திருக்குறள் 75. அரண் (746-750) - மு .வா உரையுடன்
திருக்குறள் 75. அரண் (746-750) - மு .வா உரையுடன்
746. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
மு.வரதராசனார் உரை:
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
747. முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
மு.வரதராசனார் உரை:
முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.
748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
மு.வரதராசனார் உரை:
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
மு.வரதராசனார் உரை:
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
750. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
மு.வரதராசனார் உரை:
எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.
