Arun Andiselvam

Drama

4.8  

Arun Andiselvam

Drama

சுமை

சுமை

7 mins
263


கோவிந்தன் இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார். கண்களை மூட நினைக்கும்போதெல்லாம் கஷ்டங்கள் மனதை திறந்து கொண்டே இருந்தன. ஒரே மகள் பத்மாவின் திருமணத்திற்கு பிறகு நிம்மதியான உறக்கம் என்றால் என்னவென்பதை முழுமையாக அனுபவித்து மூன்று மாதங்கள்தான் ஆனது. இப்போது மீண்டும் இரவுகளுடனான கோவிந்தனின் மனப்போராட்டங்களும் மௌன குமுறல்களும் ஆரம்பித்திருந்தது. படுத்தவுடன் உறங்கும் வரம் ஏழைகளுக்கு எப்போதுமே வாய்ப்பதில்லை.

புகுந்த வீடு சென்ற மகள் தாய்மை அடைந்தவுடன் பெற்றவர்களின் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. திருமணத்திற்கு வாங்கிய கடனெல்லாம் வீண்செலவாய் போகவில்லை என தகப்பன் நினைத்து பெருமைகொள்ளச் செய்யும் சந்தோசம் அது. ஆனால் அதே தந்தையின் மனதிற்குள் வெளியே காட்டிக்கொள்ள முடியாத அடுத்த சுமையை மகளோட சேர்ந்து பேறுகாலம் வரை அவரும் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். திருமணத்திற்கு வாங்கிய கடனின் கால்வாசி கூட அடையாத நிலையில், அடுத்த செலவு வீட்டில் சந்தோச செய்தியாக வந்து சிரித்துக்கொண்டிருப்பதாக நினைத்து சிரிப்பை முகத்தில் காட்டி கவலையை கண்களில் மறைக்க முயற்சித்துக்கொண்டிருந்தார் கோவிந்தன்.

கணவனின் இந்த வலியை உணரும் வரை பார்வதியும் அந்த சந்தோசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள். இருவரும் தூங்க செல்லும் முன் அலைபேசி அழைப்பில் வந்தது அந்த ஆனந்த செய்தி. மகள் பத்மாவே அலைபேசியில் அழைத்து தாயிடம் பகிர்ந்துகொண்டாள். அந்த சந்தோசத்தை கணவனிடம் கூறிவிட்டு மீண்டும் பேசத் தொடங்கிய பார்வதி, அந்த அழைப்பை அணைத்துவிட்டு கணவனின் முகத்தை பார்க்கும்போதுதான் அவளுக்கும் புரிந்தது.

"என்னங்க யோசிக்கிறீங்க..?" என்றார் பார்வதி. 

"ஒண்ணுமில்ல பார்வதி. நல்ல செய்தி தானே. இதில என்ன யோசிக்கிறது இருக்கு.?"

"ஆனா உங்க மொகம் வாட்டமா இருக்கே..?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை.. நீ பேசாம போய் தூங்குமா. காலைல பேசிக்கெல்லாம்." என்றார் கோவிந்தன்.

கோவிந்தன் திருச்சியில் உள்ள ஒரு டீக்கடையில் கணக்காளர். பல ஆண்டுகளாக அதே கடையில் வேலைபார்த்து கொண்டிருப்பதால் அந்த கடையின் முதலாளிக்கு மிகவும் நம்பிக்கையானவர். முதலாளிக்கு திருச்சியில் பல இடங்களில் கடைகள் இருப்பதால் எல்லா இடத்திலும் நம்பிக்கையான நபர்களை மட்டும்தான் கணக்கு பணியில் அமர்த்துவார். மாதம் பன்னிரெண்டாயிரம் சம்பளம். அந்த சம்பளத்திற்கேற்ப ஏற்கனவே போதுமான அளவு கடனை முதலாளியிடம் கோவிந்தன் வாங்கிவிட்டார். அதை திருப்பி செலுத்தவே அவருக்கு இன்னும் ஒரு ஆயுள் வேண்டும். இப்போது அடுத்த செலவு வந்துவிட்டது.

காலையில் சற்று தாமதமாக எழுந்தவர் பார்வதியை கூப்பிட்டார். அடுப்புக்குள் தேநீர் போட்டுக்கொண்டிருந்த பார்வதி கையில் தேநீர் குவளையோடு வந்தார். ஒரு குவளையை கணவனிடம் கொடுத்துவிட்டு இன்னொன்றை கையில் வைத்துக்கொண்டு கணவனுக்கு அருகே தரையில் அமர்ந்தார் பார்வதி. 

