Chriseeda Shinny

Romance Tragedy Thriller

4.5  

Chriseeda Shinny

Romance Tragedy Thriller

எதிர்பாரா காதலர்

எதிர்பாரா காதலர்

6 mins
314


      ஜமைக்கா தீவுக்கு அருகில் ஒரு சிறிய , அழகான மற்றும் செழிப்பான தீவு ஒன்று இருந்தது. மேலிருந்து பார்த்தால் அந்த தீவு இதயத்தின் வடிவில் காட்சி அளிக்கும் . அந்த தீவு ஒரு சுற்றுலாத் தளமாகவும் இருந்தது . பல நாடுகளில் இருந்து எந்த தீவிற்கு சுற்றுலா செல்ல மக்கள் வந்து செல்வார்கள் . 

      தீவின் மையத்தில், வானத்தைத் துளைக்கும், பிரமாண்டமான, பிரமிக்கத்தக்க , அழகான , அருமையான மற்றும் மிகவும் கூர்மையான மலை ஒன்று இருந்தது . அந்த மலைக்கு "ஃபெர்னி சிட்டாடல்" என்ற பெயரும் இருந்தது . அந்த மலை , "பெரணி கோட்டை" என்றும் அழைக்கப்பட்டு வந்தது . இது பல்வேறு வகையான பெரணிகள் மற்றும் பல வகையான தாவரங்கள் , செடி , கொடிகளால் முழுமையாக மூடப்பட்டிருந்ததால் அதற்கு அந்த பெயர் வழங்கப்பட்டது . மற்றும் , அங்கே பல வகையான விலங்கினங்களும் , ஊரும் பிராணிகளும் இருந்தன . பறவைகளின் ஒலியோ ஒரு நிரந்தர அழகிய இசையாக அந்த தீவில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தன .


      தீவு பொதுவான மக்கள்தொகையைக் கொண்டிருந்தது . தீவில் உள்ள மக்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாகவும், முறையானவர்களாகவும் , கடமை உணர்ச்சியோடும் இருந்தனர். அவர்கள் எப்போதும் தங்கள் சுற்றுப்புறங்களைச் சுத்தமாகவும் , நேர்த்தியாகவும் வைத்திருந்தார்கள். அவர்கள் எப்போதும் கடற்கரையில் நல்ல நேரத்தை அனுபவித்து மகிழ்ந்தார்கள், குழந்தைகளும் கடற்கரையில் மணல் வீடு கட்டியும் , கடலில் கால்களை நனைத்தும் , பந்துகளை எறிந்தும் , ஓடிப் பிடித்தும் விளையாடி மகிழ்ந்தனர் . எல்லா நேரத்திலும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் . மேலும் , குறை ஒன்றும் இல்லாது மன நிம்மதியுடன் இருந்தார்கள் . 

 

      அந்த தீவில் , இருபத்து ஐந்து வயதான வில்லியம்ஸ் என்ற இளைஞர் வாழ்ந்து வந்தார் . அவர் மிகவும் அழகானவர், கனிவானவர், மற்றும் அன்பானவரும் கூட . அவர் ஒரு இயற்கை காதலன் என்றும் சொல்லலாம் . தினமும் காலையில் அவர் அந்த உயரமான , அழகான மலையை ஏறி , அதன் உச்சியை அடைந்து , இயற்கையின் அழகை ரசித்துப் போற்றுவார். 


      அந்த மலையின் அடிப்பகுதியில் , நல்ல கட்டிடக் கலை கொண்ட அழகான ஒரு வீடு இருந்தது . இந்த இளைஞர் தினமும் காலையில் நடைக்குச் செல்லும்போது அந்த வீட்டின் கட்டிடக் கலைகளையும் , வீட்டின் அமைப்பையும் போற்றுவார் . அவர் அதை போற்றாத நாளே இல்லை . 


      இந்த அழகான கட்டிடக் கலை கொண்ட வீட்டில் , இருபத்து இரண்டு வயதான சார்லோட் என்ற அழகான பெண் இங்கு வாழ்ந்து வந்தாள் . அவள் பறவைகளை மிகவும் நேசித்தாள் , தினமும் காலையிலும் மாலையிலும் தனது மொட்டை மாடியில் பறவைகளுக்கு தானியங்களை உணவளிப்பாள் .


      அது ஒரு வழக்கமான காலை நேரமாக இருந்தது . அந்த தீவில் இருந்த எல்லோரும் தங்கள் அன்றாட கடமைகளில் மும்முரமாக இருந்தனர் . அந்த நாள் மிக அமைதியாக இருந்தது , தென்றலோ ஜில் என்று குளிர்ச்சியாக வீசிக் கொண்டே இருந்தது . மக்கள் இந்த காலநிலையை அனுபவித்து , மகிழ்ச்சியோடு மழைக்காக ஆவலுடன் காத்திருந்தனர் . ஆனால் , நடக்க இருக்கும் பேரழிவை பற்றி அவர்கள் கொஞ்சமும் உணராது இருந்தார்கள் .


      "திடீரென்று என்ன நடக்கிறது இந்த தீவில் ? வானிலை மாற்றத்தின் காரணம் தான் என்ன ? "என்று வில்லியம்ஸ் யோசித்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு ஆபத்தான நிகழ்வு அருகில் வரப்போவதை அவர் உணர்ந்தார் . அந்த தீவில் இருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் அசாதாரண நடத்தையையும் அவரால் உணர முடிந்தது , அவர் அதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார் . பின்னர் , அவர் இந்த அசாதாரண நடத்தைக்கு என்ன காரணம் என்று சிந்தித்துக் கொண்டே மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார் .


      அவர் கீழே நடந்து செல்லும்போது கால்கள் நடுங்குவதையும் தடுமாறுவதையும் உணர்ந்தார் . அது அவருடைய சோர்வின் காரணமாக அவ்வாறு நடுங்குகிறது என்று அவர் நினைத்தார் . ஆனால் , அவர் சுற்றிப் பார்த்தபோது கட்டிடங்கள் சரிந்து , விழுந்து கொண்டிருந்தன, சில கட்டிடங்கள் திடீர் என்று மண்ணுக்குள் சென்று புதைந்தன . சில கட்டிடங்கள் இரண்டக பிளந்து இடிந்து விழுந்தன . சாலைகளில் விரிசல் ஏற்பட்டது . 


      அவர் அதிர்ச்சி அடைந்து நிகழ்வதை பார்த்துக் கொண்டே இருந்தார் . பின்பு , அது பூகம்பம் என்று அவர் உணர்ந்தார் . எனவே மக்களிடம் அங்கிருக்கும் வீடுகளுக்கு வெளியே வந்து தங்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு எச்சரித்தார் . அவரும் பலருக்கு உதவி செய்து , அவர்களை மீட்டார். 


      எல்லோரும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள் . அவர்களில் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்ததால் மக்கள் அழுதுக் கொண்டிருந்தார்கள் . மக்களின் அழுகை மிகவும் சத்தமாக இருந்தது , எங்கு பார்த்தாலும் அலறலும் , அழுகையுமாய் இருந்தது . 


      சார்லோடோ அவள் வீட்டு துருத்துமாடத்தின் நுனியில் , பயத்தால் கண்ணை மூடிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த வில்லியம்ஸ் அவளைக் காப்பாற்ற முடிவு செய்தார் . அவர் அவளைப் பிடிக்கும்படி கைகளை விட்டுவிட்டு கீழே விழும்படி கேட்டார் . அவர்கள் ஒருவரை ஒருவர் இதுவரை சந்தித்து பேசியதில்லை என்பதால் , அவள் அவரை நம்பவில்லை , அவர் அவளுக்கு அறிமுகம் இல்லாதவர் என்பதால் நம்புவதற்கும் மிகவும் பயந்தாள் . தன்னையும் மக்களையும் காப்பாற்றும்படி அவள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். 


      இப்போது, கடற்கரையில் இருந்து மக்கள் நிலத்தை நோக்கி விரைந்து ஓடிக் கொண்டிருந்தனர். மேலும் , சார்லோட் ஒரு பெரிய அதிர்ச்சியில் இருந்தாள் . அவளுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் அது ஒரு பெரிய அதிர்ச்சிதான் . கடல் அலைகள் பெரிதாக எழுந்து தீவை விழுங்குவது போல தீவை நோக்கி பாய்ந்தன . அந்த அலைகள் அந்த அழகிய தீவை அழிக்க போதுமானதாக இருந்தன . ஆமாம், அவை சுனாமி அலைகளே ! 


      அந்த சுனாமி அலைகள் அவருக்குப் பின்னால் விரைந்து வேகமாக வருவதை அவள் கண்டாள் . அதனால் , அவள் அவரை ஓடி அவரைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு அவள் சொன்னாள். ஆனால் , அவரால் அவளை தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை . அதே நேரத்தில் , துரதிர்ஷ்டவசமாக , அவள் கைகள் நழுவி அவள் கீழே விழுந்தாள் . அவள் இறந்துவிடுவாள் என்று அவள் நினைத்தாள் . ஆனால் , வில்லியம்ஸ் அவளைப் பிடித்து காப்பாற்றினார் . 


      அவள் கண்களைத் திறந்தபோது , அவர் , அவள் கண்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் . அவளது கயல் போன்ற அழகிய விழிகள் , அவரை பிரமிக்க வைத்தன. இவ்வளவு அழகான கண்களை அவர் இதற்கு முன்பு பார்த்ததில்லை . அவளும் , இத்தகைய அழகான ஒருவரை இதுவரை அவள் காணாததால் , அவளும் அவரைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் . அப்பொது தான் ஒரே தாளத்தில் அவர்களது இதயங்கள் துடிக்க ஆரம்பித்தன . 


      எதிர்பாராத விதமாக, அவர்களுக்கு ஏற்பட்ட ஈர்ப்பால் அவர்கள் ஒருவருக்கொருவர் காதலில் விழுந்து கொண்டிருந்தார்கள் . பின்னர் , அவள் கண்களை சிமிட்டிக் கொண்டு திரும்பி பார்த்தாள் . அவள் பின்னால் திரும்பி பார்த்தபோது , சுனாமி அலைகள் அவர்களை நோக்கி விரைந்து வந்துக் கொண்டிருந்தன . அதனால் அவள் பயத்துடன் அவர் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு விரைத்து தன்னுடன் ஓடி வருமாறு சொன்னாள் . அவர்கள் மலையில் ஏறி தப்பித்துவிடலாம் என்று நினைத்து வேகமாக மலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். 


      சார்லோட்டின் கைகள் காயமடைந்து , இரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவளால் அவ்வளவு வேகமாக ஏற முடியவில்லை. எனவே , வில்லாம்ஸ் அவள் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு ஏற உதவி செய்தார் . இந்த பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள் . மன தைரியத்தொடும் , நம்பிக்கையோடும் இருந்தனர் . ஆனால் , சுனாமி அலைகளோ ,  அவர்களை விட வேகமாக இருந்தன . இப்போது , அவர்கள் தங்கள் நம்பிக்கையெல்லாம் இழந்தனர் . 


   அவள் , இறந்து விடுவோமோ என்ற பயத்தில் கண்களை மூடிக் கொண்டு , அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் . அவன் அவளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு , " உன் கண்களைப் பார்த்தபோது நான் உன்னோடு காதலில் விழுந்துவிட்டேன் என்று நினைக்கிறேன் " என்று கிசுகிசுத்தான் . அவள் , " நானும் தங்களை விரும்புகிறேன் என்ற மந்திர வார்த்தைகளை கூட சொல்ல இதுபோன்ற ஒரு சாகச தருணம் இனி இருக்காது " என்று அவருக்கு பதிலளித்தாள் . அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குமூலம் அளித்தனர் . 


      இப்போது சுனாமி அலைகள் அவர்களைத் தாக்கி , அவர்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தன . அந்த தண்ணீரில் மர கட்டைகள் , வீட்டின் கூரைகள் , செல்வங்கள் , படகுகள், குப்பைகள் , மரங்கள் , செடி , கொடிகள் , மக்கள் , குழந்தைகள் என எல்லாம் அடித்து வரப்பட்டன . ஆனாலும் , அவர்கள் ஒருவருக்கொருவர் கையை விடவில்லை . அவர்கள் கைகளை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள் . இருவரும் தண்ணீரில் மூழ்க , அவர்களால் சுவாசிக்க முடியவில்லை . எனவே , வில்லியம்ஸ் தண்ணீருக்கு அடியில் சுவாசிக்க அவரது மூச்சை அவளுக்குக் கொடுத்தார் . 


      அவர்கள் அந்த தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு நீரின் அழுத்தம் அதிகமாக இருந்தது . அந்த தீவில் உள்ள அனைவரும் மூழ்கித் தண்ணிரில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். வில்லியம்ஸ் , சார்லோட்டை அவருடன் நெருக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு , எப்படியாவது நீந்தி வெளியே வர வேண்டும் என்று முயற்சி செய்துக் கொண்டிருந்தார். ஆனால் , அவள் அதிக நேரம் தண்ணிரில் இருந்ததால் மயக்கம் அடைந்தாள் . வில்லியம்ஸ் கூட தன் மூச்சை இழந்து கொண்டிருந்தார் . ஆனால் , அதிர்ஷ்டவசமாக , வில்லியம்ஸ் பெரணிகளைப் பிடித்துக் கொண்டார் . அவருடைய கடின முயற்சியின் பலனாக , அவரால் தண்ணீரிலிருந்து எளிதில் வெளியே வர முடிந்தது . அவர் சார்லோட்டை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து , அவளுக்கு நனவைக் கொண்டுவர முயன்றார் . ஆனால் , அனைத்தும் வீணாக , அவள் இன்னும் அதே மயக்க நிலையில் இருந்தாள் . பின்னர் , அவர் , அவளுக்காக சில முதலுதவிகளைச் செய்தார் .   


      இப்போது , அவள் மீண்டும் சுயநினைவுக்கு வந்தாள். அவள் உயிரோடு இருப்பதை உணர்ந்து , அழுதுக் கொண்டே அவனை இறுக்கமாக கட்டி அணைத்து , முத்தமிட்டாள் . பின்பு , அங்கே தவிக்கும் மக்களுக்கு உதவ நினைத்து , அவர்கள் சுற்றிப் பார்த்தார்கள் . அப்போது , அவர்களால் எல்லா இடங்களிலும் தண்ணீரை மட்டுமே பார்க்க முடிந்தது . 

      அந்த தீவோ நீரின் கீழ் புதைத்து , காணாமல் போனது. சிறிய குழந்தைகள், பெரியவர்கள், விலங்குகள் , ஊரும் பிராணிகள் மற்றும் எல்லோரும் நீரில் மூழ்கி இறந்தனர் . இருவரது கண்களிலும் , மளமள என்று கண்ணீர் வந்தன . கண்ணீரை நிறுத்த முடியாத அளவிற்கு அழுதார்கள் . இந்த பேரழிவில் இருந்து அவர்கள் தப்பித்தாலும், அவர்கள் , தங்கள் மக்களையும் , தங்களுக்கு அன்பானவர்களையும் , அழகான , செழிப்பான அந்த தீவையும் இழந்ததால் , அவர்கள் சோர்ந்து போனார்கள் , மன வருத்தத்தோடு , கதறி அழுதார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்ததன் காரணத்தினால் மட்டுமே அவர்கள் இருவரும் உயிருடன் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள் . எதிர்பாராத சூழ்நிலையில் , எதிர்பாராத நேரத்தில் , எதிர்பாராத காதல் தோன்றி , எதிர்பாராத காதலர் கிடைத்து இருப்பதற்கு நன்றாக உணர்ந்தார்கள் . 


Rate this content
Log in

Similar tamil story from Romance