STORYMIRROR

shameem a

Inspirational

4  

shameem a

Inspirational

மனம் வருவதே இல்லை.

மனம் வருவதே இல்லை.

3 mins
223


தகப்பன் சாமிகள்


கோவை போகும் வழியில் மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்தியபோதுதான் அவரை கவனித்தேன்.


அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும், வாயில் விசிலுமாய் ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்.


வயோதிகம் காரணமாகவோ, நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக்கொண்டே இருந்தார்.


டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை.


அந்த இடத்தில் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும் அவர் அமரவே இல்லை.


இது போன்ற எளிய மனிதர்களை கண்டால் இயன்றதை தருவது என் வழக்கம்.


அருகே சென்று தோளைத் தொட்டு திருப்பி நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன்.


பணத்தை கவனித்தவர், மெல்ல புன்னகைத்தே,

வேணாம் சார் என மறுத்தார்.


அவர் மறுத்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் எப்படியும் அது அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.


ஏன் எனக் கேட்டேன்.


அவங்க கொடுத்திட்டாங்க


யாரு?


திரும்பி பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார்.


நிச்சயமாய் நான் கொடுத்ததைப்போல அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.


பணம் கண்டு பேராசைப்படாத அவரின் உண்மையும், உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன்.


பேரென்னங்க ஐயா?


முருகேசனுங்க.


ஊருல என்ன வேல?


விவசாயமுங்க.


எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க?


நாலு வருசமா செய்றேங்க.


ஏன் விவசாயத்த விட்டீங்க?


மெல்ல மௌனமானார்.


தொண்டை அடைத்த துக்கத்தை மெல்ல மெல்ல முழுங்கினார்.


கம்மிய குரலோட பேசத் துவங்கினார்.


ஆனால் என்னோடு பேசிக் கொண்டிருந்தபோதும் அவரின் முழு கவனமும் சாலையில் செல்லும் வண்டிகளை அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே

இருந்தது.


எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க. ஒரு பொண்ணு, ஒரு பையன். விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு.


ஆனா மழை இல்லாம விவசாயமெல்லாம் பாழா போச்சு சார்.


நானும் முடிஞ்சவரை கடன

உடன வாங்கி என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணுமே விளங்கலே.


கடைசிவரை கடவுளும் கண்ணே தொறக்கலை.

இதுக்கு மேல தாளாதுன்னு இருக்கிற நிலத்த வித்து கடனெல்லாம் அடைச்சுட்டு

மிச்ச மீதிய வச்சு ஒரு வழியா பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.


பையன் இருக்கானே,

அவனைப் படிக்க வைக்கணுமே. அதுக்காக, நாலு வருசத்துக்கு முன்னாடிதான் இங்கே வந்து வேலைக்கு சேர்ந்தேன்.


மூணு வேளை சாப்பாடு,

தங்க இடம், மாசம் 7500 ரூபா சம்பளம். இந்த வேலைய பாத்துகிட்டே பையனை என்ஜினியருக்கு படிக்க வைச்சேன்.


படிச்சி முடிச்சிட்டு, போன மாசம்தான் பையன் கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்.


அப்படியா, உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர்.


சரி, அதான் பையன் வேலைக்கு போறான்ல,

நீங்க ஊரோட போக வேண்டியதுதானே பெரியவரே.


நிச்சயமா போவேன் சார். பையனே, "நீ கஷ்டப்பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு"தான் சொல்லுறான். ஆனா, இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார்.


எப்போ?


இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் சார்.


சரி, கடவுள் இருக்கார் பெரியவரே, இனி எல்லாமே நல்லதாவே நடக்கும்.


பெரியவர் சிரித்தார்.


நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து அவரிடம் காதில் ஏதோ சொன்னான்.


பெரியவர் முகம் மலர்ந்தார். "கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்காங்க.

என்ன சொன்னீங்க சார்? கடவுளா? கடவுள் என்ன சார் கடவுளு, அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைக்காரன் சார்.


இல்லன்னா, ஊருக்கே சோறு போட்ட என்னைய

கடனாளியாக்கி இப்படி நடு ரோட்டுல நின்னு சாப்பிட வாங்கன்னு கூப்பிட வைப்பானா?


மனுஷங்கதான் சார் கடவுள்.


முகம் தெரியாத என்னை நம்பி இந்த வேலையை தந்து நான் வேலைக்காரன்தானேன்னு கூட பாக்காம, இதோ இந்த வயசானவனுக்கு கால்

வலிக்கும்ன்னு உட்கார சொல்ற என் முதலாளி ஒரு கடவுள்.


உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்படணும், பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு. கூழோ, கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு சொன்ன எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற என் மாப்பிள்ளை ஒரு கடவுள்.


கஷ்டப்பட்டு அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம, " நீ வேலைக்கு போவாதப்பா. எல்லாம் நான் பாத்துகிறேன்"னு சொன்ன என் புள்ள ஒரு கடவுள்.


நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி தொந்தரவு பண்ணாத எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு கடவுள்.


இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சி

அப்பப்ப ஆதரவா பேசுற, உங்களை மாதிரியே இங்கே வர்ற ஆளுங்க எல்லாருமேதான் சார் கடவுள். மனுசங்கதான் சார் கடவுள்.


எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே தோன்றியது.


இருக பற்றி அணைத்துக் கொண்டேன்.


வேண்டாமென மறுத்தபோதும் பாக்கெட்டில் பலவந்தமாய் பணம் திணித்தேன்.


பஸ் கிளம்பும்போது மெல்ல புன்னகைத்த முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து தலை வணங்கியே கும்பிட்டேன்.


ஒவ்வொரு வீட்டுக்குமே

இது போன்ற தகப்பன்சாமிகள்

நிறைய பேர் இருக்கத்தான்

செய்கிறார்கள்.


நமக்குத்தான் எப்போதுமே

கும்பிடவோ நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational