Vijayakumar Jayaraman

Drama

4.8  

Vijayakumar Jayaraman

Drama

ஆன்லைன் கிளாஸ்

ஆன்லைன் கிளாஸ்

7 mins
257


"பர்ஸ், மாஸ்க், பேனா, பென்சில், ரிமோட் கவர், கார்டு கவர்"....."பர்ஸ், மாஸ்க், பேனா, பென்சில், ரிமோட் கவர், கார்டு கவர்"..... என்று மீண்டும் மீண்டும் ஒரே வரிசையாக பொருட்களின் பெயரை சொல்லும் அவரது கணீர் குரல் ட்ரெயின் பெட்டியில் குழுமி இருந்த மனிதர்களின் பேச்சு சத்தத்துக்கு நடுவே கொஞ்சமாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வரிசையாக நின்று அதே வார்த்தைகளை உச்சரித்துவிட்டு யாராவது வாங்குவதற்காக கை அசைக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அடுத்த வரிசைக்கு சென்றுகொண்டிருந்தார்.


சிலர் அவரை கவனிக்கவே இல்லை. சிலர் அவரது கையில் இருக்கும் பொருட்களை ஒருமுறை பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார்கள். சிலர் சலித்துக்கொண்டார்கள்.


"கொரோனா டைம்ல இவங்கள எல்லாம் ஏன் அலோவ் பண்ணுறாங்க"


சொன்னவர் முகக்கவசத்தை தாடைக்கு தான் போட்டிருந்தார். பொருள் விற்கும் அந்த முதியவருக்கு அது காதில் விழுந்தாலும் அவர் அதை பொருட்படுத்தாமல் அடுத்த வரிசைக்கு சென்றுகொண்டிருந்தார்.


அவர் பெயர் கணேசன். பல வருடங்களாக புறநகர் ரெயிலில் பர்ஸ், பேனா, பென்சில் போன்ற பொருட்களை விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்.


ஒரு சிறுவன் அவரை பார்த்து கையசைத்தான். அவர் முகம் மலர்ந்தது.


"என்னப்பா வேணும்?"


"ஒரு பேனா கொடுங்க தாத்தா"


"5 ரூபாய் பேனா வேணுமா இல்ல 10 ரூபாய் பேனா வேணுமா தம்பி"


"பத்து ரூபாய் பேனா கொடுங்க தாத்தா. சிவப்பு கலர் கொடுங்க" என்று கேட்டு வாங்கிக்கொண்டு அவன் அம்மாவிடம் இருந்து 10 ரூபாயை வாங்கி அவரிடம் கொடுத்தான்.


காலையில் இருந்து விற்றுக்கொண்டிருந்ததில் அதுதான் அவருக்கு முதல் போணி. காசை கண்களில் ஒற்றிக்கொண்டு பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அடுத்த வரிசையை நோக்கி நகர்ந்தார்.


அவருக்கு ஒரே மகள் தான். கட்டிட வேலை செய்யும் ஒருவனுக்கு திருமணம் செய்துகொடுத்தார். அவன் ஒரு மொடா குடியன். ஒரு நாள் திடீரென்று காணாமல் போய்விட்டான். அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகளையும் பேத்தியையும் கணேசனும் அவரின் மனைவியும் தான் கவனித்துக்கொண்டார்கள். நான்கு வருடங்களுக்கு முன்பு மகளும் திடீரென்று சிறுநீரகம் செயலிழந்து இறந்துபோனவுடன் பேத்தியை வளர்க்கும் முழுப்பொறுப்பும் அவர்களுக்கு வந்துவிட்டது.


கையிருப்பு முழுவதையும் மகளின் மருத்துவ செலவுக்கு செலவழித்துவிட்டதால், நொடித்துப்போய் பத்துக்கு பத்துக்கு என்ற அளவில் உள்ள ஷெட் போன்ற ஒரு சிறிய வீட்டுக்கு வாடகைக்கு இடம்பெயர்ந்தார்கள். பேத்தியை கல்வி உரிமை சட்டத்தின் மூலம் ஒரு தனியார் பள்ளியில் இலவசமாக சேர்த்துவிட்டார்.


