Max xerox

Drama Classics Inspirational

4.5  

Max xerox

Drama Classics Inspirational

புதிய மனிதன்

புதிய மனிதன்

4 mins
253


காமாட்சி மிகவும் களைப்புடன் காணப்பட்டாள். அதிகாலை வேலைக்கு வரும் முன் நீராகத்தோட சரி, இதோ மாலை நான்கு மணி ஆக போகுது, இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு தோணவில்லை. காரணம் இது மல்லாட்டை சீசன். கடந்த பத்து நாட்களாக மிக கடுமையாக காலை முதல் மாலை வரை கழனிகாட்டில் வேர்கடலை பிடுங்கும் பணியில் மிக தீவிரம் காட்டி வருகிறாள். என்ன செய்வது இந்த மாதிரி ஏதாவது சீசனில் தான் நாலு காசு பார்க்க முடிகிறது என்பது அவளுடைய எண்ணம். அதுவும் அவள் இப்போது நிறைமாத கர்ப்பிணி வேறு. அவளுடைய தாய் நீ வரவே வேண்டாம் என்று எவ்வளவு எடுத்து சொல்லியும் அவள் தானும் வேலைக்கு வருவேன் என்று அடம்பிடித்து பணம் சம்பாரிப்பதில் குறியாக இருந்தாள். ஏழை அவள் என்ன செய்வாள். காற்று உள்ள போது தானே தூற்றி கொள்ள முடியும். 


அன்று பத்தாவது தினம். மிஞ்சி, மிஞ்சி இன்னும் இரண்டு தினம் வேலை இருக்கும் அப்புறம் பழைய குருடி கதவ திறடின்னு வீட்டு மேல் கூரைய அண்ணாந்து பார்த்து தேவுடா, தேவுடான்னு உட்கார்ந்து இருக்கனும். அன்று காமாட்சியோட அம்மாவுக்கு உடல் சுகமில்லை. அவள் வேலைக்கு காமாட்சியுடன் வரவில்லை. அவளுங்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே துனை அவள் தாய் தான். தாலி கட்டிய புருஷன் , ஆறுமாதம் முன்னாடி எதோ ஒரு சிருக்கியோட ஓடி போய்விட்டான். போனவன் சும்மா இருந்தானா, கண்ணே , மணியேன்னு இவ வைத்த ரொப்பிட்டு போய்ட்டான் படுபாவி. இப்ப வருவான், அப்ப வருவான் என்று நினைத்த காமாட்சிக்கு ச்சீ என்று ஆகிவிட, கணவன் இறந்து விட்டதாக நினைத்து விரக்தியின் ஓரத்திற்கே வந்து வட்டாள். 


கழனி காட்டில் இவள் மட்டும் தான். மத்தியானத்துக்கு கொண்டு வந்த கட்டு சாப்பாடு, முடிச்சி அவிழாமல் அதே இடத்தில் இருந்தது. சூரியன் உத்தரவு வாங்கும் நேரம், யாரொ ஒரு கிழவி வெற்றிலை பாக்கு நன்கு வாயில் குதப்பி காரி வானத்தின் கிழே துப்பியதால், கிழ்வானம் சிவந்து சிதறிய சித்திரமாக காட்சி அளித்தது. பறவைகள் பத்திரமாக கூடுகளுக்குள் தஞ்சம் அடைய, ஈசானை மூலை திடிரென்று நன்கு இருட்டியது. கருமேகங்கள் சூழ தொடங்கின. தரைக்காற்று பலமாக வீச தொடங்கின.

இனி வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான்.


வேலையை ஏற கட்டியவள் களத்து மேட்டுக்கு வந்தது தான் தாமதம் ஜோ வென மழை பிய்த்துரியது. அங்கே இருந்த சின்ன குடிசையில் மழைக்கு ஒதுங்கினாள். அதீத வேலையின் களைப்பு, மிக சோர்வாக அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டாள். மறந்து போன பசி அவள் வயிற்றை கிள்ள தொடங்கியது. நல்ல மழை பெய்தவதால் சாரல் குடிசை உள்ளே நன்கு அடித்தது.

தட்டுப் பந்தல் போல் தற்காலிக குடிசையில் பல ஓட்டை வழியாக மழை நீர் வடிந்தது.

இதே மாதிரி இன்னும் பத்து நிமிடம் மழை நிற்காமல் பெய்தால் குடிசை உள்ளே முழுவதும் தண்ணீர் வந்து விடும். சாப்பாட்டு மூட்டையை அவழ்த்தாள்.


கையை மேல் கூரையில் இருந்து வடியும் நீரில் கழுவி, அலுமனிய தூக்கில் உள்ள

கருவாட்டு குழப்பு சோறு, அவள் பசியை ரணகளபடுத்த, மட,மட வென ஒரு பருக்கு கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டாள். ச்சே அம்மாவின் கை பக்குவமே தனி தான். ருசித்து சாப்பிட்டு, கை கழவினாள். திடிர் விக்கல், தண்ணீர் அவசியம் தேவை. ஆபத்துக்கு பாவம் இல்லை, அதே மேல் குடிசையின் மேல் கூரையில் இருந்து இப்போது கனிசமாக திறந்த குழாயில் இருந்து தண்ணீர் வருவது போல் கொட்ட, இரு கரம் கொண்டு தாகம் தீர தண்ணீர் பருகினாள். ஏதோ ஒரு திருப்தி. ஏதோ ஒரு நிம்மதி. உண்மையில் யாராக இருத்தாலும், நல்ல பசியில் ருசியான உணவு சாப்பிட்டால், அதை விட சந்தோஷம் ஏதாவது உள்ளதா. மழை விடவில்லை. தூக்கம் கண்ணை கட்டியது.


