என்னிடம் சொல்லாமல் வந்தவன்
என்னிடம் சொல்லாமல் வந்தவன்


பறிபோன வேலை... கொரோனோ நோயாளி கிண்டல்!’ - கோவையில் விபரீத முடிவெடுத்த ஒடிசா இளைஞர்
பணியில் இருந்து நீக்கப்பட்டதாலும் கொரோனா நோயாளி என்று கிண்டல் செய்ததாலும் கோவையில் ஒடிசா மாநில இளைஞர் தற்கொலை செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொடர்ந்து 50 நாள்களைக் கடந்த ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டிருந்தாலும், ஊரடங்கு தினக் கூலிகள் வாழ்வில் வறுமையைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. முக்கியமாக நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளிகள், பணியும் இல்லாமல், சொந்த ஊர்களுக்கும் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கோவையில், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் அவர்கள் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் மலாங்கீர் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரா போய். இவரின் மகன்கள் சனார்தன் போய், பன்சானன் போய். இவர்கள் இருவரும் கோவை கீரணத்தம் பகுதியில் தங்கியிருந்தபடி ஓர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், பன்சானன் திடீரென்று காணாமல் போயுள்ளார். இதையடுத்து, பன்சானனைக் காணவில்லை என்று அவரின் சகோதரர் சனார்தன் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
இதனிடையே, சத்திரோட்டில் சாலையோரம் உள்ள மரத்தில் ஓர் இளைஞர் பிணமாகத் தொங்குவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, போலீஸார் நடத்திய விசாரணையில் அது பன்சானின் உடல் என்பது உறுதியானது.
இதுகுறித்து பன்சானனின் சகோதரர் சனார்தன், ``லாக்டெளன் காரணமாக, பன்சானன் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து அவனை நீக்கிவிட்டனர். இதனால், மன வருத்தத்தில் இருந்தான். சிலர், அவனுக்கு கொரோனா வந்துவிட்டது. அதனால்தான் வேலையில் இருந்து தூக்கிவிட்டனர் என்று நேரடியாகவே கிண்டல் செய்துள்ளனர். இந்தச் சம்பவங்களால் அவன் மிகவும் வேதனையில் இருந்தான். ஒருகட்டத்தில் தனக்கு நிஜமாகவே கொரோனோ வந்துவிட்டதோ என்று நினைத்துவிட்டான்.
இதன் காரணமாக ஊருக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினான். ஆனால், லாக்டௌன் காரணமாக அது முடியவில்லை. என்னிடம் சொல்லாமல் வந்தவன், இப்படியொரு முடிவை எடுத்துவிட்டான்” என்றார். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு பன்சானன் உடல் கோவையிலேயே தகனம் செய்யப்பட்டது. லாக்டெளன் காரணமாக, அவர்களின் பெற்றோரால் கோவை வர முடியவில்லை.