கொரோனாவிற்கு முன்பு ஓரளவு வாழ்க்கை சமாளிக்கும்படி தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் ஒன்றரை வருடங்களாக ரயில்கள் ஓடாததால் வருமானம் சுத்தமாக நின்றுபோனது.


கொரோனாவிற்கு முன்பு, தினமும் 300 ரூபாய் வரை சம்பாதித்துவிடுவார். குடும்ப செலவு, பேத்தியின் படிப்பு செலவு என்று அனைத்தையும் அதைக்கொண்டே சமாளித்துவந்தார். கொரோனா கொஞ்சம் குறைந்தபின் ரயில்கள் ஓட ஆரம்பித்துவிட்டாலும் தற்போது 100 ரூபாய் சம்பாதிப்பதே கஷ்டமாக இருந்தது. 6 மாத வாடகை பாக்கி. ரேஷன் அரிசியை கொண்டு சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.


கொரோனா காலத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் பேத்தியின் பள்ளியில் ஆன்லைன் மூலம் தான் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார்கள். கணேசனிடம் இருந்தது பழைய மாடல் நோக்கியா போன் மட்டும் தான். ஒன்றரை வருடமாக பேத்தி ஆனந்தி அவளின் பள்ளித்தோழி வீட்டுக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அந்த தோழியின் குடும்பம் சில நாட்களுக்கு முன்பு வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றுவிட்டதால், தற்போது ஆன்லைன் வகுப்புக்கு ஒரு போன் அவசியமாகி விட்டது.


"ஏம்மா, ரெண்டாயிரம், மூவாயிரத்தில சைனா போன் எல்லாம் கிடைக்குதுன்னு சொல்றாங்களே, அதுமாதிரி வாங்கினா போதுமா" என்று அவர் கேட்டதும்,


"இல்ல தாத்தா, போன்ல கேமரா நல்லா இருந்தாதான் ஆன்லைன் கிளாஸ் நல்லா புரியும். நல்ல போனா வாங்கணும் தாத்தா" என்று ஆனந்தி சொன்னதும்,


"அதுக்கு எவ்வளவும்மா தேவைப்படும்"


"எப்படியும் ஒரு 5000 இருந்தாதான் நல்ல போனா கிடைக்கும் தாத்தா" என்று சொல்லிவிட்டு அவர் யோசிப்பதை பார்த்த அவள்,


"நீங்க அப்பப்போ கொடுக்கற காசை நான் உண்டியலில் சேர்த்து வச்சிருக்கேன் தாத்தா. ரெண்டாயிரத்துக்கு மேலே இருக்கும் இப்போ. இன்னும் ஒரு 3000 இருந்தா போன் வாங்கிடலாம்" என்று அவள் சொல்லவும், சிறு வயதிலேயே அவளுக்கு இருக்கும் பொறுப்பை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டார்.


சில நாட்களாக அந்த 3000 ரூபாயை பற்றிய சிந்தனை தான் அவருக்கு. தினமும் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் எடுத்து தனியாக வைத்துக்கொண்டிருந்தார்.


"பெரியவரே, இங்கே வாங்க" என்று ஒருவரின் குரல் கேட்டதும், அவரின் சிந்தனை கலைந்தது.


"என்ன சார், வேணும்"


"ரெண்டு மாஸ்க் கொடுங்க. எவ்வளவு?"


"ஒன்னு 15 ரூபா சார். ரெண்டு வாங்கினா 25 ரூபா கொடுங்க போதும். " என்று அவர் சொல்லவும்,


இரண்டு முகக்கவசங்களை வாங்கிக்கொண்டு 30 ரூபாயை தந்த அவர், மீதியை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.


அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அடுத்த வியாபாரத்தை தேடி நகர்ந்தார்.


அடுத்த சில நொடிகளில் ட்ரெயின் அந்த ஸ்டேஷனில் நின்றது. அந்த பெட்டியில் இருந்து இறங்கி அடுத்த பெட்டியில் ஏறிக்கொண்டார்.


"பர்ஸ், மாஸ்க், பேனா, பென்சில், ரிமோட் கவர், கார்டு கவர்"....என்று சொல்லிக்கொண்டே நகரத்தொடங்கிய அவரை ஒரு குரல் நிறுத்தியது.


"என்ன தாத்தா, கவுனிக்காத மாதிரியே போறியே... நெறய சேல்சா"


அவன் பிக்பாகெட் மணி. ரயிலில் கூட்டமான நேரங்களில் பயணிகளிடம் திருடுவது தான் அவன் தொழில். அவன் தொழில் அவருக்கு பிடிக்காது என்பதால் அவனிடம் பேசுவதை தவிர்த்து விடுவார். ஆனால், அவன் விடாப்பிடியாக அவ்வப்போது கூப்பிட்டு பேசுவான்.


வேறு வழியில்லாமல் "என்ன மணி, நல்லா இருக்கியா" என்று கேட்டுவைத்தார்.


"எங்க நல்லா இருக்க...கொரோனாவுக்கு அப்புறம் நான் எதிர்பார்த்த மாதிரி ரயில்ல கூட்டமே இல்ல தாத்தா. தொழில் ஒரே டல் தான்" என்று சலித்துக்கொண்டவன்,


"ஆமா, நீ ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கே...உடம்புக்கு கிடம்புக்கு முடியலையா"


"அதெல்லாம் ஒன்னும் இல்லேப்பா" என்று சொல்லிவிட்டு நகரப்பார்த்தவரை நிறுத்தி,


"சும்மா, சொல்லு தாத்தா... ரொம்ப நாள் பழக்கம். இத கூட கேக்கலைன்னா எப்படி"


இவன் சொல்லாமல் விடமாட்டான் என்று நினைத்தவர், ஆன்லைன் கிளாசுக்கு பேத்திக்கு போன் எப்படி வாங்குவது என்ற சிந்தனையிலே இருப்பதாக சொன்னார்.


"..ப்பூ..இதானா மேட்டர்... நம்ம கூட்டாளி கிட்டே ஒரு நல்ல செட் இருக்கு. வேணுமா, ஒரு 2500, 3000க்கு முடிச்சிடலாம். "


"பழைய போன் வாங்கி விக்கறாங்களா? நல்லா இருக்குமா" என்று அவர் கேட்டதும்,


அவன் சிரித்தான்..


"நம்ம கிட்டயே டபாய்க்கிற பாத்தியா....நம்ம கூட்டாளின்னு சொல்றேன். போன் வாங்கி விக்கறானான்னு கேக்கறியே...எல்லாம் ரெண்டாம் நம்பர் தான்" என்று அவன் சொன்னதும், அது திருட்டு போன் என்று புரிந்தது.


"வேணாம்ப்பா. நல்லா படிக்கற புள்ளைக்கு அந்த மாதிரி போன் வாங்கி கொடுத்தா படிப்பு எப்படி விளங்கும். என்னை ஆளை விடு...." என்று சொல்லிவிட்டு நகரத்தொடங்கினார்.


"இப்படியே நேர்மை.. நாயம்னு பேசிக்கிட்டே இரு...விளங்கிடும்" என்று சொல்லிவிட்டு ட்ரெயின் அடுத்த ஸ்டேஷனில் நின்றதும் இறங்கிக்கொண்டான் மணி.


அன்று இரவு போனுக்கு எவ்வளவு சேர்ந்திருக்கிறது என்று எண்ணி பார்த்தார். 1100 ரூபாய் சேர்ந்திருந்தது. எப்படியும் இன்னும் 2000 ரூபாயாவது தேவை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.


அடுத்த நாள், மதிய நேரத்தில், எதிரே மணி.


"என்ன தாத்தா. பேத்திக்கு போன் வாங்கிட்டியா..." என்று சிரித்துக்கொண்டே நக்கலாக கேட்டான்.


