Arun Andiselvam

Abstract Others

4.5  

Arun Andiselvam

Abstract Others

முதல் விமான பயணம்

முதல் விமான பயணம்

11 mins
23.4K


சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையிலிருந்த டெய்லி ஸ்பென்சரில் வார நாட்களில் வழக்கம் போல் எப்பொழுதும் இருக்கின்ற கூட்டம் தான் அன்றும் இருந்தது. கடை வளாகத்தின் வெளியே பாவ் பாஜி, மினி பர்கர் என பலவகையான நவீன பண்டங்கள் விற்கும் வண்டியை பார்த்ததும் எனது மனைவி என்னை ஏக்கமாகப் பார்த்தாள்.


“ப்ரெக்னென்ட்டா இருக்கப்ப இதெல்லாம் சாப்பிடலாமா?” எனப் பொறுப்பாகக் கேட்டேன்.


“சரி வேணாம்..” என பொய்யாக கோவித்துக்கொண்டு கடைக்குள் சென்றுவிட்டாள்.


நான் சென்னைக்கு குடி பெயர்ந்ததிலிருந்து எங்களுக்கு தேவையான பலசரக்கு சாமான்களை டெய்லி ஸ்பென்சரில் தான் வாங்குவோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை இங்கே வந்திருந்தாலும் இந்த முறை வந்திருந்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது. எப்பொழுது கடைக்குள் வந்தாலும் நேராக ஆண்கள் செக்ஷனுக்குள் நுழைந்து எனக்குத் தேவையான பொருட்களை தேடிச்சென்று எடுத்து வந்து டிராலிக்குள் போட்டு விடுவதோடு எனது ஷாப்பிங் முடிந்துவிடும். அதன் பிறகு வெளியே வந்து ஃபோனில் சிக்கிக்கொள்ளும் நண்பர்கள் எவனோடாவது ஷாப்பிங் முடியும் வரை பேசி மொக்கை போடுவது தான் வழக்கம்.


ஆனால் இந்த முறை டிராலி எனது கட்டுப்பாட்டில் இருந்தது. சமையல் பொருட்கள் இருக்கும் வரிசையில் என் மனைவிக்கு பின்னால் அடக்க ஒடுக்கமாக பொறுப்பான புருஷனாக நின்றுகொண்டிருந்தேன். முதலில் கடுகு, சீரகம், வெந்தயம் என அஞ்சறை பெட்டிக்குரிய சாமான்களை எடுத்து கூடைக்குள் போட்டாள். 


“எந்த சமையலா இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப முக்கியம்..” என்றாள்.


“சரிங்க மேடம்..” என நான் கிண்டலுக்காக சொன்னபொழுது என்னை திரும்பி முறைத்தவாறே “ஷாப்பிங் பண்ணனுமா.. இல்லை நீங்களே பாத்துக்கிறீங்களா?” என்றாள்.


“ஓகே. ஓகே. சாரி.. நீ பாரு..” என்று பம்மிக்கொண்டே அவள் பின்னால் சென்றேன். சமையல் நிகழ்ச்சிகளில் வரும் பெண்களைப் போல் ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து டிராலிக்குள் போட்டதும் “இது பெருங்காயம், இதுக்குப் போடுறது.. இது உப்பு அதுக்குப் போடுறது..” என ஒவ்வொன்றையும் எப்படி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் ஏன் பயன்படுத்த வேண்டும் என விளக்கிக்கொண்டே இருந்தாள். பிரச்சனை என்னவென்றால் அவள் கொஞ்சம் சத்தமாக பேசக்கூடிய பழக்கமுள்ளவள். அதனால் அவள் விளக்கம் கொடுத்து கொண்டிருப்பதை அருகிலிருக்கும் யாரேனும் கேட்டுவிடுவார்களோ எனக் கூச்சமாக இருந்தது. கூச்சத்தோடு கூனிக்குறுகி அவள் பின்னால் அமைதியாக சென்றேன்.


