Vijayakumar Jayaraman

Drama Tragedy

4.6  

Vijayakumar Jayaraman

Drama Tragedy

மாய வாழ்க்கை

மாய வாழ்க்கை

5 mins
604


ஷூவை கழற்றி ஸ்டாண்டில் வைத்து விட்டு உள்ளே வந்த அரவிந்தை சோபாவில் அமர்ந்தபடியே திரும்பிப்பார்த்து அவன் மனைவி ரம்யா கேட்டாள்.


'என்ன லேட்? உங்க அம்மா இன்னைக்கு ரெண்டு மூணு தடவை போன் பண்ணிட்டாங்க'


சோபாவில் வந்த சோர்வாக விழுந்தவன் சட்டை பட்டன்களை கழற்றிக்கொண்டே சொன்னான்.


'இன்னைக்கு ஒரு மீட்டிங் இருந்துச்சு. அதான் லேட். அம்மா எதுக்கு போன் பண்ணுனாங்க. திரும்பவும் பணம் வேணுமாம்? உள்ளே வந்ததும் வராததுமா இதை சொல்லி டென்ஷன் ஆக்குறே. எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புரியாது. முதல்ல ஒரு காபி எடுத்துட்டு வா'


'என்கிட்டே ஏன் கத்துறீங்க. அவங்க போன் பண்ணுனாங்க, அதை நான் சொல்லிட்டேன். அவங்க பாடு, உங்க பாடு. எனக்கென்ன' என்று சொல்லிவிட்டு எழுந்து காபி போட போய்விட்டாள்.


தொலைக்காட்சியில் ஒரு மெகா சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. மகன்கள் இருவரும் உள்ளே படித்துக்கொண்டிருப்பார்கள் என்று அவனுக்கு தெரியும்.


ரிமோட்டை எடுத்து ஒரு செய்தி சேனலுக்கு மாற்றினான்.


அரவிந்த் தனது குடும்பத்துடன் கடந்த ஏழு வருடங்களாக வசித்துக்கொண்டிருப்பது மலேஷியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் நகரத்தில்.


பி.டெக் பயோடெக்னாலஜி படித்தவன். படித்து முடித்துவிட்டு ஆறு வருடங்கள் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பார்மா கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனின் நண்பன் ஒருவனின் முயற்சியில் மலேசியாவில் உள்ள பார்மா கம்பெனியில் வேலை கிடைத்து வந்துவிட்டான். பின்பு குடும்பத்தையும் அழைத்து வந்துவிட்டான்.


இரண்டு மகன்கள். மூத்தவன் ஆறாவது படிக்கிறான். இளையவன் நான்காவது படிக்கிறான். இருவரும் நகரத்தில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்கள்.


அரவிந்துக்கு நல்ல சம்பளம். நகரின் நடுவில் ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள்.


நிரந்தர குடியுரிமைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். அது கிடைத்து விட்டால் சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்பது அவனது லட்சியம்.


அரவிந்தின் குடும்பத்தில் அவன் தான் முதல் என்ஜினீயர். முதல் பட்டதாரியும் அவன் தான். அவனுக்கு ஒரு அண்ணன் ஒரு தங்கை. அண்ணன் விவசாயம் பார்க்கிறான். தங்கை பக்கத்து ஊரில் திருமணம் முடிந்து சென்றுவிட்டாள்.


அரவிந்தின் அப்பா சின்னமலை ஒரு கார்பெண்டர். மர வேலை செய்து வந்த வருமானத்தில் தான் அரவிந்தை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.


கொஞ்சம் நிலம் இருந்தது. அரவிந்த் பிறப்பதற்கு முன்பே அவன் அண்ணன் பெயரில் சின்னமலை வாங்கிய நிலம்.


அந்த நிலத்தை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் ரம்யா அரவிந்தை குத்திக்காட்டுவாள்.


'உங்க அண்ணன் பேருல ரெண்டு ஏக்கர் நிலம். உங்க பேருல ஒரு சென்ட் கூட உங்கப்பா வாங்கல. சரியான ஏமாளி நீங்க'


அவள் சொல்லும் போதெல்லாம் அவனுக்கு கடுப்பு வரும். நிறைய செலவு செய்து அவனை படிக்க வைத்ததை அவன் வசதியாக மறந்து விட்டிருந்தான்.


நிலம் விஷயத்தில் அவனுக்கிருந்த கோபத்தில் ஊருக்கு போவதை கூட குறைத்து விட்டிருந்தான். செலவுக்கு கூட பணம் அனுப்பி வெகுநாளாயிற்று. போனில் பேசுவது கூட எப்போதாவது தான்.


அவன் அம்மா தான் எப்போதாவது போன் பண்ணுவாள். பணம் அதிகம் ஆகும் என்பதால் ஒரு நிமிடம் அல்லது அதிகபட்சம் இரண்டு நிமிடம் என்று பேரப்பிள்ளைகள் நலன் பற்றி மட்டும் விசாரித்து விட்டு வைத்துவிடுவாள்.


அரவிந்த் வேலை செய்வது பார்மா கம்பெனியின் ஆராய்ச்சி பிரிவில் என்பதால் உள்ளே போன் உபயோகப்படுத்த அனுமதி இல்லை. அதனால் வேலை நேரத்தில் அவன் போன் எடுக்கமாட்டான். அதனால் அவன் அம்மா வீட்டிலிருக்கும் ரம்யாவுக்கு தான் பெரும்பாலும் போன் செய்து பேசுவாள்.


அப்பா சின்னமலைக்கு உடல்நிலை சரியில்லாததால் இந்த ஒரு மாதமாகத்தான் அடிக்கடி போன் பண்ணிக்கொண்டிருந்தாள். ஒரு மாதமாக கை, கால்கள் வீங்கிப்போய் சரியாக சாப்பிடமுடியாமல் முடங்கிக்கிடந்தார் சின்னமலை.


பக்கத்து டவுன் மருத்துவமனையில் இரண்டாம் முறை சேர்த்தபோது பரிசோதனைகள் செய்து பார்த்து சிறுநீரகம் இரண்டும் பழுதாகி நோய் முத்தின நிலை என்று சொல்லிவிட்டார்கள். சிறுநீரக மாற்று ஒன்று தான் உயிர் பிழைப்பதற்கான வழி என்று சொல்லிவிட்டார்கள். அரசாங்க மருத்துவமனையில் ஏற்கனவே பலபேர் சிறுநீரகத்திற்கு காத்துகொண்டு இருந்ததால் அங்கே எந்த பயனும் இல்லை என்று அரவிந்தின் அண்ணன் சின்னமலையை தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டான்.


அங்கேயும் சிறுநீரகம் தானமளிப்பவர் யாரும் கிடைக்காததால், அரவிந்தின் அம்மா, அண்ணன் மற்றும் தங்கைக்கு பரிசோதனை செய்ததில் அவன் அண்ணனின் சிறுநீரகம் பொருந்தும் என்று தெரிந்தது. ஆனால் ஆபரேஷன் செலவுக்கு மூன்று லட்ச ரூபாய் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். ஏற்கனவே சிகிச்சைக்கு ஆன செலவுக்கு அரவிந்தின் அண்ணன் தன் நிலத்தை அடகு வைத்து கிடைத்த பணத்தில் சமாளித்து விட்டான். இப்போது மூன்று லட்ச ரூபாய்க்கு என்ன செய்வது என்று அவன் அம்மாவுக்கு புரியவில்லை. அதற்கு தான் இன்றைக்கு போன் பண்ணியிருந்தாள்.


அரவிந்த் அவன் அப்பா மருத்துவமனையில் இருக்கும்போது கூட இந்தியாவுக்கு வந்து அவரை பார்க்கவில்லை என்பதில் அவளுக்கு ஏக வருத்தம். ஆனால் இப்போது பணத்தேவைக்கு அவனை விட்டால் வேறு வழியில்லை. அதனால் தனக்கிருக்கும் வருத்தத்தை மறைத்துக்கொண்டு போன் பண்ணிக்கொண்டிருந்தாள்.


சூடான காபியை குடித்துவிட்டு இந்தியாவுக்கு போன் செய்தான் அரவிந்த்.


ஒரு ரிங் போனவுடனே அம்மா போனை எடுத்துவிட்டாள்.