"என்ன கிண்டலா" என்று அவர் சற்று கோபத்துடன் கேட்கவும்,


"கோச்சிக்காத தாத்தா. நீ நம்ம ரொம்ப நாள் தோஸ்து. உனக்கு ஏதாவது பண்ணனும்னு தான் கேட்டேன். ரெண்டாம் நம்பர் போன் தான் வேணாம்னு சொல்லிட்டே. காசு எவ்வளவு வேணும்னு சொல்லு. வட்டிக்கு வாங்கி தரேன். அதை வச்சி போன் வாங்கிக்கொடுத்துடு. அப்புறமா, கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிடு. என்ன சொல்றே"


என்று அவன் கேட்டதும், அதுவும் நல்ல யோசனை தான் என்று அவருக்கு தோன்றியது.


"ரெண்டாயிரம் வேணும். எவ்வளவு வட்டி. ஸ்பீட் வட்டி, மீட்டர் வட்டியெல்லாம் வேணாம் எனக்கு"


"உனக்கு அப்படி சொல்வேனா. சாதாரண வட்டி தான். 7 வட்டி. கொடுக்கறது நம்ம தோஸ்து தான். இன்னைக்கு சாயந்திரம் வாங்கி கொடுத்திடுறேன்."


சரியாக மாலை 7 மணிக்கெல்லாம் ரெண்டாயிரம் ரூபாயை கையில் கொடுத்து விட்டான்.


கையில் ஏற்கனவே ஆயிரத்துக்கு மேலே இருக்கிறது. பேத்தியின் சேமிப்பு பணத்தையும் சேர்த்தால் அஞ்சாயிரத்துக்கு மேலே இருக்கும். நாளைக்கே ஒரு நல்ல போன் வாங்கிக்கொடுத்து விடலாம் என்று எண்ணிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.


வீட்டின் வெளியே பேத்தி ஆனந்தி தாத்தாவை ஆவலாக எதிர்பார்த்து நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.


"என்னம்மா. சாப்பிட்டியா" என்று கேட்டுவிட்டு உள்ளே போனவரை பின் தொடர்ந்து வந்த ஆனந்தி.


"தாத்தா. இன்னைக்கு நம்ம ஏரியா எம்.எல்.ஏ, செயலாளர் எல்லாம் நம்ம தெருவுக்கு வந்தாங்க. கொரோனா வந்து அப்பா அம்மா ரெண்டு பேரும் செத்து போனவங்க வீட்டுல நிறைய குழந்தைங்க அனாதையா ஆகிட்டாங்களாம். அவங்களுக்காக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வசூல் பண்ண வந்தாங்க. எனக்காச்சும் நீங்களும், பாட்டியும் இருக்கீங்க. ஆனா, நெறய பசங்களுக்கு தாத்தா பாட்டி கூட இருக்க மாட்டாங்க இல்லே....அதனால" அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு பயம் வந்துவிட்டது.


"அதனால, என்னோட உண்டியல் காசு எடுத்து அவங்க கிட்டே கொடுத்திட்டேன் தாத்தா. போட்டோ எல்லாம் எடுத்தாங்க தாத்தா. என்னை ரொம்ப பாராட்டினாங்க. "


ஆனந்தி சொன்னதை கேட்டவுடன், அவள் செய்த செயலுக்கு பாராட்டுவதா, விதி இப்படி தன்னுடைய வாழ்க்கையில் விளையாடுகிறதே என்று நொந்துகொள்வதா என்று புரியாமல் வெகு நேரம் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.


அவர் கையை பிடித்து உலுக்கினாள் ஆனந்தி.


"என்ன தாத்தா, எதுவுமே சொல்லாம இருக்கீங்க. போன் வாங்க முடியலன்னு வருத்தமா. கவலைப்படாதீங்க. ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண முடியலைன்னாலும் நான் கொஞ்ச நாள் புக்ஸ் வச்சி சமாளிச்சிக்கிறேன்" என்று சொன்னாள்.


"ரொம்ப நல்ல காரியம் பண்ணிருக்கேம்மா. சந்தோஷம்" என்று சொல்லிவிட்டு உள்ள போனார்.