“நான்வெஜ் சமைக்கிற ஐடியா இருக்கா?” என்றாள்.


‘ஹம்ம்கூம் இங்க வெஜ் சமைக்கவே தெரியாது. இதுல நான்வெஜ் வேற..’ என மனதிற்குள் புலம்பிக்கொண்டே “ட்ரை பண்ணலாம்..” என்றதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அடங்கிய இரண்டு பாக்கெட்டுகளை எடுத்து கூடைக்குள் போட்டாள். அரிசி, பருப்பு, என ஒருவாறு சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கிய பின்.. “எண்ணெய் கொண்டுபோகக் கூடாதா?” என்றாள்.


“இல்ல. கொண்டுபோகக் கூடாதுனு மேனேஜர் சொன்னாரு.”


“எண்ணெய வச்சு என்ன செஞ்சுபுடுவாங்களாம்? ரொம்ப ஓவரா தான் பண்றானுங்க.. சரி வெளிநாட்ல ஆலிவ் ஆயில் தான் யூஸ் பண்ணுவாங்கன்னு ஆஸ்திரேலியாவுல இருக்க என் ஃபிரெண்ட் மோனிஷா சொல்லிருக்கா. அதை வாங்கிக்கோங்க. ”


“சரி.. பாத்துக்கலாம்.. எந்த ஆயிலா இருந்தா என்ன, நான் சமைச்சு நானே சாப்பிடப் போறத நினைச்சா இப்பவே குடலைபிரட்டுது..”


“இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு, நீங்களும் அவனுகளோட சேர்ந்து பாம்பு பல்லினு என்னத்தையாவது தின்றலாம்..”


“ஒருவேளை இது எதுவும் வேலைக்கு ஆகலைனா, அதை தான் செஞ்சாகணும்..”


எல்லோருக்கும் முதல் விமான பயணம் என்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாகத் தான் இருக்கும். இதுநாள் வரை பலமுறை எனக்கு அந்த அனுபவம் வாய்த்திருந்தாலும் முதன் முதலாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து தைவான் நாட்டிற்குச் சென்றதை இன்றும் மறக்கமுடியாது. 2011ல் நான் வேலை பார்த்த நிறுவனம் ஒன்றிலிருந்து நானும் எனது மேனேஜரும் வேலை நிமித்தமாக தைவான் நாட்டின் தலைநகரமான தாய்ப்பே நகரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.


சீனாவின் குடியரசு நாடான தைவான் நாட்டின் உணவுப் பழக்க வழக்கங்கள் உலகமறிந்ததே. அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளால் தான் இன்று உலகம் முழுவதும் கொரானா என்று ஒற்றைச் சொல் மூலை முடுக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் பல்லி பாம்பு தவளை என எதையாவதுத் தின்று சாவதைவிட நம்மூர் சாப்பாடாக எதையாவது சமைத்து நாக்கை மட்டும் சாகடித்துவிட முடிவெடுத்தேன்.


எங்களது பயணம் இருபத்தியெட்டு நாட்களடங்கியது. பிசினெஸ் விசாவில் சென்றோம். தைவான் நாட்டிலிருந்த ஒரு சில சீன மென்பொருளாளருக்கு ஒரு ஃசாப்ட்வேர் பற்றிய பயிற்சி கொடுக்கவே என்னை அழைத்துச் சென்றார் எனது மேனேஜர்.


