கவிஞனாக்கும் பேருந்து பயணம் !
கவிஞனாக்கும் பேருந்து பயணம் !


நிதானமாய் ஓடுகிற பேருந்து,
ஜன்னலோர இருக்கை,
சில்லென வீசும் காற்று,
மனதிற்கினிய பாடல்,
பூவினும் மெல்லிய சாரல்,
பார்க்கிற பக்கமெல்லாம்,
பச்சை நிறத்தோற்றம்,
இதற்கு மேல் என்ன வேண்டும்,
ஒரு பாமரன் கவிஞன் ஆவதற்கு ...!
பல மக்கள் கூடிட,
ஒவ்வொருவரும் வெவ்வேறு
கதைகள் சொல்லிட,
ரவிக்கை இல்லா கிழவிகளும்,
பாக்கு மெல்லும் பெருசுகளும்,
இளம் பெண்களும்
அவர் கண்களும்,
சிலமணி நேர பயணம்!
ஆஹா , ஆயிரம் கதைகள்
தோன்றிடுமே ..!!
ஆங்காங்கே சில நிறுத்தங்கள்!
சில ஏற்ற இறக்கங்கள்!
சில நேர அமைதி !
சில நேர சிந்தனை!
சில நிமிட ஞாபகங்கள் !
தனிமைகூட இனிக்கும்!
வாழ்வியல் சொல்லித்தரும்
இந்த பயணம் !!!
பலர் அமர்ந்தபடி !
சிலர் நின்றபடி !
சிலர் விட்டுகொடுத்தபடி !
இன்னும் சிலரோ தான் அமர
பிறர் இறங்கிட காத்திருந்தபடி !
என நிலை இல்லா இருக்கையை
தேடியே போகிற பயணம் !
நின்ற இடம் ஏறி !
வந்த இடம் இறங்கும் ஒரு பயணம் !
இதே தான் வாழ்வும் !
யாருக்கும் நிலையில்லா
பூமி !
பிறக்கிறோம் !
இருக்கிறோம் !
இறக்கிறோம் !
பணமுள்ளவன், மனமுள்ளவன்
என எல்லோரும் செய்யும்
வாழ்க்கைப் பயணம்!
நிம்மதி தேடி ,
அமைதியை நாடி ,
பாவமன்னிப்பு கோரி ,
காசிக்கும், பல கோவில்களுக்கும்
தீர்த்த யாத்திரை போகிறோம் !!!
வாழ்க்கை புரியா
மக்கள் தானே நாம் !
அங்கே தெரியாது பதில்கள் ,
வாழ்வில் செய்த சரி தவறுகள் ,
எல்லாம் புரியவரும்
இந்த சிலமணி நேர பயணத்தில்....
நான் கவிஞனானதும்
பல கதைகள் படைத்ததும்
வாழ்வை புரிந்ததும்
இதோ இந்த சிலமணி நேர
பயணத்தில் தான் !
செல்வோமே பேருந்து பயணம் !
நாம் ஞானியாகிட அல்ல !
மானிடனாகிடத்தான் !!!