காலையில் எழுந்ததும் தன்னிடம் இருந்த 3000 ரூபாயை எடுத்துக்கொண்டு ட்ரெயின் ஸ்டேஷன் கிளம்பினார். மாலை 6 மணிக்கு மேல் மணியை தேடி புறப்பட்டார்.


அவன் வீட்டு முகவரி அவருக்கு தெரியாது. சிலரிடம் விசாரித்துக்கொண்டு சென்றுகொண்டிருக்கையில், அவனே எதிரே வந்துவிட்டான்.


"என்ன தாத்தா. இந்த பக்கம். யாரையாவது பாக்க வந்தியா"


"உன்னை தாம்பா பாக்க வந்தேன். நீ அன்னைக்கு சொன்னியே அந்த ரெண்டாம் நம்பர் போன். அது இப்போ கிடைக்குமா..." என்று அவர் கேட்டதும்,


அவரை ஆச்சர்யமாக பார்த்தான் மணி.


"நீ தான் நீதி நாயம்னு பேசுற ஆளாச்சே...என்ன திடீர்னு. "


"விதி....தலை எழுத்து. அத விடுப்பா..இப்போ அந்த போன் கிடைக்குமா...கிடைக்காதா..."


"அதே போன் கிடைக்குமான்னு தெரில...புதுசு ஏதாவது வந்திருக்கும்.. நீ 3000 காச குடு. இங்கேயே உக்காந்துரு...நான் போய் பார்த்து வாங்கிட்டு வரேன்..." என்று சொல்லிவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சென்றவன் கால் மணி நேரத்தில் திரும்பி வந்தான்.


அவரது கையில் போனை திணித்தவன்....


"சூப்பர் செட். கேமரா சூப்பர். ஏதோ ஆன்லைன் கிளாஸுன்னு சொன்னியே...அதுக்கு நல்லா இருக்கும். மூவாயிரன்னு சொன்னான். உனக்காக 2600க்கு பேசி முடிச்சேன். இந்தா மீதி நானூற பிடி" என்று பணத்தையும் அவர் கையில் திணித்தான்.


"இந்த நானூறுல நல்ல சிம் கார்ட் வாங்கி போட்டுக்கோ. நெட் பேக் போட்டு கொடுத்துடு... பேத்தி சூப்பரா படிப்பா" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.


போனை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவருக்கு முந்தைய நாள் போன்றே பேத்தி அவரை எதிர்பார்த்து வாசலிலேயே நின்று கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. அவள் முகம் முழுவதும் அவ்வளவு சந்தோஷம்.


"என்னம்மா. முகம் முழுசும் சிரிப்பு." என்று அவர் கேட்கவும்,


கைகளில் பின்னால் மறைத்து வைத்துக்கொண்டிருந்த அந்த புத்தம் புதிய போன் பெட்டியை அவருக்கு காட்டினாள். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. பெட்டியை திறந்து போனை வெளியே எடுத்து அவருக்கு காட்டியவள்,


"எவளோ பெரிய போன் பாத்தீங்களா தாத்தா. சூப்பரா இருக்கு இல்லே" என்று மனம் கொள்ளா ஆனந்தத்துடன் அவரை பார்த்து கேட்டாள்.


"ஏதும்மா இது." என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த ஆனந்தியின் பாட்டி.


"அதை ஏன் கேக்கறீங்க...நேத்து இவ போன் வாங்கறதுக்காக சேர்த்து வச்சிருந்த உண்டியல் பணம் முழுசையும் கொடுத்தா இல்லே. அது எம்.எல்.ஏ மூலமா அமைச்சருக்கு தெரிஞ்சி, முதல் அமைச்சருக்கு தெரிஞ்சு போச்சாம்...அவர் உடனே இவளுக்கு ஒரு புது போன் வாங்கி கொடுக்க உத்தரவு போட்டுட்டாராம். இன்னைக்கு மத்தியானம், அமைச்சர் நம்ம வீட்டுக்கே நேரடியா வந்து இந்த போன இவகிட்டே கொடுத்து போட்டோ எல்லாம் புடிச்சிட்டு போனாங்க. "


கேட்கவே ஆச்சர்யமாக இருந்தது அவருக்கு. இப்படி எல்லாம் கூட வாழ்க்கையில் நடக்குமா என்று நினைத்துக்கொண்டவர், தன்னிடம் இருந்த போனை எடுத்து ஆனந்தியிடம் காட்டினார்.