பயணத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருந்ததால் மனைவி துணையுடன் சமையலுக்குத் தேவையான சில முக்கியமான பொருட்களை வாங்கத்தான் இருவரும் டெய்லி ஸ்பென்சர் வந்திருந்தோம். சமையல் பொருட்களெல்லாம் வாங்குவதால் நான் ஏதோ சமையலில் செஃப் தாமோதரனின் சிஷ்யன் என்று நினைத்துவிட வேண்டாம். இதுவரை கிச்சனில் நான் செய்த மிகப் பெரிய சாதனை ஒரு முறை தேனீர் போட்டது தான். ஆனால் அடுத்த நாள் நான் தேனீர் போடப் பயன்படுத்திய பாத்திரம் குப்பைக் கூடைக்குள் இருந்தது தான் எனது முதல் சாதனைக்கு கிடைத்த வெகுமானம்.


இப்படி ஒரு நிலையில் தான் எனது முதல் விமான பயணம் ஆரம்பித்தது. செக்கின் லக்கேஜ் இருபது கிலோ மட்டும் தான் இருக்கவேண்டும் என விமான டிக்கெட்டில் போடப்பட்டிருந்தது. அதனால் குறைந்த அளவில் மட்டும் சமையல் பொருட்களை வாங்கி அதனை லக்கேஜில் அடைத்து எடையை பரிசோதித்தேன். எல்லாம் அடங்கிய அந்த லக்கேஜ் பதினேழு கிலோ இருப்பதாக மின்தராசு தனது எல்.இ.டி கண்ணில் காட்டியது.


மறந்த போன பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதனை ஒவ்வொரு முறையும் செக்கின் லக்கேஜ்ஜில் அடைக்கும் போதெல்லாம் எடை பார்த்து பார்த்தே மின்தராசு எல்.இ.டி திரையில் கண்ணீர் வீட்டுக் கதறியது. செக்கின் லக்கேஜின் எடை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என உடன் வேலைபார்ப்பவர் சொன்னதால் துல்லியமாக இருபது கிலோ வரும் வரை எனக்கும் அந்த செக்கின் லக்கேஜுக்கும் பெரும் போராட்டமே நடந்தது.


எனது மனைவி ஒரு சில விஷயங்களில் முற்றிலும் மாறுபட்டவள். அவள் சமைக்கும் பொழுது சமையலறையில் யாரும் உள்ளே இருக்கக் கூடாது. அவளின் இந்த பழக்கம் இதுநாள் வரை எனக்கு சாதகமாகத் தான் இருந்தது. ஆனால் இப்பொழுது வேறு வழியில்லை. அவள் சமையலறையில் செய்யும் ஒவ்வொரு வேலையையும் கண்ணும் கருத்துமாய் கவனிக்கவும் கற்றுக்கொள்ளவும் நான் சமையலறைக்குள் இருந்ததை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை அவளின் மௌனம் வெளிப்படுத்தினாலும் அதில் கொஞ்சம் பொறுமையும் இருந்தது. அவளுக்கு ஏதேனும் உதவி செய்யலாம் என நினைத்தால் “நீங்க பேசாம வேடிக்கை மட்டும் பாத்தாலே, அதுவே பெரிய உதவி..” என்பாள். ஓரிரு நாட்களில் தாளிப்பது எப்படி, ரசம் வைப்பது எப்படி சோறு பொங்கியபின் எப்படி வடிகட்டுவது என விளக்கமும் சில நேரம் பிராக்டிகலும் நடந்தது.


அவளோடு சமையலறையில் இருந்த அந்த ஒரு சில நாட்களில் ஒன்றை மட்டும் நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். எனது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு ஃசாப்ட்வேர் கொண்டு ஒரு அப்ளிகேஷனை நான் செய்வதற்கு இணையாக இங்கே சமையலறையில் தினமும் ஒரு ப்ராஜெக்ட் போல ஒவ்வொருவேளை சமையலும் செய்து முடிக்கிறாள். என்ன சமைக்க வேண்டும் என்பதில் மேனேஜராக, என்னென்ன தேவை, என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை சோதிப்பதில் டீம் லீடரா’கவும், இருப்பதைக் கொண்டு திட்டமிட்ட சமையலை சமைப்பதில் டெவெலப்பரா’கவும் கடைசியில் அவள் சமைத்த உணவில் உப்பு புளி காரம் என அனைத்தையும் சோதித்து பார்ப்பதில் டெஸ்டரா’கவும் அனைத்து ரோல்களையும் ஒருத்தியே பார்த்துவிடுகிறாள். ஆனால் கடைசியில் கிளைன்ட்’டாக அவள் சமைத்ததை நாக்குச் சொட்ட சொட்ட சாப்பிடுவது மட்டும் தான் எனது வேலை.