தரையில் படுக்க இடம் இல்லை. முழுவதும் தண்ணீராக காட்சியளிக்க, இது சரிவராது, தலை முக்காடு போட்டு தன் வீட்டை நோக்கி நடையை கட்ட ஆயத்தமினாள். நல்ல இருட்டு. மழை வேகம் குறைந்தாலும், வீரியம் குறையவில்லை. கையில் அலுமினிய தூக்குடன் மழையில் நனைந்த வண்ணம் ஒரு பத்து அடி வைத்திருப்பாள்.


அவள் வயிறு ஏதோ செய்தது. தலை தீடிர் என சுற்றியது. சுதாரித்தாள் மேலும் நடந்தாள். இடுப்பு வலி ஆரப்பித்துவிடவே, புரிந்து கொண்டால், இது பிரசவவலி என்று. இப்போது அவளால் நடக்க முடியவில்லை. அங்கேயே உட்கார்ந்து விட்டாள். இடுப்பு வலி தாங்க முடியவில்லை. " அம்மா, என்னால முடியலேயே, அம்மா வலிக்குதே, அய்யோ யாராவது வருவீங்களா, அம்மா தாங்க முடியலயே, முருகா, என்ன காப்பாத்துப்பா, அம்மா.. அம்மா... என்னால முடியலயே, யாராவது காப்பாத்துங்களேன்.. யாராவது..."

மழை முழுவதும் அவளை நனைத்து விட்டது. சுற்றி இருட்டு, ஒரு ஈ, காக்கா இல்லை.


காற்றை தவிர வேறு ஓசை இல்லை. அவள் அழுகை, அவளின் அவசர அழைப்பின் குரல் ஓயவில்லை. வேதனையின் உச்சத்தில் அவள். யாராவது வரமாட்டார்களா என்ற நம்பிக்கையுடன் , வலி தாங்காமல் இப்போது மிக பலமான குரலில் கத்தினாள். தூரத்தில் ஒரு உருவம் வருவது தெரிந்தது. இருட்டில் யார் என்று அவளால் கண்டுபிடிக்கயிலவில்லை. இப்போது அந்த உருவம் அவள் அருகே வர அது யார் என்று கண்டுபிடித்தாளவள், " அய்யோ, இவனா இந்த நேரத்தில். இடுப்பு வலியில் துடித்தவள், அவனைப் பார்த்து பயந்தாள். வந்த அந்த ஆசாமி, வீரய்யன்.


எல்லா கெட்ட பழக்கத்துக்கும் சொந்தக்காரன். இரண்டு தடவை கொலை செய்த குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்தவன். அவனைக் கண்டாலே அந்த ஊர் மக்கள் பயப்படுவார்கள்.

மிக அருகே வந்தான். "சாமி இது என்ன சோதனை, இவனை ஏன் இங்கே அனுபிச்ச", பயத்தில் உடல் நடுங்கினாள்.

மழை பெய்து கொண்டிருந்தது. இடுப்பு வலி உக்கிரமாக அதிகரிக்க, பயம், வலி, எல்லாம் ஒட்டு மொத்தமாக அவளை தாக்க, அழதுகொண்டே கண்களை இருக்கமாக மூடினாள்.


அவள் அருகே வந்த வீரய்யன், நிலைமை புரிந்தவனாய், அவளை அலேக்காக தூக்கினாள். " என்ன விட்டுவிடு, என்ன விட்டுவிடு" அவள் கதறினாள். அவளை, அந்த குடிசையில் படுக்க வைத்தான். தன் லுங்கியை கழட்டியவன், அவள் இடுப்பில் இருந்து கால் வரை போர்த்தினான். " புடவையை உயர்த்து புள்ள" திரும்பி நின்று அதட்டல் குரலில் சொன்னான். அவள் இப்போது புரிந்து கொண்டாள். அவ்வாறே அவள் செய்தாள்.


"நல்லா கால அகட்டு புள்ள" திரும்பி நின்ற வாறே மீண்டும் அதட்டல் குரலில் வீரய்யன். அவ்வாறே அவள் செய்தாள். லுங்கி அவள் கால்கள் மேல் போர்த்தியே இருந்தது. அம்மா... அய்யோ.. தாங்க முடியலயே, அம்மா...அம்மாஆஆஆஆஆஆஆ....

ஆபத்துக்கு பாவம் இல்லை, வீரய்யன் களத்தில் குதித்தான். மருத்தவச்சி வேலையை செவ்வன பார்த்து முடித்தவன்,

அவள் கருப்பையில் இருந்து உதிர்த்த அந்ந சிசுவை அவளிடம் காண்பித்தான்.


" பையன்" ஒரே வார்த்தை கூறி, அந்த சிசுவை அவளிடம் கொடுத்தான்.

பிறந்த குழந்தையின் கனீர் அழுகை குரல், எங்கும் எதிரோலிக்க, அவள் கண்களில் ஆனந்த கண்ணீர். தன் தாய்மையை பூர்த்தி செய்ய உதவியனுக்கு அவள் இரு கரம் கொண்டு கும்மிட்டாள். பதிலுக்கு வீரய்யன் ஒரு சின்ன புன் முறுவல் செய்து விட்டு, " உன் ஆத்தா கிட்ட சொல்லிடரேன்."


அவன் வேலை முடிந்தது. அங்கிருந்து சென்று விட்டான்.

மனிதன், பல தருணங்களில் ஒரு சூழ்நிலை கைதி. காமாட்சிக்கு ஒரு ஆண் குழந்தை மட்டும் பிறக்கவில்லை, வீரய்யன் என்ற புதிய மனிதனும் பிறந்தான்.



Rate this content
Log in

Similar tamil story from Drama