தாய்மை
தாய்மை
அர்ப்பணிப்பு என்ற வார்த்தை கடவுளுக்காக மட்டும் இல்லை;
குழந்தைகளுக்காகவும் தான்.
ஒரு தாய் தன் பிள்ளையை கருவில் சுமக்க ஆரம்பித்த கணத்தில் இருந்து தன் வாழ்நாள் முடியும் வரை அதற்காகவே தன்னை முழுவதும் அவள் அர்ப்பணிக்கிறாள். கருவறையில் இருந்து கல்லறை வரை; கடவுளுக்கு நிகராக தன் குழந்தையை பாவிக்கிறாள். தன் குழந்தையின் நலனுக்காக அந்த கடவுளிடமே சண்டையிடுகிறாள். கடவுளின் அருள் தன் குழந்தைகளுக்கு பரிபூரணமாகக் கிடைக்க தன்னையே காணிக்கை ஆக்குகிறாள். பிள்ளையின் பாசத்துக்காக பரிதவிக்கிறாள். அன்பிற்காக ஏங்குகிறாள். பிஞ்சு கைவிரல் தொட்டுப் பார்த்து பூரிப்பு அடைகிறாள்;
தன் வாழ்க்கை முழுமைப் பெற்றதாக தன் பிறவிப்பலனை அடைந்ததாக உணர்கிறாள். தங்கை தமக்கை தாரம் துணைவி மகள் என்று எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காத பேரின்பம் தாய் என்று கூறியதும் வரும் அதிசயம் என்ன? ஒரு தாயாக இதில் பெருமிதம் கொண்டு என் போன்ற தாய்மார்களுக்கும் இப்படைப்பைச் சமர்ப்பிக்கிறேன். இது ஒரு தாயின் கதை அல்ல.
தாயின் வாழ்க்கை.
ஒரு பெண் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததும் தனக்குள் பல வேறுபாடுகளை உணர்கிறாள். காதலிக்கும் பொழுது பசி அறியாமல் கிடக்கிறாள். வயிற்றில் குழந்தை வந்ததும் பசி இல்லையென்றாலும் குமட்டல் இருந்தாலும் குழந்தை பசியால் இருக்கக் கூடாது என்றும் குழந்தையின் ஆரோக்கியம் அவசியம் என்று எண்ணி உணவு உட்கொள்கிறாள். பத்து மாதம் சூமக்கிறாள். தூக்கம் சோர்வு மயக்கம் குமட்டல் மலச்சிக்கல் கால் வலி முதுகு வலி மன மாற்றம் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை என இது போன்ற பல உடல் மற்றும் மன வேதனைகளை தாண்டி தன் குழந்தையை பெற்றெடுத்து ஆளாக்கி சிறந்த பண்புகளை கற்றுக்கொடுத்து ஒரு நல்ல மனிதனாக வளர்கிறாள். அதிலும் தான் பெற்ற குழந்தை ஒரு பெண்ணாக இருந்தால் தன் வாழ்கையை ஒரு உதாரணமாக முன்னிறுத்தி அவளின் கடைசி மூச்சு உள்ள வரை தன் பேரப் பிள்ளைகள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று போராடுகிறாள். தன் பணியில் இருந்து ஓயாமல் பாடுபட்டு தன் வருங்கால சந்ததியினருக்காக அயராமல் உழைத்து நம்மை பேணி காக்கும் நம் காவல் தெய்வம் தாய். மரணமும் தாய் மடியில் நடப்பின் அது சொர்கமே. ஒரு தாயின் கடைசி ஆசை எதுவாயின் அது தன் பிள்ளையின் கையில் தன் உயிர் நீங்க வேண்டும் என்பதே அவளின் பேராசை என்றே சொல்லலாம். தாயை காப்போம் தாய் அன்பில் திழைப்போம் தாய் நாட்டை நேசிப்போம் தாய்மை போற்றுவோம்.