அதனால் தானோ என்னவோ இதுநாள் வரை அவள் செய்யும் ஒவ்வொரு சமையலையும் நான் ருசித்து சாப்பிட்டு அவளை வாய்நிறைய பாராட்டுவேன். அதுவும் சாதாரண பாராட்டல்ல. முதலில் சாம்பாரை சோற்றில் பிணைந்து ஒரு வாய் வைத்துவிட்டு.. “வாரே வா.. சூப்பர்..”, அடுத்தது பொரியல், கூட்டு, ரசம் சில நேரங்களில் மோர் அல்லது தயிருக்குக் கூட அதே வார்த்தையை ஒவ்வொரு வாய்க்கும் திரும்ப திரும்பச் சொல்லி பாராட்டுவதில் அவள் முகம் மலர்ந்துபோவாள்.


இப்படியாக நாட்கள் நகர்ந்தது. பயணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில் எனது நிறுவனத்தில் ஆக்ஸிஸ் வங்கியிலிருந்து வந்திருந்த ஒருவர் எனது கையில் ஒரு மஞ்சள் நிறக் கவரை நீட்டினார். அதில் எனது பயணத்திற்கு தேவையான ட்ராவல் டெபிட் கார்ட் இருப்பதாகச் சொன்னார். பிறகு எனது கையில் பத்து டாலர் நோட்டுகளை கொடுத்தார். அனைத்தும் நூறு டாலர் நோட்டுக்கள். அமெரிக்க டாலரை ஹாலிவுட் படங்களில் மட்டும் தான் பார்த்திருந்தேன். முதன் முதலாக கையில் ஏந்தி பார்க்கிறேன். உன் கையிலெல்லாம் எங்களது அமெரிக்க நாணயமா என அந்த டாலரில் இருந்த பெஞ்சமின் ஃபிராங்கிளின் என்னை முறைப்பது போல இருந்தது. பயணச் செலவுக்காக டெபிட் கார்டில் இரண்டாயிரம் டாலரும், கையில் பணமாக ஆயிரம் டாலரையும் கொடுத்தார்.


“ஏன் சார், தாய்ப்பேல டாலர் அக்சப்ட் பண்ணுவாங்களா?” என்றேன்.


“இல்லை. நீங்க அங்க போனதும் யுவான் கரன்சிக்கு மாத்திக்கோங்க..” என்றார் அவர். அப்பொழுது நிலையில் ஒரு யுவான் நம்ம ஊர் கரன்சிக்கு எட்டு ரூபாய் மதிப்பு.


ஒருவழியாக அந்த நாள் வந்தது.


மனைவியை மதுரைக்கு அழைத்துச் செல்ல மாமியார் வந்திருந்தார். கர்ப்பவதியாக இருந்ததால் அவளை பேறுகாலம் முடியும் வரை தன்னோடு வைத்திருக்கப் போவதாக சொன்னார். ஒரு மாதகாலம் அவளை பிரிந்திருக்க போவது அதுவும் இது போன்ற நேரத்தில் பிரிவது வருத்தமாகத் தான் இருந்தது. அவளோ முதல் நாள் இரவிலிருந்து புலம்ப ஆரம்பித்துவிட்டாள். இப்பொழுது இருப்பது போல வாட்ஸாப்பில் வீடியோ ஆடியோ அழைப்பு வசதிகள் அப்போதில்லை. இன்டர்நெட் விலையும் அதிகம். அதனால் எனது ஸ்கைப் (skype) அக்கௌண்டில் ஐம்பது யூரோவிற்கு ரீசார்ஜ் செய்திருந்தேன். அதிலிருந்து இன்டர்நெட் வசதியுடன் எந்த மொபைல் போனுக்கு நேரடியாக அழைக்கலாம்.