"எப்ப போயி நாம பத்மாவை பிரசவத்துக்கு கூப்பிட்டு வரணும்?"

"ஏழாம் மாசம் இல்லைனா ஒன்பதாம் மாசம் வளைகாப்பு முடிச்சிட்டு கூப்பிட்டு வரனுங்க. ஏங்க ராத்திரி பூரா சரியாவே நீங்க தூங்கலை. இதையே நினைச்சிட்டிருந்தீங்களா?"

"ஹ்ம்ம். அப்போ இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கு." பார்வதியின் கேளிவிக்கு பதில் சொல்வதைவிட அவரின் சிந்தனைகள் பணத்தை நோக்கியே இருந்தது.

"பணத்தை பத்தி யோசிக்கிறீங்களா?"

"ஆமா பார்வதி. பணத்துக்கு என்ன பண்றதுனுதான் யோசிச்சிகிட்டே இருக்கேன். சரி, எவ்வளவு பணம் தேவைப்படும்?"

"வளைகாப்புக்கு எப்படியும் அம்பதாயிரம் வேணும். பிரசவத்துக்கு நம்ம கமலா டாக்டர்ட்ட காமிக்கலாம். அவங்கதான் நம்ம வசதிக்கு சரியா வரும். அப்படியே பாத்தாலும் பிரசவத்துக்கும் கொறைஞ்சது இருபதாயிரம் வேணும். அப்புறம் மத்த செலவெல்லாம் இருக்கு." என்று தோராயமாக கணக்கு சொன்னார் பார்வதி.

"அப்போ எப்படியும் ஒரு எம்பதாயிரம் வேணும் போல..!"

"இல்லைங்க. தலைப்பிரசவம் முடிஞ்சு புள்ளையையும் பேரனையும் வெறுங்கையோடையா விட்டுட்டு வருவீங்க. பேரனுக்கு நகைங்க கொஞ்ச வாங்கணும். அப்புறம் கொஞ்ச விளையாட்டு சாமானுங்க வாங்கணும். அதெல்லாத்துக்கும் சேர்த்து பார்த்தா எப்படியும் ஒரு ஒன்றை லட்சம் ரூபா தேவைப்படுங்க."

"ஒன்றை லட்சமா?" என்று காற்றழுந்தாமல் மூச்சுவிட்டபடி கேட்டார் கோவிந்தன். கேள்வி கேட்கும் போதே என்ன செய்யலாம் என்ற வழிகளையும் மூளைத் தேடிக்கொண்டிருந்தது. கோவிந்தனின் கவனம் பேச்சிலும் சிந்தனையிலும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தது.

"உங்க முதலாளிட்ட இனிமே கேட்கமுடியாது. அதனால் பேசாம என் தாலியை வித்துடலாங்க. சும்மா ஒரு மஞ்சக்கிழங்கை கட்டிக்கிறேன். பேரன் பேத்தியெல்லாம் எடுக்க போற காலத்தில எதுக்கு எனக்கு தங்கத்தில தாலி.?"

"அட ஏன்மா வெள்ளிக்கிழமை அதுவுமா, தாலிய விக்கணும்ங்கிற. வேற ஏதாச்சும் வழி இருக்கான்னு பாப்போம்."

"வேற வழி என்னங்க இருக்கு? நீங்களே யோசிச்சு பாருங்க? உங்க முதலாளிட்ட ஏற்கனவே மூணு லட்சம் கடன் வாங்கிருக்கு. இருந்த கொஞ்ச நகையை வித்தாச்சு. மீதம் இருந்ததும் அடகுல இருக்கு. இப்ப இருக்கிறது இந்த வீடும், என்னோட தாலியும் தான். வீட்டுல வில்லங்கம் இருக்கு. அதனால இந்த தாலியை விட்டா வேற வழியே இல்லை."

"பார்வதி, சும்மா சும்மா தாலியை பத்தியே பேசதம்மா. மொதல்ல வளைகாப்புக்கு பணத்தை ஏற்பாடு பண்றேன். மோதிரம் மூக்குத்தின்னு சின்ன சின்ன பொருளா அடமான வச்சத்தை திருப்பி அப்படியே விலைக்கு கொடுத்தா எப்படியும் அம்பதாயிரம் வரும். அதை வச்சு மொதல்ல விஷேசத்தை முடிச்சிடலாம். அதுக்கப்புறம் மத்த செலவுகள பாக்கலாம்."

