இதய நிலையம்
இதய நிலையம்
திருவல்லிக்கேணி நிலையம் மாலையின் செம்மஞ்சள் முத்திரையில் மூழ்கியிருந்தது. தேநீர்ப் புகை சிறுமேகமாய் காற்றில் நடனமாட, தண்டவாளத்தின் இரும்பு மொழி, “சமோசா, சமோசா !” என்னும் கூலியின் குரலுடன் ஒரு மென் பாடலைப் புனைந்தது. பழைய பெஞ்சில், காலத்தின் கோடுகளைச் சுமந்த மீனாட்சி அமர்ந்திருந்தாள்.
அவள் கரங்களில் காலம் கடந்த ஒரு காதல் புகைப்படம்—அதில் இளமையின் சிரிப்புடன் அவளும், அவளின் அன்பான கணவன் அழகரும், ரயிலின் நிழலில் நின்றிருந்தனர். அவள் கண்கள் நினைவுகளின் மழைத்துளிகளைத் தாங்கின.
ஆறு கோடைகளுக்கு முன், ஒரு வார்த்தைப் புயல்—வெளிநாடு செல்ல கூடாதென மறுத்த மீனாட்சியை அழகர் சாடியது—அவர்களை ரயில் பாதையின் கோடுகளாய் பிரித்திருந்தது. அழகர் கடல்கடந்து மறைந்தான்; மீனாட்சி இந்நிலையத்தின் நினைவுகளை மட்டும் சுமந்தாள், ஒரு காகிதத்தில் தண்டவாள இடைவெளியை இணைக்க பாலஸ்ட் கற்களாய் அவனது கடிதம் இருந்தது அவ்வாறு அவன் எழுத்து மிதந்து வந்தது: “அம்மு, முதல் முறை சந்தித்த இந்நிலையத்தில் மறுமுறை சந்திப்போம்.” அந்த வாக்கு அவள் இதயத்தை ஒரு தண்டவாளமாக்கியது, ஒவ்வொரு ரயிலிலும் அழகரைத் தேடியது.காலையின் முதல் சங்கு முதல் மீனாட்சி காத்திருந்தாள். ஒவ்வொரு ரயிலின் உருமும் மூச்சு, பழைய நினைவுகளை மீட்டது—அழகருடன் பகிர்ந்த அன்பின் சுவை, சிரிப்பின் சத்தம், கைகோர்த்த பயணங்கள். அவள் மனம் ஒரு நிலையமானது, அழகரின் நினைவுகள் அதன் பயணிகளாயின.
ஆனால், மணிக்கணக்கில் காத்திருந்தும், அவன் நிழல் தென்படவில்லை. அவள் இதயம் ஒரு உடைந்த தண்டவாளமாக மாறியது. அந்த கடிதத்தில் இருந்த விவரங்களை வைத்து ரயில் ஊழியர் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அந்தப் பக்கத்திலிருந்து வந்த பதில் அவளை உறையவைத்தது: “அழகர் மூன்று மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவர் கடிதம் பழையதாக இருக்கலாம் பல முறை வீட்டிற்கு பேச முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை கடிதங்கள் எழுதுவார் அதுவே என் கடைசி ஞாபகம் என கூற.” அவள் புகைப்படத்தை இறுகப் பற்றினாள். அவள் கண்கள் மெல்ல மழையாகின, நிலையத்தின் பெஞ்சில் அவள் இதயம் உடைந்தது. ஒரு ரயில் மெல்லமாக அவளை விட்டு விலகி ''கடக் '' கடக்” என விடைகொடுத்து புறப்பட்டது, அவள் நினைவுகளை இழுத்துச் சென்றது.
அழுது அயர்ந்து போன மீனாட்சி மூச்சை தேற்ற மற்றொரு ரயில் நடைமேடையை மெல்ல மோதி நின்றது. அதிலிருந்து ஒரு நிழல் இறங்கியது—நொண்டி, உடைந்த உடலுடன், மெல்ல நடந்து வந்தான். தேநீர்ப் புகையின் மறைவில், அவன் மீனாட்சியை நெருங்கி, “அம்மு,” என்று மெலிதாக அழைத்தான். மீனாட்சி திகைத்து, அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்—பழைய நினைவுகளின் மென் ஒளி. அவள் மெல்ல எழுந்து, அவன் உடைந்த விரல்களைத் தொட்டாள்.“வந்துட்ட,” என்று அவள் குரல் ஒரு மென் காற்றாய் ஒலித்தது. “போனது மறந்துடு,” என்று அழகர் மென்மையாகச் சொன்னான். அவர்கள் பெஞ்சில் அமர்ந்தனர், இருகபற்றி கதறி அழுதால் அவள் தலைகோதி ஆறுதல் கொடுத்தான் அழகர். புகைப்படத்தைப் பகிர்ந்தனர். அவன் தோளில் தலை சாய கண்ணீரால் ஈரமானது அவன் தோள் மட்டுமல்ல இதயமும் தான். அமைதியில் அவ்வியதங்களின் பாசம் பேசியது. தேநீர்ப் புகை காற்றில் மறைந்தது, நிலையத்தின் இரும்பு மொழி மெல்ல அடங்கியது.மீனாட்சி புகைப்படத்தை மூடி, “தடங்கள் இணைந்தன,” என்றாள்.