தினமும் இரவில் அவளுக்கு ஃபோன் செய்வதாக உறுதிமொழி கொடுத்து அவளை சமாதானப் படுத்தினேன். மேலும் அவளுக்கு மிகவும் பிடித்த ஹாண்ட் பேக்ஸ், பார்பி டால் எல்லாம் வாங்கி வருதாக சொல்லி ஒரு குழந்தையை சமாதானப் படுத்துவது போல அவளை தேற்றினேன். இருந்தாலும் விமான நிலையத்திற்கு கிளம்பும் பொழுது கண்ணீரும் கம்பலையுமாகத் தான் என்னை வீட்டு வாசலிலிருந்து அனுப்பி வைத்தாள்.


எங்கள் விமானம் புறப்படும் நேரம் நள்ளிரவு ஒரு மணி. பன்னாட்டு விமானங்களில் பயணிப்போர் நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் வந்து செக்கின் செய்யும் இடத்திற்குள் சென்று விட வேண்டும் என மேனேஜர் ஏற்கனவே சொல்லியிருந்தார். அதனால் பத்து மணிக்கே நானும், விமான நிலையத்தை அருகில் பார்க்க ஆசைப்பட்ட என் நண்பன் ஒருவனும் இரண்டு லக்கேஜோடு ஆட்டோவில் வந்துவிட்டோம். மேனேஜர் வந்த பிறகு எனது நண்பனை வழியனுப்பிவிட்டு அவருடன் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டேன்.


வாசலில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை பரிசோதனை. அதனைத் தாண்டி உள்ளே சென்றதும் மீண்டும் ஒரு மத்திய பாதுகாப்புத் துறையினரின் பரிசோதனை. சோதனையிலிருந்து பெண் அதிகாரி ஒருவர் என்னையும் பாஸ்ப்போர்ட்டையும் மூன்று முறை உற்று உற்று பார்த்தார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் எனது பாஸ்போர்ட்டில் இருந்தது. ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் அது. சென்னை வந்த ஐந்து ஆண்டுகளில் பெரிதாய் சம்பாதிக்கவில்லையென்றாலும் அதிகமான அளவில் தலை முடியை பறிகொடுத்திருந்தேன். அதனால் நிஜத்திற்கும் புகைப்படத்திற்கு இருந்த வேற்றுமை அந்த அதிகாரிகயை குழப்பிவிடுமோ என அஞ்சினேன். இந்த அச்சம் என்னை தாய்ப்பே வரை வைரஸ் போல தொற்றிக்கொண்டே வந்தது.


சோதனை முடிந்ததும் கேத்தி பசிபிக் என்ற விமான நிறுவனத்தினரின் சேவை மையத்திற்கு சென்றோம். அங்கே முதலில் எங்களது லக்கேஜின் எடை பரிசோதிக்கப்பட்டது. நான் ஏற்கனவே பலமுறை எனது செக்கின் லக்கேஜ்ஜை எடை பார்த்துவிட்டதால் தைரியமாக எடுத்து எடைமேடையில் வைத்தேன். எனக்கு முன்னே இருந்த ஒரு எல்.இ.டி திரையில் இருபத்தியொன்று புள்ளி ஏழு எனக் காட்டியது. அடக்கடவுளே பார்த்து பார்த்து தானே எடுத்து வைத்தோம். இப்பொழுது ஏன் இரண்டு கிலோ அதிகமாகக் காட்டுகிறது என அஞ்சியவன் சரி எனது சொந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வந்தால் சமாளிக்கலாம் என நினைத்தேன். ஆனால் சேவை மைய அதிகாரி அந்த கூடுதல் எடையை பொருட்படுத்தவே இல்லை. நன்றி கடவுளே..!


அடுத்தது எங்களுக்கான போர்டிங் பாஸ். நள்ளிரவு பயணம் தான். இருந்தாலும் ஜன்னலோரம் இடம் கிடைத்தால் வானில் பறக்கும் பொழுது தரையில் மின்னும் மின்விளக்குகளை வேடிக்கை பார்க்கலாம் என அவ்வளவு ஆசை. ஆனால் அதை எப்படி எனது மேனேஜரிடம் சொல்லுவது என்ற தயக்கம். ‘கல்யாணம் பண்ணி புள்ளகுட்டி பெத்துக்கப்போற வயசில விண்டோ சீட் கேக்குறான்னு’ என்னை கேவலமாக நினைத்துவிடுவார் என நினைத்தவன் மௌனமாக நின்றேன்.


எங்களுக்கான போர்டிங் பாஸ் பிரிண்ட் ஆகி எங்களிடம் தரப்பட்டது. எங்களது போர்டிங் பாஸில் எனக்கு 34H என்றும் அவருக்கு 34K என்றும் இருக்கை எண்ணில் எழுதியிருந்தது. அவையெல்லாம் என்ன கணக்கென்றே தெரியவில்லை. இருந்தாலும் உள்ளூர ஒரு வருத்தம். இது எனது முதல் விமான பயணம் என்று எனது மேனேஜருக்குத் தெரியும். அதனால் கொஞ்சம் வெட்கத்தை விட்டு எனக்கு ஜன்னலோரம் இருக்கை வேண்டுமென்று கேட்டிருக்கலாம் என உருத்திக்கொண்டே இருந்தது. இனி ஒன்றும் செய்வதிற்கில்லை. இத்தனை தூரம் ஒரு பில்டப் செய்து விட்டு, இனிமேல் கேட்டால் அது இன்னும் அசிங்கம் என்று மௌனமாக உள்ளே சென்றவன் விமானத்திற்காக காத்திருந்தேன்.


இரவு ஒரு மணியளவில் எங்கள் விமானம் வந்தது. இரண்டாம் தளத்தில் சினிமாக்களில் வருவது போல ஏர் ஹோஸ்டஸ் பெண்களும் ஆண்களும் குழுமி நின்றனர். அதில் கண்கள் இடுங்கிப்போய் மைதா நிறத்தில் ஒரு சீனப்பெண்ணும் இருந்தாள். விமானத்தில் ஏறுவதற்கு முன்பே அந்த சீனப்பெண்ணை பார்த்தது சீனதேசத்தின் வாசனையை உணரவைத்தது. அவர்களின் சோதனைக்கு பிறகு வரிசையாக உள்ளே சென்று விமானத்திற்குள் சென்றோம். விமானத்தின் வாசலில் வேறு சீனத்துப்பெண்கள் இருவரும் ஒரு ஆண் விமான ஊழியரும் எங்களை வரவேற்றனர். அநேகமாக அவர்கள் ஹாங்காங்கை சேர்ந்த பெண்களாக இருக்க வேண்டும். எங்களது விமானம் ஹாங்காங் சென்று அங்கிருந்து இன்னொரு விமானத்தில் நாங்கள் தாய்பே நகரத்திற்கு பறக்க வேண்டும்.