"இது என்ன தாத்தா. செகண்ட் ஹேண்ட் போனா...வாங்கினீங்களா" என்று கேட்டுவிட்டு ஆர்வத்துடன், போனை வாங்கி ஆராய தொடங்கினாள்.


அது திருட்டு போன் என்று அவர் சொல்லவில்லை.


"அதான், இப்போ புது போன் வந்திருச்சு இல்லே. இதை திருப்பி கொடுத்து காசு வாங்கிடுங்க தாத்தா" என்று சொல்லிக்கொண்டே அந்த போனை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.


"தாத்தா, இந்த போன் என்னைப்போல யாரோ ஒரு பத்தாவது படிக்கிற அக்கா ஆன்லைன் கிளாசுக்கு யூஸ் பண்ண போன் போலிருக்கு தாத்தா." என்று ஆனந்தி சொல்லவும்,


"அதெல்லாம் எப்படிம்மா தெரியுது உனக்கு" என்று அவர் கேட்டார்.


"ஸ்கூல் ஹோம் ஒர்க், அசைன்மென்ட், டெஸ்ட் பேப்பர் எல்லாம் இருக்கு தாத்தா இந்த போன்ல. ஸ்கூல் பேர் கூட இருக்கு...." என்று சொல்லவும்,


"அந்த பொண்ணோட வீட்டு அட்ரஸ் கூட அதுல தெரியுமாம்மா" என்று அவர் கேட்டதும், அவர் எதற்காக அதை கேட்கிறார் என்று புரியாமல்,


"இருக்கு தாத்தா. அந்த அக்காவோட ஸ்கூல் ஐடி கார்டு போட்டோல அட்ரஸ் இருக்கு.. இங்கே பாருங்க" என்று அவருக்கு காட்டினாள். முகவரி ஆங்கிலத்தில் இருந்தது.


"அதையும், அந்த பொண்ணோட அப்பா பேரையும் ஒரு பேப்பர்ல தமிழ்ல எழுதி கொடும்மா" என்று கேட்டு வாங்கி கொண்டார்.


அன்று இரவு அந்த புது போன் பெட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு ஆனந்தி தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்ததும் அவருக்கு தூக்கமே வரவில்லை. அந்த முகம் தெரியாத பத்தாம் வகுப்பு பெண்ணும் ஆனந்தியை போலவே அவரின் மனக்கண் முன் தோன்றியது.


அதிகாலையிலேயே எழுந்தவர் மனைவியையும், பேத்தியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பாமல், முதல் வேலையாக அந்த முகவரியை தேடி புறப்பட்டார். சிறிய வீடு...நடுத்தர குடும்பத்து வீடு போல தெரிந்தது. சாலை ஓரம் நின்று சிறிது நேரம் பார்த்துவிட்டு அந்த வீட்டின் கேட் அருகில் சென்றார். முன் கதவு மூடி இருந்தது. உள்ளே ஆள் இருக்கும் சத்தம் கேட்டது. வீட்டின் முன்கதவின் மேல் ஒரு சிறிய பலகையில் அந்த பெண்ணின் அப்பாவின் பெயர் எழுதி இருப்பதை உறுதிசெய்துகொண்டார். கேட்டை திறந்து அமைதியாக உள்ளே சென்றவர், மூடி இருந்த கதவின் முன் அந்த போனை வைத்துவிட்டு வெளியே வந்து சாலையோரத்தில் திரும்பி பார்க்காமல் நடக்க தொடங்கினார்.



Rate this content
Log in

Similar tamil story from Drama