"சரிங்க. ஆனா அந்த மோதிரங்களை திருப்ப பணம் வேணுமே?"

"அத நான் முதலாளிகிட்ட கேட்டு பாக்குறேன். நகையை திருப்புனதும் வித்துட்டு அவர் பணத்தை அவரிட்ட கொடுத்துடலாம்."

"நல்ல யோசனை தான் கேட்டுப்பாருங்க.. பாவம் நல்ல மனுஷன். எத்தனை தடவ தான் அவரு நமக்கு உதவுவாரு."

"என்னம்மா செய்ய? கேக்குற அளவுக்கு வேற யாரும் இல்லையே. இல்லாதவனுக்கு ஏதாவது தேவைப்படும் போது இயற்கையாவே அது முகத்தில தெரியும் போல. இந்த மாதிரி சமயத்துல நாம யார்கிட்ட போயி சும்மா பேசுனாலும் கூட சொல்லிவச்ச மாதிரி அவங்க கஷடத்தை தான் முந்திகிட்டு சொல்லுவாங்க."

"ஆனா உங்க முதலாளி அப்படி இல்லைங்க."

"உண்மைதான். ஆனாலும் நாம அதை அளவா பயன்படுத்திக்கிற வரைக்கும்தான் அவருக்கும் அந்த குணம் வராம இருக்கும். திருப்பி திருப்பி கடன் கேட்டா இந்த இல்லாதவங்களே இப்படித்தான். ஒரு தடவ உதவி பண்ணுனா, அதையே சாக்கா வச்சுக்கிட்டு திரும்ப திரும்ப வந்து தலையை சொரிவாங்கனு நெனைச்சிட கூடாதுல. அதனால கவனமா தான் கேக்கணும். பாப்போம்" என்று சொன்ன கோவிந்தன் சிறிது நேரத்தில் கிளம்பி சைக்கிளை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றார்.

வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வந்த கணவனின் முகத்தில் இருந்த சந்தோசதிற்கான நிறங்கள் பார்வதியை மகிழ்வித்தது. 

"என்னங்க, பணம் தர்றேன்னு சொல்லிட்டாரா?" என்று இரவு உணவருந்த அமர்ந்த கணவனிடம் பரிமாறிக்கொண்டே கேட்டார் பார்வதி.

"இல்லைம்மா.." என்று கோவிந்தனின் உதடுகள் சொன்னாலும் முகத்தில் இன்னும் அதே சந்தோசத்திற்கான நிறங்கள்.

"அப்புறம், என்ன பண்றதா உத்தேசம்?"

"அவர்ட்ட பணம் இப்போதைக்கு இல்லைனு சொன்னாரு. இருந்தாலும் எதோ ஒரு கம்பெனிக்கு போன் பண்ணி, நகையை திருப்பி விக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிகொடுத்துட்டாரு."

"ரொம்ப சந்தோசம். எவ்வளவு பணம் வருமாம்?"

"அதெல்லாம் தெரியலம்மா. நாளைக்கு கடன் அட்டையை எடுத்துட்டு வர சொல்லிருக்காங்க. நேர போனா தான் தெரியும்."

"அந்த கம்பெனிய நம்பலாமா?"

"ஏன்மா புரிஞ்சு தான் பேசுரையா? நம்பலாமா நம்பக்கூடாதான்னு யோசிக்கிற நிலமையிலையா நாம இருக்கோம்?"

"இல்லீங்க. வேற எதாவது ஏடாகூடமா நடந்திடுச்சுனா, இருக்க பிரச்சனையில இதுவேறைனு ஆயிடுமேன்னு தான் கேட்டேன்."

"அப்படியெல்லாம் ஆகாதும்மா. நல்லபடியா வளகாப்பை நடத்திடலாம். கல்யாணத்தையே முடிச்சிட்டோம். இது என்ன சின்ன விசேஷம்தானே. வீணா குழப்பிக்காதே!" என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னாலும் கோவிந்தனுக்கு அந்த இரவும் தூக்கம் வரவில்லை. வீட்டுக்கு வரும் வரை கோவிந்தனுக்கு இருந்த சந்தோசம் பார்வதி கேட்ட அந்த ஒரு கேள்வியால் காணாமல் போனது. பார்வதி சொன்னதுபோல நகையை ஏமாற்றிவிட்டார்கள் என்றால் என்ன செய்வது என்று சிந்திக்க தொடங்கியது கோவிந்தனின் மனது. இடதுவலதாய் தூக்கமில்லாமல் உருள ஆரம்பித்தது அவரின் உடல்.