விமானத்தின் இடது புறம் இரண்டு இருக்கை, நடுவில் நான்கு இருக்கை, வலது புறம் இரண்டு இருக்கை என இருக்கைகள் பிரிக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் எனது பார்வை இருக்கைக்கான எண்களைத் தான் தேடி அலைந்தது. முதலில் 34 என்ற வரிசை பார்த்துவிட்டு நெருங்க நெருங்க எனது ஆசை கட்டுக்கடங்காமல் திணறியது. 34ல் H எழுத்து இருக்கும் இருக்கை ஜன்னலோரத்தில் இருக்காதா என ஆசையோடு ஒவ்வொரு அடியையும் முன்னே எடுத்து வைத்தேன். ஆசை என்னை முந்தித் தள்ளியது. எனது கேபின் பையிலிருந்த லேப்டாப்பின் கணம் பின்னுக்கிழுத்தது. கடைசியாக அந்த வரிசைக்கு வந்த பொழுது K என்ற எழுத்திட்ட இருக்கை தான் கடைசியாக ஜன்னலோரத்திலிருந்தது. அனைத்து ஆசைகளும் வெந்து தணிந்தது. முதல் விமான பயணத்தில் இருந்த பாதி சந்தோசம் அப்படியே மறைந்துவிட்டது.


“அடப்பாவி, என்ன மனுஷன்யா இவரு.. சரி நாம தான் வாய்விட்டு கேக்கலை. அவரா தெரிஞ்சுக்கிட்டு சின்ன பையன் தானே, ஆசைப்படுவான்னு விண்டோ சீட் கேட்டு வாங்காம இருக்கலாம்ல, இத்தனை வயசுக்கப்புறம் உனக்கென்னய்யா விண்டோ சீட் கேக்குது..” என மனதிற்குள் குமுறிக்கொண்டே இருந்தேன்.


முதுகில் தொங்கிக்கொண்டிருந்த கேபின் லக்கேஜை எங்களது இருக்கைக்கு மேல் வைத்துவிட்டு, அவரை உள்ளே போகச் சொன்னேன்.


“யு டோன்ட் வாண்ட் எய்ஸில் சீட்?” உனக்கு ஜன்னலோர இருக்கை வேண்டாமா என ஆங்கிலத்தில் கேட்டார் எனது மேனேஜர். அவர் தமிழர் அல்லர். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.


“பரவாயில்ல நீங்க உக்காருங்க..” என தாராளமாக வாய் சொல்லிவிட்டாலும். ‘சண்டாளா , கடைசி சான்ஸையும் நழுவ விடுரையே..முட்டாள் முட்டாள்’ என நானே என்னை மனதிற்குள் மௌனமாய் திட்டிக்கொண்டேன்.


ஆனால் அவரோ “நோ நோ. ஐ காண்ட் பிட் இன் தேர்..” என்றார். ஏன் இப்படிச் சொல்கிறார் என முதலில் புரியவில்லை. அதை யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே “யு கேன் சிட் தேர்” என்று என்னை வலுக்கட்டாயமாக ஜன்னலோரம் உட்கார வைத்துவிட்டார். உள்ளூர மகிழ்ச்சி பொங்கினாலும் அதை வெளிப்படுத்தாமல் கெத்தாக அமர்ந்தேன். அடுத்து அவர் அமர்ந்த பொழுது தான் தெரிந்தது, எனது ஆசையை எனது உயரம் தான் நிறைவேற்றியிருந்தது. மேனேஜர் நல்ல உயரம். நாங்கள் எகனாமிக் பகுதியில் தான் பயணித்தோம். அதில் இருந்த இருக்கைகளின் இடைவெளி சராசரி உயரம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் வசதியாக இருக்கும். தேவையில்லாமல் பனைமரத்திற்கு பாதி வளர்ந்தவர்களுக்கு அந்த இடைவெளி போதாது. அதனால் எனக்கருகே அமர்ந்த மேனேஜர் இரண்டு கால்களையும் லாவகமாக வெளியே நீட்டிக்கொள்ள அவர்க்கு பக்கத்து இருக்கை தான் வசதியாக இருந்தது.


