சாரி மேடம்" என அவள் தாயிடம் மட்டும் கூறி அந்தக் குழந்தையின் கன்னத்தை ஆதரவாக தடவினேன்.


"சொல்லுங்க ஆன்ட்டி கலர் னா என்ன? அம்மாகிட்ட எத்தனையோ தடவை கேட்டேன் கலர்னா பச்சை மஞ்சள் சிவப்புன்னு சொல்றாங்க ஆனா எப்படி இருக்கும்னு சொல்ல மாட்டேங்குறாங்க." என என்னிடம் கேட்க எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.


பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தேன். என்ன சொல்ல முடியும்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.


காலையில வரும் சூரியனை பார்க்க முடியாதவர்களிடம், இரவு வரும் நிலாவை பார்க்க முடியாதவர்களிடம்,இந்த அழகான பரந்து விரிந்த வானத்தை பார்க்க முடியாதவர்களிடம், அதில் ஓடி ஆடும் மேகத்தை பாக்காதவர்களிடம்,


எப்பவுமே சிரித்துக் கொண்டே இருக்கும் இந்த பூக்களை பார்க்க முடியாதவர்களிடம், எல்லாருக்கும் பிடித்த வானவில்லை பாக்காதவர்களிடம் ,பச்சை பசேல் என இருக்கும் செடி கொடிகளை பார்க்க முடியாதவர்களிடம் நிறத்தை பற்றி எப்படி கூறுவது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன்.


என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டு சிறிது யோசித்த பின் அந்த குழந்தையின் உயரத்திற்கு  ஏற்றவாறு அமர்ந்தேன்.


"எப்படி நாம்ம சாப்பிடற பொருட்களோட வெவ்வேறு சுவையை நம்ம நாக்குல இருக்குற பேஸ்ட் பட் உணர்த்துதோ. அதே மாதிரிதான் நாம பார்க்கிற ஒவ்வொரு பொருளோட நிறங்களையும் நம்முடைய கண்கள் உணர்த்தும். 


எப்படி நம்ம சாப்பாடுற பதார்த்தத்தோட சுவையை பார்த்து கண்டுபிடிக்க முடியாதோ. அதே மாதிரி நம் பார்க்கிற பொருட்களோட நிறங்களை தொட்டு பார்த்து உணரமுடியாது. எப்படி நாக்குக்கு சுவையோ. அதே மாதிரிதான் கண்களுக்கு நிறம். 


எப்படி சுவைல ஆறு விதம் இருக்குமோ அதே மாதிரிதான் நிறங்களிலும் ஏழு வண்ணம் இருக்கும்.அது ஒன்றோடு ஒன்று கலக்கும் போது புதுவிதமான நிறங்களையும் உருவாக்கும்."


"அப்படியா? அப்போ நிறங்களை பார்வையால மட்டும் தான் உணர முடியுமா?"


"ஆமா."


" தேங்க்ஸ் ஆன்ட்டி. நான் அம்மாட்ட இத எத்தனையோ தடவை கேட்டேன். ஆனா அம்மா ஒழுங்கா பதில் சொல்லவே இல்ல. நீங்க சொல்லிட்டீங்க." என தட்டு தடுமாறி என் கன்னங்களை பிடித்து கிள்ளினாள்.


என்னை தீண்டும் போது முகத்தில் புன்னகை ஒட்டிக்கொண்டது.


" சரி இப்ப குட்டி பேபிக்கு ஃப்ராக் பார்க்கலாம்." என குழந்தையின் தாயிடம் காட்டினேன்.


"இது அழகா இருக்கே." என அந்தக் குழந்தையின் மீதும் வைத்து பார்த்தார்,அவர்.


"அட ஆமா பேபி அப்படியே ஏஞ்சல் மாதிரி இருக்கீங்க. அவ்ளோ அழகு."என நெட்டி முறித்தேன்.


"ஆண்டி அழகுனா என்ன?" எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.


பொதுவாக குழந்தைகளுக்கு ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்துகொண்டே இருக்கும். அது எல்லாம் சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அந்த குழந்தை அறிந்துகொள்ளும் நோக்கில் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.


சில சமயம் வித்தியாசமாகவும் அதற்கு நமக்கு விடை தெரியாமலும் இருக்கும். ஆனால் அது சாதாரண சின்ன கேள்வியாகத்தான் இருக்கும்.


இந்த குழந்தையின் கேள்வியை சமாளிப்பது ரொம்ப கடினமாக இருந்தது. ஏனெனில் கண் தெரியாத குழந்தைக்கு அழகு என்பதை எப்படி எடுத்துக் கூறுவது. பார்ப்பதற்கு அழகாக இருந்தால் அழகுன்னு சொல்லுவார்கள் என அந்த குழந்தையிடம் சொன்னால்... உண்மையிலேயே அழகு என்றால் என்ன? என நான் யோசித்தேன்.


அந்தக் குழந்தையின் உயரத்திற்கு குனிந்து,


"உங்களுக்கு சாப்பிடுவதில் என்ன பிடிக்கும்?"


"எனக்கு குலோப் ஜாமூன் ரொம்ப பிடிக்கும். ரொம்ப இனிப்பா இருக்கும்."


"அதே மாதிரிதான் உங்க வாய்க்கு எப்படி ஒரு சுவை பிடிச்சிருக்கோ


இதே மாதிரி தான் உங்க கண்களுக்கு எந்த நிறம் பிடிச்சிருக்கோ, எந்த பொருள் பிடிச்சு இருக்கோ அதுதான் அழகு." என கூறி எப்படியோ சமாளித்து விட்டோம். என பெருமூச்சு விட்டபடியே எழுந்தேன்.


அந்தப் பெண் என் கையை பிடித்து கீழே இழுத்தாள். மீண்டும் அவள் உயரத்திற்கு குனிய,


" அப்போ எனக்கு உங்கள பிடிச்சிருக்கு. நீங்களும் அழகு தானே?" என தட்டு தடுமாறி என் கன்னங்களை பற்றி என் கன்னங்களில் முத்தம் பதித்தாள். ஏனோ தெரியவில்லை கண்ணீர் என் கன்னங்களை நனைத்து விட்டது.


அந்தப் பெண்ணின் தாய் நன்றி கூறிவிட்டு உடையை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால் என் மனமோ அன்று முழுவதும் அந்த குழந்தையின் பின்னே சென்று கொண்டிருந்தது.


என்றும் அன்புடன், 

சல்மா அம்ஜத் கான்.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational