Kavya Sheela

Abstract Inspirational

4.5  

Kavya Sheela

Abstract Inspirational

எழுத்தியல்

எழுத்தியல்

3 mins
518


ஒவ்வொரு மனிதனும் ஒரு சில காலகட்டங்களிலும், ஒரு சில சூழ்நிலையிலும் எழுத தொடங்குகிறான். கவிதைகளோ, கட்டுரைகளோ, கதைகளோ அல்லது கிறுக்கல்களாக கூட இருக்கக்கூடும். சிலரிடம் அவர் எழுதிய கவிதையைக் காட்டி, இந்த கவிதை எப்போது எழுதியது, எதற்கு எழுதினீர்கள் என்று கேட்டால், ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு சூழ்நிலையை கூறுவர். அச்சூழ்நிலை சந்தோஷமானதாக அல்லது சோகமானதாகவோ இருக்கலாம்.


சந்தோஷத்தில் எழுதுபவர்கள் சிலர், துக்கத்தில் எழுதுபவர்கள் சிலர். ஆனால் காதலின் உணர்வை வெளிப்படுத்துவதற்காக எழுதுபவர்கள் பெரும்பாலானோர். தன் உணர்வை வெளிப்படுத்த முடியாமல் இருப்பவர் பலரும் இப்படி எழுதியே உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.


உங்களில் சிலருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கக்கூடும். அதற்கு காரணமாக சிலர் தன் வாழ்க்கை நினைவுகளை பதிவுச் செய்துக் கொள்ள எடுத்த முயற்சியாக இருக்கும். சிலர் டைரி எழுத மாட்டார்கள், ஏன்னென்றால் யாரும் தன் தனிப்பட்ட விஷயங்களை படித்துவிடக் கூடாது என்பதற்காக. இப்படிப்பட்டவர்கள் எதையும் மறைக்காமல் எழுதும் பழக்கம் இருப்பவர்களாக இருக்கக் கூடும். இதில் நானும் ஒருவள்.


நான் ஒருவரிடம், உங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறதா? என்று கேட்டேன். அவரின் பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. யாரும் அப்படிச் சொல்லி நான் கேட்டதில்லை. தன்னுடைய கஷ்டங்களை மட்டும் எழுதும் அவர், குறிப்பாக தன்னை ஏமாற்றியவர்கள், துன்புறுத்தியவர்கள் பற்றியே அதிகம் எழுதுவராம். அவர் தனிமையில் இருக்கும் தருணத்தில், அதை படித்து, தன்னை ஒருவர் எப்படி காயப்படுத்தி இருக்கிறார் என்பதை ஞாபகம்படுத்திக் கொள்ளவராம். பகையை எப்போதும் மறக்காமல் மனதிலேயே வைத்துக்கொள்ளும் எண்ணம் உடையவர் அவர் என்பது இதிலிருந்து கணிக்கப்படுகிறது. 


இப்படி சிலரின் பதில்கள் ஆச்சரியத்தை தந்தாலும், பலரின் பதில்கள் ஒன்றாகவே இருக்கிறது. தன்னுடைய காதலன்/காதலியிடம் காதலைச் சொல்ல முடியாத பலரும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத பலரும் அதனை கவிதையாய் எழுதுகின்றனர். அவரிடம் அவர் கவிதைகளைப் பற்றிக் கேட்டால், இது அவளை முதன்முதலில் பார்த்த அன்று எழுதியது, அவளிடம் முதல் நாள் பேசிய அன்று எழுதியது, எங்கள் முதல் முத்தத்தின் தினத்தில் எழுதியது என்று பல சூழ்நிலைகளை கூறுவார்.


இன்னொருவர் கூறிய பதில். 8 வருடங்கள் கழித்து, அவள் தன்னுடன் இல்லாத நிலையிலும், முதல் நாள் அவளை ப் பார்த்த தினத்தன்று தோன்றிய எண்ணங்களை இப்போது எழுதினாராம். இவரின் சூழ்நிலை சற்றே மறுதலானது. இத்தனை வருடங்கள் கழித்தும் அந்த நினைவுகள், உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தும் மனதில் அப்படியே புத்தம் புதியதாய் இருப்பதானால் அவரால் இதனை எழுத முடிகிறது. அப்படிப்பட்ட நினைவுகள் அவரின் வாழ்வின் பொக்கிஷங்கள். 


இப்போது ஒருவரைப் பார்த்து, அவரைப் பற்றி எழுதுவது பொதுவான ஒன்று தான். ஆனால், இத்தனை வருடம் கழித்தும், அவரால் அதே புத்துணர்ச்சியோடு அப்பெண்ணை எழுத முடியும் என்றால், அவரின் காதல் அவர் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்பது விளங்குகிறது. அவர் மனதை அந்தளவுக்கு பாதித்திருக்கிறாள் அப்பெண்.


ஒரு சிலர், சிலரின் தூண்டுதலால் எழுதுவர். என் தமிழாசிரியர் டைரி எழுதச் சொன்னார், அதனால் ஒரு மாதம் எழுதினேன் என்று கூறுவர். இவர்களால் சில மாதங்கள் மட்டுமே எழுத முடியும். சிலரின் வற்புறுத்தலால் எழுதுபவர்கள் கடமை என்று நினைத்தே எழுதுகின்றனர். ஆனால் இதையே தொடர்ந்து விருப்பத்தோடு எழுதுபவர்களும் சிலர். 


என் கவிதைகள் பெரும்பாலும் காதல், காதல் வலி, காதல் பிரிவு என்று இதைப் பற்றியே சுற்றி சுற்றி வரும். பலர் என்னைப் பார்த்து கேட்கும் கேள்வி “நீ யாரையாவது காதலிக்கிறாயா?” என்றே இருக்கும். ஆனால் இதற்கான பதில் இல்லை என்பதே. “அப்புறம் எப்படி காதலை பற்றி இப்படி எழுதுகிறீர்கள்?” என்று கேட்பவரும் சிலர். எனக்கு காதல் படங்கள் பிடிக்கும். அப்படங்களை பார்க்கும் போது என்னையே அப்படத்தின் கதாநாயகியாக எண்ணிக் கொள்வேன். படத்தின் தாக்கத்தில் அன்றே 5 கவிதைகளை எழுதி விடுவேன். எனக்கு பிடித்த நடிகர் விஷாலை நினைத்தும் எழுதிய கவிதைகள் பல. 


யாராவது என்னை திட்டிவிட்டால், அதே துக்க மனதோடு என் பேனாவைத் தேடுவேன். ஒரு வரியெனும் எழுதிவிட்டால் என் மனது லேசாகிவிடும். ஒருவர் என்னிடம் அவரின் 23 வயதில் எழுதிய கவிதைகளை பற்றிக் கூறினார். அதைக் கேட்டு அங்கேயே நான் சிலையாய் நின்றது உண்மை. அப்போது அவருக்கிருந்த பிரச்சினைகளினால் அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும் தருணம். அடுத்த நொடி தன் டைரியை எடுத்து 10 பக்கங்களுக்கு தற்கொலை பற்றியே கவிதைகளை எழுதுவாராம். அடுத்த 15 நிமிடத்தில் அவ்வெண்ணம் மாறி தன் வேலைகளை புத்துணர்ச்சியோடு செய்வாராம். 


நாம் எழுதுவது நம் மனதை எந்த அளவுக்கு மாற்றுகிறது என்பதை நாம் இதில் இருந்து புரிந்துக்கொள்ளலாம். நம் எதிர்மறையான அல்லது கேட்ட எண்ணங்களைக் கூட மாற்றி நம்மை பலப்படுத்துகிறது. 


சிலரின் கவிதைகளைப் படித்து தானும் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு வருவதுண்டு. என்னிடமே பலர் கேட்டதுண்டு. நானும் எழுத வேண்டும் எனக்கும் சொல்லிக்கொடுங்கள் என்று. நீங்கள் எது எழுதினாலும் அல்லது கிருக்கினாலும் அது உங்களின் கவிதை தான் என்று கூறுவேன்.


நீங்கள் எழுதுவது கவிதைகளாகவோ கட்டுரைகளாகவோ கதைகளாகவோ தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. நினைத்ததை எழுதுங்கள், பிறரின் மனம் புண்படாதபடி. நிறைய எழுதுங்கள், உங்களின் வாழ்க்கையையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். நான் இதுவரை குறிப்பிட்ட விஷயங்கள் உங்களின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக நடந்திருக்கும். அப்படியில்லை என்றல் இனி நடக்க என் வாழ்த்துக்கள்!!!


              எழுதுவோம்!!! எழுத்துக்களில் வாழ்வோம்!!!


Rate this content
Log in

Similar tamil story from Abstract