'ஹலோ ரம்யா'


'ரம்யா இல்லம்மா. நான் அரவிந்த் பேசறேன். எதுக்கு போன் பண்ணினே'


'அரவிந்தா, நல்லா இருக்கியாப்பா. அப்பாவுக்கு ரொம்ப முடியலப்பா. இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஆபரேஷன் பண்ணலேன்னா உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் சொல்றாருப்பா. மூணு லட்சம் பணம் கட்டுனாதான் ஆபரேஷன் பண்ணுவாங்கப்பா'


சொல்லும்போதே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வருவது தெரிந்தது.


'ஏம்மா இங்க என்ன பணம் மரத்திலயா காய்க்குது. திடீர் திடீர்னு பணம் கொடுன்னா நான் எங்க போறது. எனக்கும் பசங்க இருக்காங்க. என் குடும்பத்தை நான் பார்க்கவேணாமா'


அவனே தொடர்ந்து பேசினான்.


'நான் மட்டும்தான் உங்களுக்கு பையனா. அண்ணன், தங்கச்சி எல்லாம் என்ன பண்ணுறாங்க'


'அண்ணன் அவனோட நிலத்தை அடகு வச்சு குடுத்த பணத்துல தான்பா இதுவரைக்கும் சமாளிச்சோம். இப்ப அவனுக்கும் என்ன பண்றதுன்னு புரியல. தங்கச்சியும் கஷ்டத்துல தான் இருக்கா. அதான் உன்கிட்ட கேட்கறேன்பா'


'வெளிநாடுன்னா நான் மட்டும் ஜாலியா இருக்கேன்னு நினைச்சியா. என்னால அதிகபட்சம் ஒரு அம்பதாயிரம் தான் அனுப்ப முடியும். நாளைக்கு காலைல அனுப்பறேன் சும்மா சும்மா தொந்தரவு பண்ணாதீங்க.'


அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமலேயே போனை வைத்துவிட்டான்.


அடுத்த இரண்டு நாள் ஊரில் இருந்து போன் இல்லை. மூன்றாவது நாள் இரவு போன் வந்தது. அவனின் அண்ணன் பேசினான்.


'அரவிந்த், அப்பா இறந்துட்டார். ஆஸ்பத்திரிலேர்ந்து இப்போது தான் வீட்டுக்கு கொண்டு வந்தோம். முடிஞ்சா கிளம்பி வா'


சொல்லிவிட்டு பட்டென்று போனை வைத்துவிட்டான்.


செய்தி கேட்ட பின்பு சற்று நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்த அரவிந்த் கொஞ்ச நேரம் கழித்து மெதுவாக எழுந்து உள்ளே சென்று ரம்யாவுக்கு செய்தியை சொன்னான்.


மகன்களுக்கு பரீட்சை இருப்பதால் ரம்யா வரமுடியாதென்று சொல்லிவிட்டாள்.


இரவு விமானத்தில் அவசர அவசரமாக டிக்கெட் புக் செய்து கொண்டு கிளம்பிய அரவிந்த திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ஒரு வாடகைக்கார் வைத்துக்கொண்டு கிராமத்திற்கு சென்றபோது வீட்டு வாசலில் பந்தல் போடப்பட்டு பலர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.


இறங்கி மெதுவாக உள்ளே போனான். அப்பாவின் உடலுக்கு பக்கத்தில் அவன் அம்மா வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அரவிந்தை பார்த்தும் அவள் முகத்தில் எந்த சலனமுமில்லை.


சின்னமலையின் உடலுக்கு அரவிந்தின் அண்ணன் தான் கொள்ளி வைத்தான்.


அரவிந்த் மலேசியாவுக்கு திரும்ப வேண்டும் என்பதால் மூன்றாம் நாளே காரியம் வைத்துவிட்டார்கள்.


காரியம் முடியும் வரை அவன் அம்மாவோ, அண்ணனோ அவனிடம் முகம் கொடுத்துக்கூட பேசவேயில்லை.


காரியம் முடிந்துவிட்டது. இரவு விமானம். டிக்கெட் புக் செய்து விட்டான். உறவினர்கள் கிளம்பி விட்டார்கள். யாருமில்லாத பந்தலின் கீழே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.