‘அப்பாடா, கடவுள் இருக்கான் குமாரு.’ என சந்தோசத்தோடு அமர்ந்து கொண்டேன். அதன் பின் அமர்ந்த எனது மேனஜர் மிகவும் சிரமப்பட்டு தனது இரண்டு கால்களையும் இருக்கையை விட்டு வெளியே நீட்டிக்கொண்டார். விமானத்தின் கேப்டன் பேசுவது ஒலிபெருக்கியில் கரகரவென கேட்டது. அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இருக்கைகளுக்கு மேல் இருந்த கேபினிலிருந்து நீராவி புகை போல எதோ ஒன்று கிளம்பியது. அந்த புகை விமானத்திற்குள் நல்ல மனத்தை பரப்பியது. சற்று நேரத்தில் சீட் பெல்ட்டை போடச் சொன்னார்கள். அதன் பிறகு ஜன்னலையும் மூடச் சொன்னார்கள். ‘அடப்பாவிகளா, இத்தனை துயரத்துக்கப்புறம் ஜன்னலோரம் உக்காந்தா மூடச் சொல்றானுங்களே..’ என நெஞ்சக்குள் குமுறினேன். இருந்தாலும் “நாங்கெல்லாம் மதுரைக்காரனுங்கடா” என மனதிற்குள் தைரியத்தோடு ஜன்னலை மூடாமலிருந்தேன். இரண்டு ஏர் ஹோஸ்டஸ் நடுவில் இருந்த பாதையில் எதையோ செய்து காட்டிக்கொண்டிருந்தார்கள். விமானம் புறப்படத் தயாரானது. ஜன்னலுக்கு வெளியே இருந்த இருளில் ஏதேனும் தென்படுகிறதா என உற்று பார்த்துக்கொண்டிருந்த பொழுது “எக்ஸ்கியூஸ்மீ, கேன் யு ப்ளீஸ் கிளோஸ் தி விண்டோ?” என ஏர்ஹோஸ்டஸ் ஒருவர் வந்து சொன்னார். வேறு வழியில்லை, ஜன்னலை மூடிவிட்டேன்.


ஓடுகளத்தில் வேகமாக ஓடிய விமானம் சட்டென்று மேலே ஏறியதும், எனது வயிற்றுக்குள் விமானத்தின் சக்கரம் போல ஏதோ ஒன்று உருண்டது. மேனேஜர் என்னவோ பேசிக்கொண்டிருந்தார். ஆனால் எனது கவனம் முழுவதும் விமானம் பறப்பதில் ஒன்றிப்போய் நானும் பறப்பது போல ஒரு பிரமையில் மூழ்கியிருந்தேன். அவர் பேசுவதை கவனிக்கவே இல்லை. நல்ல உயரத்திற்குச் சென்றதும் எனக்கு முன்னாலிருந்தவர் ஜன்னலை திறந்தார். ஆஹா, இனி தடையில்லை என நினைத்தவன் வேகமாக ஜன்னலை திறந்தேன்.


ஆனால் துரதிர்ஷ்டமாக இறக்கையில் மின்னிய சிவப்பு விளக்கை தவிர வேறெதுவும் தெரியவில்லை. ‘சரி விடு, பகல்ல எப்படியாச்சும் பறக்கிறப்ப பாத்துக்கலாம்..’ என மனதை தேற்றிக்கொண்டு சற்று எழுந்து உட்கார்ந்து கீழே பார்த்தேன். கீழே பார்த்த அந்த கணம் இன்றும் மறக்க முடியாது. ஏதோ புவியியல் கோளாறால் வானம் கீழே சென்றுவிட்டது போல சென்னையின் சாலைகளில் நள்ளிரவு மின்விளக்குகள் விண்மீன் கூட்டத்தை போல மின்னிக்கொண்டிருந்தன. இரவில் வானத்திலிருந்து பூமியை பார்த்த முதல் அனுபவம். ஜன்னலை விட்டு பார்வையை பிரித்தெடுக்க முடியாமல் நீண்ட நேரம் ரசித்தேன்.


- முற்றும்Rate this content
Log in

Similar tamil story from Abstract