இரண்டாம் தாரம்
இரண்டாம் தாரம்


மகனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்தே காமேஸ்வரிக்கு பதற்றம் அதிகமாகிவிட்டது. லக்னம் பத்திரிக்கையில் நீலகண்டர் காமேஸ்வரியின் ஏக புத்திரன் என்று புரோகிதர் வாசிக்கும் பொழுது , அவளை அறியாமல் அவள் கைகள் நடுங்கின. திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க காமேஸ்வரி பதற்றமும் கூடிக்கொண்டே போனது.
தாயின் பதற்றமும் பரபரப்பும் மண’மகன்’ பாலாஜிக்கு வியப்பையும் சந்தேகத்தையும் அளித்தது.
“என்னமா? என்ன ஆச்சு? ஏன் இப்படி பயப்படுறீங்க? ஏன் இவ்வளவு டென்ஷன் பண்றீங்க?” என்று தாயிடம் அடிக்கடி பாலாஜி சலித்துக்கொண்டான்.
“ அது ஒன்னும் இல்லப்பா கல்யாணம் நல்லபடியா முடியும்னு மெல்ல, அது மட்டுமில்லை நிறைய வரன் தட்டி போயிடுச்சு இல்லை, நீ போய் உன் வேலையை பாரு ... நா இருக்கேன்ல “என்று எதையாவது சொல்லி சமாளித்து விடுவார் திருநீலகண்டன்.
காமு எப்போதும் சேதுவை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். சேது பாவம் என்று அடிக்கடி கணவரிடம் சொல்லிக் கொண்டிருப்பாள். திருமணத்திற்கு மூன்று தினங்கள்தான் மிச்சம் இருந்தது.
அவள் இதுவரை 100 முறைக்கு மேல் கேட்டிருப்பாள் சேது கல்யாணத்துக்கு வருவாளா என்று, நீலகண்டனும் ரொம்ப பொறுமையாக பார்க்கலாம், வருவாள், தெரியாது என்று ஏதோ சொல்லிக்கொண்டு சமாளித்து வந்தார்.
ஒருநாள் பொறுமை இழந்து “போய் வேலையை பாக்கிறியா “,என்று மனைவியை சத்தம் போட்டு விட்டார் .திருநீலகண்டன் காமேஸ்வரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காமுவின் மனம் நோக அவர் எதுவும் பேச மாட்டார். இருந்தும் இன்று சத்தம் போட்டு விட்டார் பாவம் அவர் தான் என்ன செய்வார்?..
திருமணத்திற்கு முந்தைய இரவு. ரிசப்ஷனனில் மணமகன் பாலாஜியும் மணமகள் ரம்யாவும் நின்றிருந்தனர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி பரிசு பொருட்கள் கொடுத்து சென்றபடி இருந்தனர். மணமகன் பாலாஜியின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த காமுவுக்கு ஒரு புறம் சந்தோஷமும் மறுபுறம் ஏதோ ஒரு பயமும் உறுத்தலும் இருந்து கொண்டே இருந்தது.
இந்த இடத்தில் சேது தானே நிற்க வேண்டும். நாளை இந்த நேரம் திருமணம் முடிந்து இருக்கும். பாவம் சேது வருவாளா மாட்டாளா?........என்று ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தாள்...
பாலாஜி ரம்யாவின் திருமணம் இனிதே நிறைவடைய, பூஜை சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு மருமகளுடன் வண்டியில் ஏறினாள் காமு.
திருமணம் நல்லபடியாக முடிந்தது, சேதுவும் வரவில்லை என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு அவளிடம் வந்தது. சேது வராதது அவளுக்கு ஒரு புறம் ஏமாற்றமாகவும் கோபமாகவும்,மறுபுரம் நிம்மதியாகவும் இருந்தது. திருமண பரபரப்பிலும் அவள் தன் கணவரிடம் “சேது வரலியே சேது வரலையே “,என்று இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டாள். அவரும் சாதாரணமாக “பரவால்ல விடு வேலைய”, பாரு என்று போய் விட்டார். திருமணம் முடிந்து இரண்டு மூன்று தினங்கள் ஆகியும் காமுவுக்கு பதட்டம் குறையவில்லை. காமுவுக்கு உறக்கம் வரவில்லை. அவள் மனம் முழுவதும் சேதுவிமே போய் நின்றது.
காமு, சேது ராணியை தன்னுடைய கணவன் நீலகண்டனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்ய பெண் பார்த்து இருந்தாள். சேது ராணி காமேஸ்வரி யின் ஒன்னு வீட்டு சகோதரி. சேது ராணிக்கு தந்தை இல்லை, தாய் மட்டுமே . அவளுக்கு பிறகு மூன்று பிள்ளைகள். சேது ராணிக்கு படிக்க வேண்டும் என்று கொள்ள ஆசை இருந்தும் என்ன செய்ய தாய்க்கு வசதி இல்லை அவள் தாய் செல்வராணி திருமண வீடுகளில் சமையல் செய்து நல்லது கெட்டதற்கு எடுபிடி வேலை செய்து எப்படியோ நான்கு பிள்ளைகளையும் காப்பாற்றிக் கொண்டு வந்தார்.
சோற்றுக்கு வழி இல்லை . வயதுவந்த பெண்ணை சும்மாவா வீட்டில் வைத்துக் கொண்டு இருக்கவா முடியும்?. எனவே தான் இரண்டாம் தாரம் என்றாலும் பரவாயில்லை என்று திருநீலகண்டனுக்கு மணமுடிக்க சம்மதித்தாள். ஆனால் ..சேது ராணிக்கும் படிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை எஸ்எஸ்எல்சி வரை எப்படியோ கஷ்டப்பட்டு படித்து விட்டாள்.
நீலகண்டன் முதலில் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை. நமக்கு குழந்தை இல்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு குழந்தையை வேண்டுமானால் தத்து எடுத்துக் கொள்ளலாம், இரண்டாவது கல்யாணம் வேண்டாம் என்று பலமுறை சொல்லிவிட்டார்.
“நான் செத்துட்டா நீங்க இரண்டாம் தாரம் கட்டுவீங்க இல்ல... “என்று காமு ஒருநாள் வெடிக்க ...
வேறு வழியின்றி அவரும் ஒத்துக் கொண்டார். சேது ராணி நிலைமையும் அங்கு அதேதான்.
சேது ரொம்பவே பாவம் எதுவுமே ஒட்டவில்லை .ஒரு சின்ன பெண்ணிற்கு துரோகம் செய்து விட்டோமோ என்று நீலகண்டன் அடிக்கடி வருந்துவர்.
சேது ராணி வாயில்லாப்பூச்சி பிள்ளை பெற்றவுடன் ஒதுங்கிக் கொண்டாள்.
நீலகண்டன் சேது ராணியை நன்றாக படிக்க வைத்தார்.
அவள் ஏதேதோ படித்தாள் அரசு வேலைக்கு சென்றாள். அதோடு மதுரைக்கு மாற்றலாகி போனவள் திரும்பி வரவும் இல்லை பிள்ளையைப் பற்றி கேட்கவும் இல்லை ..அவ்வளவுதான் காமேஸ்வரி தெரியுது. சேது ராணி திரும்பி வந்து பிள்ளையை கேட்டால்கொடுக்கவும் மாட்டாள் கொடுக்கும் நிலையிலும் அவள் இல்லை.
திருமணம் நல்லபடியாக முடிந்த மகிழ்ச்சியில் நீலகண்டன் சோபாவில் தலை சாய்த்து படுத்துக் கொண்டார், மகனும் மருமகளும் எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தனர்.
அவருக்கு காரணமே இன்றி சேது நினைவில் வந்தாள்.
சேது ராணியை இரண்டாம் தாரம் கட்டிக் கொண்டார். முதலிரவில் அந்தப் பெண்ணை ஏறெடுத்து பார்க்க திராணியில்லாமல் அமர்ந்திருந்தார். அவள் வெகு நேரம் அழுத படியே அமர்ந்திருந்தாள்.
பிறகு சேதுவே தன் கண்களைத் துடைத்தபடி எழுந்து நின்றாள்.
“அத்தான் என்ன உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லனு எனக்கு நல்லாவே தெரியும்” என்று இழுத்தவாறே நிறுத்தினாள்.
நீலகண்டன் “சேதுவின் முகத்தைப் பாராமல் என்னை மன்னிச்சிடும்மா எல்லாமே உங்க அக்கா தான் அவள் என்ன செத்துப் போய்டுவேன்னு மிரட்டின, எனக்கு வேறவழி தெரியல “ என்று தன் நெற்றி வேர்வை துடைத்தபடியே சொன்னார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேது ராணி ஒரு முடிவுக்கு வந்தது போல்,
“அத்தான் உங்களுக்கே தெரியும் என் குடும்பத்தை பற்றி, எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும்தான் அம்மாவும் பாவம் எடுபிடி வேலை செஞ்சு கஷ்டப்பட்டுதான் வளர்த்தாங்க”,”எப்படியோ கஷ்டப்பட்டு நான் எஸ்எஸ்எல்சி வரைக்கும் படிச்சேன் எனக்கு மேல படிக்கணும்னு ஆசை” என்று நிறுத்தினாள்.......
நீலகண்டன் அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று ஒரு தவிப்புடன் அவளையே பார்த்தார்.
“அக்காவோட சந்தோஷத்திற்காக குழந்தை பெத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் ஆனா என்னோட சந்தோஷத்துக்கு” என்று நிறுத்திவிட்டாள்.
அந்த நொடியே நீலகண்டனுக்கு எல்லாமே விளங்கிவிட்டது.” சரிம்மா உன் இஷ்டப்படியே எல்லாம் நடக்கட்டும் “,என்று கூறி முடித்து விட்டார் திருநீலகண்டன் .ஒரு வருடம் கழித்து சேது ராணி திரு நீலகண்டனுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சேது ராணி குழந்தையிடம் ஒட்டவே இல்லை பால் கொடுப்பதைத் தவிர வேறு எதற்குமே குழந்தையை தொடமாட்டாள் எல்லாமே காமுவே கவனித்துக்கொள்வாள்.
சேது எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பாள். வீட்டிலும் எந்த வேலையும் செய்ய மாட்டாள் யாரிடமும் அதிகம் பேசமாட்டாள்..
பிஎட் முடித்து அரசு பள்ளியில் ஆசிரியர் உத்தியோகத்தில் அமர்ந்து விட்டாள் சேது.
காமுவுக்கு குழந்தை தான் உலகம். அவள் சேதுவை பற்றி எந்தக் கவலையும் படவில்லை. ஆனால், திருநீலகண்டன் அப்படி அல்ல. சேது பற்றி நிறைய கவலைப்படுவார். அவர் வாழ்க்கை என்ன ஆவது?..காமு நிச்சயமாக சேதுவிடம் குழந்தையை ஒட்ட விட மாட்டாள். இந்த நிலையில்தான், திரு நீலகண்டனின் உறவுக்காரப் பையன் முத்துராமன் மறுமணம் செய்ய பெண் தேடுவதாக கேள்விப்பட்டார்.
முத்துராமனை சந்தித்து, தன்னைப் பற்றியும் சேதுவை பற்றியும் நிறைய எடுத்துச் சொன்னார்...முத்துராமனிடம் தனக்கும் சேதுவுக்கும் விவாகரத்து ஆன பத்திரங்களையும் சாட்சியாக காட்டினார். ஆம் இதைத்தான் சேது முதலிரவில் கணவனிடம் குழந்தை பெற்றவுடன் விவாகரத்து செய்து விட வேண்டும் என்றும், தன்னை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாள்.
நீலகண்டனும் இரு பெண்களின் சந்தோஷத்தையும் வாழ்க்கையும் மனதில் கொண்டு சம்மதித்தார். அவரும் குழந்தை பாலாஜி பிறந்து இரண்டு மாதத்திற்குள்ளாகவே சட்டபூர்வமாக அவளை பிரிந்து விட்டார். எனவே தன்னால் எந்தப் பிரச்சினையும் வராது என்று உறுதியாகக் கூறினார் ...சேது ராணி இடமும் கஷ்டப்பட்டு பேசி சம்மதிக்க வைத்தார். வேலையை மதுரைக்கு மாற்றியும் கொடுத்தார், அவரே முன்னின்று இருவருக்கும் திருமணமும் செய்து வைத்தார். முத்துராமனுக்கும் சேது ராணிக்கும் அழகான வயது வந்த பெண் உள்ளாள்.
இது எதுவுமே காமுக்ககும் பாலாஜிக்கும் இதுவரை தெரியாது. இனியும் தெரியாது.