வேலியின் படலை திறந்து கொண்டு அருணாச்சலம் உள்ளே வருவது தெரிந்தது.


அருணாச்சலம் சின்னமலையின் நெருங்கிய நண்பர். பக்கத்து டவுனில் வசிக்கிறார். அரசு உத்தியோகம் பார்த்து ஓய்வு பெற்றவர். இரண்டு பேரும் சிறுவயது முதல் நண்பர்கள்.


மனைவியுடன் காசிக்கு சென்றிருந்ததால் சின்னமலையின் சாவுக்கு கூட அவரால் வரமுடியவில்லை. இப்போது தான் வந்திருந்தார். வீட்டின் உள்ளே சென்று அம்மாவிடம் துக்கம் விசாரித்துவிட்டு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தபடியே அரவிந்தை பார்த்தார்.


'என்னப்பா உன் வேலையும் கடமையும் முடிஞ்சு போச்சா? இனி கிளம்பவேண்டியது தானே பாக்கி'


பேச்சில் சிறிது நக்கலும் கோபமும் கலந்து தெரிந்தது.


'தெரியாமத்தான் கேக்கிறேன். அது என்னப்பா, படிச்சி வேலைக்கு போய் கல்யாணம் பண்ணிட்டிங்கன்னா, நீங்க வேற குடும்பமா ஆகிடுறீங்க, அப்பா,அம்மா வேற குடும்பமாகிடுறாங்க'


'பெத்த அப்பனுக்கு செலவு பண்ணாம அவன் சாவறதை பொறுமையா வேடிக்கை பார்த்திருக்கியேப்பா.. என்ன மனுஷன்டா நீ?'


'உன்ன உங்கப்பன் படிக்க வச்சார். உங்கண்ணனை ஏன் படிக்க வைக்கலன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா? உங்கண்ணன் ஸ்கூல் முடிச்சி காலேஜ் போக ரெடியானபோது தான் உங்க பாட்டிக்கு உடம்பு முடியாம போச்சு. உங்கண்ணன் படிப்புக்கு வச்சிருந்த பணத்தை எடுத்து தான் உங்கப்பா தன்னோட அம்மா வைத்தியத்துக்கு செலவு பண்ணி காப்பாத்தினார். அதனால தான் உன்னோட அண்ணன் மேல படிக்காம விவசாயம் பார்க்க ஆரம்பிச்சான்.'


சொல்லிக்கொண்டே தன்னுடைய கையில் வைத்திருந்த அந்த துணிப்பையை அரவிந்தை நோக்கி தூக்கிப்போட்டார்.


'அதோ, அந்த பையில உன் பேர்ல உங்க அப்பன் வாங்கின ரெண்டு ஏக்கர் நிலத்தோட பத்திரம் இருக்கு. இந்த நிலத்தை பத்தி உங்கம்மாவுக்கு கூட தெரியாது. இதை வாங்கின அடுத்த மாசமே உங்க பாட்டிக்கு முடியாம போனதால இந்த நிலத்தையும் அடகு வச்சு தான் வைத்தியம் பார்த்தார்.'


'அதுக்கப்புறம் கடந்த அஞ்சு வருஷமா என்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து வச்ச காசுல போன மாசம் தான் இந்த நிலத்தை மீட்டார். பத்திரம் என்கிட்டே தான் இருந்தது. அப்புறமா வாங்கிக்கிறேன்னு சொன்னவன் இப்போ ஆளே இல்லை.'


சொல்லிவிட்டு குலுங்கிக்குலுங்கி அழ ஆரம்பித்தார்.


சற்று நேரம் கழித்து கண்ணை துடைத்துக்கொண்டவர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.


'அப்பன் சாவுக்கு தலைக்கு மொட்டை போடல. மீசையைக்கூட எடுக்கல. பெத்தவங்களுக்கு நல்ல மரியாதை தரீங்கடா இந்த காலத்துப்பசங்க'


சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் துண்டை எடுத்து தோளில் போட்டுகொண்டு நடந்தார்.


என்ன சொல்வது என்று தெரியாமல் அரவிந்த் அப்படியே நெடுநேரம் உட்கார்ந்திருந்தான்.


Rate this content
Log in

Similar tamil story from Drama