மறுநாள் விடிந்து கடன் அட்டையுடன் வேலைக்கு சென்றார் கோவிந்தன். இரவு வீடு திரும்பும் வரை பார்வதிக்கு எனோ சிறிய பதட்டம். காலையிலிருந்து பார்த்த எந்த வேலையிலும் முழுக்கவனம் இல்லை. வீட்டிற்கு வந்த கணவனை பார்த்ததும் அவளின் படபடப்பு ஓரளவு அடங்கியது. 

"என்னங்க, பணம் கெடைச்சதா?"

"பார்வதி, அதெல்லாம் உடனே கிடைக்குமா? இன்னைக்கு பேங்க்ல போயி எல்லாத்தையும் விசாரிச்சோம். அந்த கம்பெனிக்காரங்களும் வந்தாங்க. எல்லாத்தையும் பாத்திட்டு எல்லாம் போக அறுபத்தி ரெண்டாயிரம் பணம் தர்றோம்னு சொல்லிருக்காங்க. பணம் வேணுங்கிறப்ப நகை அட்டையை அவங்ககிட்ட கொடுக்கனுமா. அதுவரைக்கும் பேங்க்ல இருக்கட்டும்னு சொல்லிருக்காங்க."

"ரொம்ப சந்தோசம். நான் ரொம்ப பயந்திட்டேன்."

"சரி சரி சாப்பாட போடு.."

சில மாதங்கள் ஓடின. பத்மாவின் வளைகாப்பு ஏழாம் மாதம் நல்லபடியாக முடிந்தது. அவளும் தாய்வீட்டிற்கு தலைபிரசவத்திற்காக அழைத்துவரப்பட்டிருந்தாள். பத்மாவிற்கு ஒன்பதாம் மாதம் தான் பேறுவலி. ஆனால் கோவிந்தனுக்கு ஒவ்வொரு நாளும். மகளை பார்த்து பார்த்து கவனிக்கும் போதெல்லாம் அவளுக்கு பிரசவ வலி எப்பொழுது வருமோ என்று பயந்துகொண்டே இருந்தார் கோவிந்தன். பத்மாவின் கணவனைவிட பேறுகால கவலைகள் கோவிந்தனுக்குதான் அதிகமாக இருந்தது.

ஒரு வழியாக கோவிந்தனும் பார்வதியும் முடிவு செய்து, பார்வதியின் தாலியை விலைக்கு விற்றனர். இருந்தாலும் இன்னும் பணம் தேவைப்பட்டது. நண்பர்கள் சிலரிடம் சிறிது சிறிதாக பணம் கேட்டு மேலும் ஒரு ஐந்தாயிரம் ஏற்பாடு செய்திருந்தார்.

"பார்வதி, நாளைக்கு போயி நகை வாங்கிட்டு வந்திடலாமா?" எட்டுமாத வயிறை கையிலனைத்தபடி உறங்கிக்கொண்டிருந்த பத்மாவின் தூக்கம் கெடாமல் மெல்லமாய் கேட்டார் கோவிந்தன். 

"பிரசவத்துக்கு எவ்வளவு செலவாகும்னு தெரியலைங்க. அதுக்கப்புறம் எப்படியும் மூணு மாசம் இங்க தான் பத்மாவும் குழந்தையும் இருப்பாங்க. அப்போ வாங்கிக்கிடலாம்."

"பிரசவத்துக்கு இருபதாயிரம் போதும்னு சொன்னையே?"

"ஆமாங்க, ஆனா அது நம்ம புள்ளைய பொறுத்து. சுகப்பிரசவம்னா அவ்வளவு கூட தேவைப்படாது. ஒருவேளை ஆபரேஷன் பண்ற மாதிரி ஆயிடுச்சுனா எவ்வளவு தேவைப்படும்னே சொல்ல முடியாதுங்க. அங்கெல்லாம் நாம கடனும் சொல்ல முடியாது.."

"சரி சரி, மெதுவா பேசு. எல்லாம் நல்லபடியா தான் நடக்கு. தூங்கு. காலைல பேசிக்குவோம்" என்றார் கோவிந்தன்.

இதுவரை ஐம்பதாயிரம் பணம் சேர்த்துவிட்டார். பிரசவத்திற்கு இருபதாயிரம் செலவானாலும் மீதமிருக்கும் தொகையில் ஏதேனும் சிறு நகையும் சில விளையாட்டு பொருட்களும் வாங்கிவிடலாம் என மனதில் நிம்மதியை வரவழைத்துக்கொண்டு உறங்கிப்போனார் கோவிந்தன். 

சில வாரங்கள் ஓடின. பத்மாவின் பேறுகாலம் நெருங்கியது. பத்மாவிற்கு ஒரு சில நாட்களாய் வலி வந்தாலும் அவள் சமாளித்துக்கொண்டுதான் இருந்தாள். அதனால் எல்லாம் இயல்பாக ஓடிக்கொண்டிருந்தது. அன்று கோவிந்தன் வேலைக்கு சென்ற இரண்டு மணி நேரத்தில் அவர் கடைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பார்வதி பத்மாவிற்கு இடுப்புவலி வந்த விஷயத்தை சொன்னதும், அங்கிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு நேராக கமலா மருத்துவமனைக்கு சென்றார் கோவிந்தன். 

உள்ளே சென்றதும் பிரசவ அறைக்கு வெளியே காத்திருந்த பார்வதியிடம் அவசரமாய் போய் நின்றார்.

"மாப்பிளைக்கு தகவல் சொல்லிட்டாயா?"

"இப்பத்தாங்க சொன்னேன். இன்னும் அரை மணிநேரத்தில வந்திடுறேன்னு சொல்லிருக்காரு.."

"எப்ப வலி வந்துச்சாம்?"

"அவளுக்கு ரெண்டு மூணு நாளாவே வலிச்சிருக்கும் போல. எங்க நம்மகிட்ட சொன்னா ஆஸ்பத்திரில தங்க வச்சிடுவமோன்னு சொல்லாம இருந்திருக்கா. வரும்போது தான் ஆட்டோல சொன்னா.!"

"எதுக்கு அப்படி பண்ணினாளாம்?"

"தேவையில்லாம எதுக்குமா ஆஸ்பத்திரி ரூமுக்கு செலவு பண்ணனும்னு கேக்குறாங்க.." என்று சொல்லிக்கொண்டு முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டார் பார்வதி.

"அது மட்டுமில்ல. நான் எப்பாடுபட்டாவது குழந்தையை சுகப்பிரசவத்தில பெத்துக்கிறேன்மா. ஆப்பரேசன்னெல்லாம் வேணாம்னு உள்ள இருக்க டாக்டர்ட்ட கெஞ்சியாவது கேட்டுக்கிருவேன்னு சொன்னாங்க நம்ம பத்மா.." என்று சொன்ன பார்வதியின் கண்களில், முந்தானையை வைத்தும்கூட துடைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. கோவிந்தனும் தனது மகளை நினைத்து பெருமைப்பட நேரமில்லாமல் கவலையில் கண்ணீர் சிந்தினார்.

சில நிமிடங்களில் பத்மாவின் கணவரும் வந்து சேர்ந்தார். அனைவரின் முகங்களும் ஆவலோடு பிரசவ அறையின் வாசலை பார்த்த வண்ணமே இருந்தது. குழந்தை அழும் சத்தம் கேட்டது. அது சிறிய மருத்துவமனை என்றாலும் ஒரே நேரத்தில் பல பிரசவம் நடக்கும் இடம். அதனால் யார் முகத்திலும் பெரிய ஆர்வங்கள் இல்லை.

ஒரு செவிலியர் வெளியே வந்தார். 

"பத்மா பேஷண்ட்டோட கணவர் யாரு?" என்று கேட்டதும் பத்மாவின் கணவர் எழுந்து நின்றார்.

"சீக்கிரமா போயி எல்லாருக்கும் சாக்லேட் வாங்கிட்டு வாங்க. உங்களுக்கு ரெட்டை குழந்தைங்க புறந்திருக்கு. ஆண் ஒன்னு, பெண் ஒன்னு." என்று சொல்லிவிட்டு இயந்திரமாய் சிரித்தார்.

"ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர். பத்மா எப்படி இருக்கா?" பத்மாவின் கணவர் கேட்டார்.

"அவங்க நல்ல இருக்காங்க. ரெண்டுமே நார்மல் டெலிவெரி தான். இன்னும் ஒன் ஹௌர்ல அவங்கள வெளிய கூப்பிட்டு வந்திடுவாங்க. உங்க குழந்தைங்க இன்னும் பத்து நிமிசத்தில உங்கள பாக்க வந்திடுவாங்க. கிளீனிங் போயிட்டிருக்கு."

"சரிங்க சிஸ்டர்." என்றார் பத்மாவின் கணவர்.

"நீங்க அவங்க தாத்தா பாட்டியா? சந்தோசம் தானே?" கோவிந்தனையும் பார்வதியையும் பார்த்து கேட்டார் செவிலியர். இருவரும் சிரித்தனர்.

செவிலியர் நகர்ந்ததும் பத்மாவின் கணவர் இனிப்பு வாங்க வெளியேறினார். கோவிந்தனும் பார்வதியும் மீண்டும் அதே இடத்தில் முகத்தில் சிரிப்போடு அமர்ந்தனர். 

"பார்வதி, உன் பொண்ணு வீம்புக்காரி.. சொன்ன மாதிரியே செஞ்சுட்டாளே.." சந்தோசம் பொங்க கேட்டார் கோவிந்தன்.

"ஆமாங்க." என்று கண்களில் வடிந்த ஆனந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே சொன்னார் பார்வதி.

சில நிமிடங்கள் அமைதியாய் சென்றது. பேரனையும் பேத்தியையும் பார்ப்பதற்காக இருவரும் காத்துக்கொண்டிருந்தனர். 

பத்மாவின் கணவர் இனிப்புடன் உள்ளே வந்தார். முதலில் கோவிந்தனுக்கும் பார்வதிக்கும் கொடுத்துவிட்டு அங்கே இருந்த மற்றவர்களுக்கும் கொடுக்க தொடங்கினார். பத்மாவின் மாமனார் மாமியாரும் வந்து அங்கே அவர்களோட காத்துக்கொண்டிருந்தனர். ஒரு சில நிமிடங்களில் பத்மாவின் இரட்டை குழந்தைகளை வெளியே கொண்டுவந்தனர். மொத்த குடும்பமும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. 

பத்மா பிரசவ அறையில் கண்விழிக்கவும் கோவிந்தனும், பார்வதியும் உள்ளே சென்றனர். இருவரும் உள்ளே வருவதை பார்த்த பத்மாவிற்கு கண்களில் கண்ணீர் புரண்டோடியது. 

"எதுக்குமா இப்படி பச்சை உடம்புக்காரி அழகுற?" பத்மாவின் தலையை தடவிக்கொண்டே கேட்டார் பார்வதி. பத்மா அப்பா இருக்கும் திசையை நோக்கி

"அப்பா, என்னால முடிஞ்ச அளவுக்கு உங்க கஷ்டத்தில பங்கு போட்டுக்கிட்டேன்பா. கடவுள் நம்ம கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு ரெண்டு குழந்தையையும் எனக்கு சுகபிரசவத்தில கொடுத்துட்டார்.." என்று சொல்லிவிட்டு அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டு அழுதாள்.

"இல்லாதவன் என் வீட்ல பொறந்து நீ பட்ட கஷ்டம் போதாதுன்னு புகுந்த வீட்டுக்கு போயும் உன் கஷ்டத்தை தீர்க்க இந்த அப்பனால முடியலையேம்மா. என் கஷ்டத்தை புரிஞ்சிகிட்ட நீதான்மா எனக்கு கடவுளா தெரியுற." என்று மகளின் கைகளில் கண்களை ஒற்றிக்கொண்டு அழுதார் கோவிந்தன்.

"ஐயா, ரெண்டுபேரும் கொஞ்ச வெளில போறீங்களா? அவங்கள கொஞ்ச நேரத்தில ரூமுக்கு கூப்பிட்டு வந்திடுவோம்." என்று சொல்லிய செவிலியர் ஒருவர் அவர்களை வெளியே அனுப்பினார்.

வெளியே வந்து உட்கார்ந்த பின் பார்வதி கோவிந்தனை பார்த்தாள்.

"ஏங்க, மிச்சம் இருக்க காசுல ஒரு குழந்தைக்கு மட்டும் எப்படிங்க நகை வாங்கறது? இன்னொரு குழந்தையை சும்மாவா அனுப்ப முடியும்?" என்றார் பார்வதி.

"என்னமா சொல்ற?" என்று மீண்டும் காற்றழுந்தாமல் கேட்டார் கோவிந்தன்.

- முற்றும்


Rate this content
Log in

Similar tamil story from Drama