சே சிவக்குமார்

Drama Inspirational

3.8  

சே சிவக்குமார்

Drama Inspirational

ஒரு காட்டுல இருந்த ஊருல

ஒரு காட்டுல இருந்த ஊருல

2 mins
35.7K


காரிருள் சூழ்ந்த ஓர் அடர்ந்த வனம், 


மேட்டு நிலத்தின் மையத்தில், 


பாய்மரக்கப்பலையொத்த சிறு கூடாரம் மிக கம்பீரமாய் காட்சியளித்தது, அதை மேலும் மெருகேற்றுவதற்க்கு அதன் பணை கீற்று ஓட்டையின் வழியாக ஒழுகிக் கொண்டிருந்த நிலவொளி எதிர்க்கட்சியை போல தனக்கென சில இடங்களை பிடித்துக் கொண்டது


காட்டுப் பன்றியின் கொழுப்பில் மூழ்கி இருந்த மண் விளக்கின் குழியின் விழும்பில், தீீ தூண்டப்பட்ட பருத்தி பஞ்சின் வெளிச்சம் அந்த கூடாரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த இரவு பொழுது அது.


இயற்கையின் படைப்பில் யாருடனும் ஒப்பிட்டு சொல்ல முடியாத பேரழகி 


-அவள்-


நீள கூந்தலை தனது இருக்கைக்கு விரிப்பாய் கிடத்தி அதன்மேல் சம்மணமிட்டு அமர்ந்து தனது விம்மி புடைத்த மார்பக காம்புகளில் ஒன்றை அரைத் தூக்கத்தில் இருக்கும் தனது இரண்டு வயது குழந்தையின் இதழில் வருட, 


மீன் அகப்பட்ட தூண்டிலின் தக்கையைப் போல முடிந்தவரை உள்ளே இழுத்துக் கொண்டாள்,


அந்த நொடி அவள் உயிரில் ஏற்பட்ட அசைவு, 


பூமிப்பந்து தனது சுழற்சியை ஒரு நொடி நிறுத்தி இயக்கியது போல் அவள் உடல் அசைவில் தென்பட்டது, 


தாய்மைக்கு மட்டுமே வழங்கப்பட்ட வரம் அது...


அவள் கால் தண்டையின் குளிர்ச்சியில் செவிசாய்த்து தரையில் கிடந்து தூக்கத்திற்கு ஏங்கிக்கொண்டிருக்கும் தனது பெண்ணிற்கு, 


விறகுவெட்டி காப்பு காய்த்து போன தனது பட்டுக் கரங்களால் கோதி விட்டுக்கொண்டே ஒரு கதை சொல்ல எத்தனித்தால்....


ஒரு காட்டுல ஒரு ஊர் இருக்கு.... அந்த ஊருல நிறைய அரக்கர்கள் வாழ்ந்து கொண்டு இருக்காங்க.....,


இப்படியே அவள் இரவு மெல்ல மெல்ல நகர்ந்தது, அவள் பிள்ளை அவள் கால் தண்டையில் இருந்து தரைக்கு முழுவதுமாய் நழுவியது போல்...,


அகல் விளக்கும் மெல்ல மெல்ல தன் அதிகாரத்தை நிலவொளியிடம் இழந்த தருணம்


ஒரு நாற்பது வயதொத்த பெண்ணின் கம்பீர குரல்


ஏண்டி கண் அசந்துட்டியா இல்ல முழிச்சுட்டு இருக்கிறாயா? 


வா ஆத்தா கொட்ட கொட்ட முழிச்சிருக்கேன் என்னவா?


ஏ ஒடம்பு சரி இல்லைன்னு சொல்ல... இந்த மருத்துவச்சி மருந்து கொடுத்தா....

அது என்னடி ரொம்ப கசக்குது அதான் என் பிள்ளைக்கு கொஞ்சம் ருசியா நீ பால் கொடேன் வயிறார....,


அதுவுமில்லாம நம்ம கூட்டத்திலேயே நீதான்டி பதும..., பாப்போம் அப்படியாவது இந்த கருவா பய ஜொலிகிறானன்னு


சும்மா இருந்தா... எப்ப பார்த்தாலும்

பெத்த புள்ளைய குத்தம் சொல்லிக்கிட்டே, அவனுக்கென்ன என் சாமி


சிறிதும் தாமதிக்காமல் தான் பெற்ற பிள்ளையை மார்புச் சூட்டில் இருந்து பிரித்து தலைகோதி தன் தாயிடம் கொடுத்தாள், 


மீண்டும் நிலவொளி எதிர்க்கட்சி ஆனது


தன் இரண்டரை வயது தம்பியை கையில் ஏந்தி தலைக் கோதி சற்றே புடைத்து, எச்சில் ஈரம் படிந்த மார்பக காம்புகளில் அவன்

இதழில் வருட....


அவன் மட்டும் என்ன விதிவிலக்கா?


மீன் அகப்பட்ட தூண்டிலின் தக்கையைப் போல முடிந்தவரை உள்ளே இழுத்துக் கொண்டான்


மீண்டும் அவள் மட்டும் என்ன விதிவிலக்கா?


அந்த நொடி அவள் உயிரில் ஏற்பட்ட அசைவு பூமிப்பந்து தனது சுழற்சியை ஒரு நொடி நிறுத்தி இயக்கியது போல் அவள் உடல் அசைவில் தென்பட்டது.


இப்படியே அன்றிரவு அவள் பொழுது வற்றியது....


எனக்கு ஒரே ஒரு சந்தேகம்


அவள் சொன்ன ஒரு காட்டுல இருந்த ஊருல 


-"எழுதிய நானும்... -


இதை வாசித்து முடிக்கப் போகும் நீயும்...


அவள் பிள்ளைகளுக்கு என்னவாயிருக்கும் என்று....."



Rate this content
Log in

Similar tamil story from Drama